• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

2026-27-ம் ஆண்டு தமிழகத்தின் தினசரி மின்தேவை 23,013 மெகாவாட்டாக அதிகரிக்கும்: மத்திய மின்சார ஆணையம் மதிப்பீடு | Tamil Nadu daily electricity demand will increase

Byadmin

Nov 13, 2024


தமிழகத்தில் தினசரி மின்தேவை வரும் 2026-27ம் ஆண்டு 23,013 மெகாவாட்டாக அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.

தமிழகத்தில் தற்போது தினசரி மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. புதிய மின்இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் மின்நுகர்வு அதிகரிக்கிறது. கோடைக் காலத்தில் வீடு, அலுவலகங்களில் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மின்தேவை உச்ச அளவை எட்டி வருகிறது.

இந்தாண்டு மே 2-ம் தேதி எப்போதும் இல்லாத வகையில் 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது. அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு தமிழகத்தில் மின்சாரம் கிடைத்தாலும் மின்சாதன பழுதால் மின்தடை ஏற்படுகிறது.

இந்நிலையில், மத்திய மின்சார ஆணைய ஆய்வு அறிக்கையின்படி வரும் 2026-27-ம் ஆண்டில் தமிழகத்தின் உச்ச மின்தேவை 23,013 மெகாவாட்டாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப சீராக மின்விநியோகம் செய்வதற்கு கூடுதல் மின்வழித் தடங்களை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மத்திய மின்துறை அதிகாரிகள் கூறியதாவது: தென்மாநில மின்தொகுப்பு, தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு மாநிலத்தில் மின்தேவை எவ்வளவு அதிகரித்தாலும் அதைப் பூர்த்தி செய்வதற்கான மின்சாரம் கிடைக்கும்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், ஒரு நாளுக்கான சராசரி மின்தேவை 8,190 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இனி மின்நுகர்வை பூர்த்தி செய்வதில் சூரியசக்தி, காற்றாலை, மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்படும். எனவே, அதிகரிக்க உள்ள மின்நுகர்வை பூர்த்தி செய்யவும், சீராக மின்விநியோகம் செய்யவும், கூடுதல் மின்வழித் தடங்கங்கள் அமைக்குமாறு மின்வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.



By admin