சென்னை: ஆட்சி அதிகாரத்தில் தமிழகத்திலும் மத்தியிலும் கருணாநிதி குடும்பம் மட்டும்தான் வரமுடியும். கருணாநிதி குடும்பம் மட்டும்தானா, என்னுடைய குடும்பத்திலும் வாரிசு இருக்க வேண்டும் என்பதற்காக நேரு தன் மகனை எம்பியாக்கினார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர், துறையூர் தொகுதிகளையடுத்து முசிறி பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த ஏராளமான மக்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் மக்கள் ஏற்றம் பெற்றார்கள், தமிழகம் ஏற்றம் பெற்றது. திமுகவுக்கு வீட்டு மக்கள் தான் முக்கியம். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை அடிமைபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக ஜனநாயகமுள்ள கட்சி, விசுவாசமாக உழைத்தால் சாதாரண தொண்டன் கூட உச்சப் பதவிக்கு வரமுடியும். திமுகவில் வர முடியுமா? கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே வரமுடியும். நான் படிப்படியாக பொதுச்செயலாளராக உயர்ந்தேன். இதுதான் அதிமுக. மக்களை, உழைப்பாளர்களை மதிக்கக்கூடிய கட்சி.
திமுகவில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என மூவரும் முக்கிய பதவிகளை எடுத்துக்கொண்டனர். ஆட்சி அதிகாரத்தில் தமிழகத்திலும் மத்தியிலும் கருணாநிதி குடும்பம் மட்டும்தான் வரமுடியும். அங்கே அப்படி என்றால், இங்கு அமைச்சர் நேருவும் அப்படித்தான். கருணாநிதி குடும்பம் மட்டும்தானா, என்னுடைய குடும்பத்திலும் வாரிசு இருக்க வேண்டும் என்பதற்காக நேரு தன் மகனை எம்பியாக்கினார்.
ஆனால் அதிமுகவில் பெயின்டராகவும், டாஸ்மாக் பணியாளராகவும் இருந்தவர்களுக்கு எம்.எல்.ஏ. பதவி கொடுத்தோம். மதம், ஜாதி அடிப்படையில் அதிமுக செயல்படுவதில்லை. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. அமைச்சர் ரகுபதி பேட்டி கொடுக்கிறார். ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதல்வராக வருவாராம். 2026 தேர்தலில் கருணாநிதி குடும்பத்துக்கு இடமில்லை, சம்மட்டி அடி கிடைக்கும்.
குடும்பத்துக்கு வாய்ப்பு ஸ்டாலினுடன் முடிந்துவிட்டது. அதிமுகதான் ரகுபதிக்கு அடையாளம் கொடுத்தது. இங்கிருந்து போன ரகுபதி இன்று கொத்தடிமை போல அறிக்கையை விஷமத்தனமாகக் கக்குகிறார். இந்த தேர்தலுடன் திமுக கதை முடிந்துவிடும்.
முசிறியில் விவசாயம் சார்ந்த பணிகள்தான் அதிகம். ஒரு பகுதி மேடானது, ஒரு பகுதி வயல் பகுதி. விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகளுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். தொடக்க வேளாண் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டது. அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.
விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். இன்று ஷிப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதால் இரவு வேளையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இந்த பகுதியில் தடுப்பணை கேட்டீர்கள், அதிமுக ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது, அதை திமுக ரத்துசெய்துவிட்டது, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அது நிறைவேற்றப்படும்.
50 ஆண்டு கால காவிரி நீர் பிரச்னையை உச்சநீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொடுத்தோம். விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம், முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை கொடுத்தோம்.
கரோனா காலத்தில் விலை மதிக்கமுடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். நோயைப் பற்றி எதுவுமே தெரியாமல் நல்ல முறையில் சிகிச்சை கொடுத்தோம். அச்சமயம் பாரத பிரதமர் மோடி எல்லா முதல்வர்களிடம் காணொளி காட்சி மூலம் பேசியபோது, தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது, தமிழ்நாட்டைப் பின்பற்றுங்கள் என்று கூறினார்.
கரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என 7 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு கொடுத்தோம். தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். கரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல்பாஸ் போட்டுக்கொடுத்தோம்.
கைத்தறி நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும் மானியம் கொடுத்தோம். பசுமை வீடுகள், கைத்தறி ஆதரவு திட்டம், கைத்தறி துணிகள் தேக்கமடைந்தபோது 350 கோடி ரூபாய் மானியம் கொடுத்தோம். கோரைப்பாய் உற்பத்தி இங்கு அதிகமாக உள்ளது, கைத்தறி நெசவாளர்களுக்கு மின் இணைப்புக்கு மானியம் கொடுப்பதுபோல கோரைப்பாய் நெசவாளர்களுக்கும் மின் இணைப்பு யூனிட்டுக்கு மானியம் கொடுப்போம்.
திமுக அரசு ஐந்தாண்டு முடியும் தருவாயில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. கடன் வாங்கியதில்தான் திமுக சாதனை படைத்திருக்கிறது. 73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டு கால கடன் சுமை அதிகம். நம்மை ஸ்டாலின் கடனாளியாக்கிவிட்டார். வரி போட்டு தான் இந்த கடனை அடைப்பார்கள். கரோனாவில் எதுவுமே இல்லாமல் அரசு நடத்தினோம், விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டோம். திமுக ஆட்சியில் எந்த சிக்கல்களும் இல்லை. ஆனாலும் தொடர்ந்து கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. ஸ்டாலின் திறமையற்ற முதல்வர் என்பதற்கு இதுவே சான்று.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டுவிட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. கேஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ.100 கொடுப்பதாகச் சொன்னார்கள் கொடுக்கவில்லை.
மாணவர்கள் பெற்ற கல்வி கடன் ரத்துசெய்யப்படும் என்றனர். ரத்துசெய்யவில்லை. ரேஷனில் சர்க்கரை ஒரு கிலோ கூடுதலாகக் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை. பெட்ரோ டீசல் விலை குறைக்கப்படும் என்றனர். குறைக்கவில்லை. ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், புத்தகப்பை, சைக்கிள் கொடுத்தோம்.
விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மாவின் எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் ரூ.7300 கோடி நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டம் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
ஏழைப் பெண்களின் பொருளாதாரச் சூழலால் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். 6 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி வழங்கப்படும்.
மகளிர் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு சென்றுவர ஏதுவாக அம்மா இரு சக்கர வாகன திட்டம் மூலமாக சுமார் 3 லட்சம் பேருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் கொடுத்தோம். இந்த திட்டத்தையும் திமுக அரசு ரத்துசெய்துவிட்டது. உங்கள் ஆதரவினால் அதிமுக அரசு மீண்டும் அமையும்போது இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். முசிறி தொகுதியில் மட்டும் 9 கிளினிக் தொடங்கினோம். திமுக அரசு ஏழைகளுக்கான சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து அதனை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.
ஏழை தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் என்று இப்போது நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். வீடுவீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால், அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருப்பதையே முதல்வர் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். இன்னும் 8 மாதத்தில் ஆட்சி போகப்போவுது, அதற்குள் இவற்றை நிறைவேற்ற முடியுமா?
சதுரங்க வேட்டை படத்தின் வசனம் போல ஆசையைத் தூண்டி. மக்களை ஏமாற்றி, வாக்குகளைப் பெற்று மீண்டும் அட்சிக்கு வரவே இப்படி விளம்பரம் செய்கிறார்கள். ஏற்கனவே ஒருமுறை ஏமாந்ததால் துன்பத்தை அனுபவித்து வருகிறீர்கள், மீண்டும் ஏமாந்துவிடாதீர்கள்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது புகார் பெட்டி திட்டம் கொண்டுவந்து மனுக்களை வாங்கி, பிரச்சினைகளைத் தீர்க்கிறேன் என்றார், தீர்த்தாரா? அப்படி தீர்த்திருந்தால் இப்போது இது எதற்காக? ஏற்கனவே மக்கள் மனு கொடுத்துவிட்டார்களே…?
முசிறி தொகுதியில் அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களை நிறைவேற்றினோம், முசிறி நகரத்தில் 23 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவந்தோம். அதிமுக ஆட்சியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் கொடுத்தோம், இப்போது திமுக ஆட்சியில் 7 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் தினந்தோறும் குடிநீர் வழங்கப்படும்.
142 தொட்டியம் ஒன்றியத்தில் விடுபட்ட 132 குக்கிராமங்களுக்கு 42 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. தாத்தையார்பேட்டையில் கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவந்தோம், முசிறியில் ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்றம், வட்டார போக்குவரத்துக் கழகம், தொட்டியத்தில் அரசு கல்லூரி அமைக்கப்பட்டது, முசிறி குளித்தலை காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முனைந்தோம், அதை திமுக அரசு கிடப்பில் போட்டது, மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது தடுப்பணை கட்டப்படும். முசிறி சமயபுரம் கைகாட்டி வரை நான்குவழிச்சாலை கேட்டிருக்கிறீர்கள்.
அதுவும் புளியஞ்சோலையில் இருந்து ஐயாற்றில் செல்லும் நீரை மகாதேவி ஏரி, கலிங்கப்பட்டி ஏரி, தாபேட்டை ஏரியில் விடுவதற்கு கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். ரெட்டியார்பட்டி முதல் ஆராய்ச்சி சிட்டி வரை வாய்க்கால் தூர் வாரக் கேட்டிருக்கிறீர்கள். முசிறியில் பாதாள சாக்கடை திட்டம் கேட்டிருக்கீங்க, இவை எல்லாம் நிறைவேற்றித் தரப்படும். இவற்றை நிறைவேற்றித்தர அதிமுக அரசுக்கு வாய்ப்பு தரவேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என்று தெரிவித்துள்ளார்.