0
பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தை முன்னின்று நடத்தவுள்ள வரவேற்பு நாடுகளான இலங்கை, இந்தியாவுடன் 8 நாடுகள் சுப்பர் சுற்றுக்கான முன்கூட்டிய நிரல்படுத்தலில் பெயரிடப்பட்டுள்ளன.
உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதிபெற்றுள்ள 20 அணிகளுக்கான தரிவரசையை ஐசிசி வெயிட்டுள்ளதுடன் ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழு நிலைகள் மற்றும் போட்டி அட்டவணை ஆகியன ஐசிசி தலைவர் ஜெய் ஷாவின் பிரசன்னத்துடன் மும்பையில் நேற்று உத்தியோகபூர்மாக வெளியிடப்பட்டது.


சர்வதேச ரி20 கிரிக்கெட்டுக்கான அணிகள் தரவரிசையில் நடப்பு சம்பியன் இந்தியா (272 புள்ளிகள்), முன்னாள் சம்பியன்களான அவுஸ்திரேலியா (267) மற்றும் இங்கிலாந்து (258), நியூஸிலாந்து (251), தென் ஆபிரிக்கா (240), முன்னாள் சம்பியன்களான மேற்கிந்தியத் தீவுகள் (236), பாகிஸ்தான் (235), மற்றும் இலங்கை (228) ஆகியன முதல் 8 இடங்களில் இருக்கின்றன.
இதற்கு அமைய இந்த அணிகள் சுப்பர் சுற்றுக்கு தெரிவானால் X குழுவில் இந்தியா (X 1), அவுஸ்திரேலியா (X 2), மேற்கிந்தியத் தீவுகள் (X 3), தென் ஆபிரிக்கா (X 4) ஆகியனவும் லு குழுவில் இங்கிலாந்து (Y 1), நியூஸிலாந்து (Y 2), பாகிஸ்தான் (Y 3), இலங்கை (Y 4) ஆகியனவும் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அணிகளை விட வேறு அணிகள் சுப்பர் சுற்றுக்கு தெரிவானால் வெளியேறும் அணிகளின் இடங்களை அவை நிரப்பும்.


ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் மற்றைய 12 அணிகளின் தரவரிசை நிலைகள் வருமாறு:
பங்களாதேஷ் (223 புள்ளிகள் 9ஆம் இடம்), ஆப்கானிஸ்தான் (220 புள்ளிகள் 10ஆம் இடம்), அயர்லாந்து (201 புள்ளிகள் 11ஆம் இடம்), ஸிம்பாப்வே (200 புள்ளிகள் 12ஆம் இடம்), நெதர்லாந்து (182 புள்ளிகள் 13ஆம் இடம்), நமிபியா 181 புள்ளிகள் 15ஆம் இடம்), ஐக்கிய அரபு இராச்சியம் (176 புள்ளிகள் 16ஆம் இடம்), நேபாளம் (176 புள்ளிகள் 17ஆம் இடம்), ஐக்கிய அமெரிக்கா (175 புள்ளிகள் 18ஆம் இடம்), கனடா (154 புள்ளிகள் 19ஆம் இடம்), ஓமான் (154 புள்ளிகள் 20ஆம் இடம்), இத்தாலி (115 புள்ளிகள் 28ஆம் இடம்)
பத்தாவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் இலங்கை, பாகிஸ்தான் ஆகியவற்றின் சகல போட்டிகளும் கொழும்பிலும் கண்டியிலும் நடைபெறும்.
ஒருவேளை, இந்த இரண்டு அணிகளும் இரண்டு அரை இறுதிகளுக்கு தெரிவானால் பாகிஸ்தானின் அரை இறுதிப் போட்டி இலங்கையிலும் வேறு ஒரு நாட்டுடனான இலங்கையின் அரை இறுதிப் போட்டி இந்தியாவிலும் நடைபெறும்.
பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தெரிவானால் அது இந்தியாவுடனான போட்டியாக இருந்தாலும் அப் போட்டி கொழும்பில் நடைபெறும்.
இலங்கையும் வேறு ஒரு நாடும் இறுதிப் போட்டிக்கு தெரிவானல் அப் போட்டியும் பெரும்பாலும் கொழும்பில் நடைபெறும்.
இந்தியாவும் வேறு ஒரு நாடும் அரை இறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் தெரிவானால் அந்த இரண்டு போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும்.