சென்னை: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக மக்களுக்கான வளர்ச்சியை, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தடுத்து வருகின்றனர்.” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று (ஏப்.29) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக மக்களுக்கான வளர்ச்சியை, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தடுத்து வருகின்றனர்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த 9-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு என்றால், இவர்கள் யாருடைய பணத்தை சுரண்டினார்கள்? அந்தப் பணம் தமிழக மக்களுடையது.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் நிதி வரவில்லை என்று கூறுகிறார்கள். இவர்கள் சுருட்டிய பணம் மத்திய அரசிடம் கேட்பதைவிட அதிகமானதாக இருக்கும். அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வருவது எதற்காக என்றால், மக்களின் பணத்தை சுரண்டுவதற்காகத்தான். தங்களுடைய தோல்விகளை மறைப்பதற்காகவே முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் மீது குற்றம்சாட்டுகிறார்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading அதில் இன்னும் சாதனைகளை படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும்.” என்று கூறியிருந்தார்.