சென்னை: 21 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழக்க காரணமான ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் லைசன்ஸ் திரும்பப் பெறப்படுவதாக திமுக அரசு அறிவித்த பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவில், ‘திமுக அரசுக்கு 5 கேள்விகள்: 21 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழக்க காரணமான ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் லைசன்ஸ் திரும்பப் பெறப்படுவதாக திமுக அரசு அறிவித்த பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
மருத்துவத் துறை சார்பில் சுற்றறிக்கை, அல்லது அரசாணை ஏதேனும் வெளியிடப் பட்டதா?. ஏற்கனவே மருந்து கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட மருந்துகள் விற்பனைக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டீர்களா?
தமிழகம் முழுவதும் உள்ள மருந்து கடைகளில் இருந்து ஸ்ரீசன் நிறுவன மருந்துகள் முழுமையாக அகற்றப்பட்டதை உறுதி செய்ததா திமுக அரசு?
முதல்வருக்கு ப்ரோமோஷன் செய்ய அவ்வப்போது விளம்பரம் கொடுக்கிறீர்களே… 21 அப்பாவி குழந்தைகள் உயிரிழக்க காரணமான இந்த நிறுவன மருந்துகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவது குறித்து செய்தித் தாள்களில், ஊடகங்களில் ஏதேனும் விளம்பரம் வெளியிட்டீர்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
இருமல் மருந்து சர்ச்சை பின்னணி: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் ஸ்ரீசென் பார்மா என்ற மருந்து உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’இருமல் மருந்தை உட்கொண்ட மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டதோடு, 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.
குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்த இருமல் மருந்துதான் காரணம் என்று ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, தங்கள் மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், தமிழக அரசுக்குகடிதம் மூலம் வலியுறுத்தின.குழந்தைகள் உயிரிழப்பை அடுத்து, தமிழக அரசு ‘கோல்ட்ரிப்’ மருந்தை தமிழகத்தில் விற்பனை செய்யத் தடை விதித்தது. இந்நிலையில் மத்தியப் பிரதேச சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டமாநிலங்களின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசென் ஃபார்மா மருந்து உற்பத்தி ஆலைக்கு வந்து திடீர் ஆய்வு செய்து, மருந்து தயாரிப்புக்குப்பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள்கள், தயாரிக்கப்பட்ட மருந்தின் மாதிரிகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை(75) மத்தியப் பிரதேச போலீஸார் சென்னை கோடம்பாக்கம், நாகார்ஜூனா நகர், 2-வது தெருவில் உள்ள அவரது வீட்டில் நேற்று அதிகாலை கைது செய்தனர்.