13
இந்த வானம் சிவக்கும் வசந்த விடியலில்
பட்டாம் பூச்சிகள் காற்றில் எழுதும்
புத்தம் புதிய சேதிதான் என்ன?
ஏன் எங்கள் தீவகம் குதூகலிக்கிறது?
ஏன் வடக்கு கிழக்கும் தெற்கு மேற்கும்
தேயிலை மலைகளும் களி கொண்டாடுது?
ஏன் எங்கள் கடல்கள் வெற்றி முழங்குது?
காலம் காலமாய்
வடக்கிலும் தெற்கிலும் மலைகளிலும்
வீழ்ந்த எம் புதல்வர்கள்
உயிர்த்தெழுகிறார்களாம்.
எல்லோரும் சொல்கிறார்..
1810 வசந்தத்தில் புலியென வீழ்ந்த
மாவீரன் பண்டாரவன்னியனும்
1818 வசந்தத்தில் சிங்கமாய் வீழ்ந்த
‘மகாவீரய’ கெப்பிட்டிபொலவும்
புதை குழிகள் தகர
கைகோர்த்தபடி உயிர்தெழுந்தார்கள்.
நானே சாட்சி.
உதயம் கண்ட தாமரைபோல
மலருமென் அகமும் முகமும் சாட்சி
வடகிழக்கிலும் தென்மேற்கிலும்
வானவில் சூடும் மலையகத்திலும்
விகாரைகள், கோவில்கள்
தேவாலயங்கள்
பாங்கொலிக்கும்
மசூதிகள் மீதும்
காலணித்துவ காரிருள் கலைவதை
பறவைகள் பாடுது..
வ.ஐ.ச. ஜெயபாலன்