படக்குறிப்பு, லிண்டா தனது நான்கு குழந்தைகளில் இருவரை பள்ளிக்குப் பிறகு நடைபெறும் செயல்பாடுகள் மையத்திலிருந்து அழைத்துச் செல்ல வராதபோதுதான், அவர் காணாமல் போனது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.கட்டுரை தகவல்
எழுதியவர், வில் க்ளென்னன்
எழுதியவர், மேடலின் வேர்
மற்றும்
எழுதியவர், சாரா டர்னிட்ஜ்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
“அவரது உடலை முறையாக அடக்கம் செய்து, அவர் பெற வேண்டிய மரியாதையை வழங்க வேண்டும். இறுதியாக, ‘முடிந்துவிட்டது’ என்று எங்களால் சொல்லும் நிலை வர வேண்டும்.”
கேட் ரஸல் தனது தாயார் லிண்டா குறித்து இவ்வாறு பேசுகிறார். கேட் 13 வயதாக இருந்தபோது, 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்விண்டனில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது லிண்டா காணாமல் போனார்.
அப்போது, லிண்டா கேட்டின் தந்தையான கிளின் ரஸலிடம் இருந்து விவாகரத்து பெறும் நடவடிக்கையில் இருந்தார். பின்னர், லிண்டாவைக் கொலை செய்த குற்றத்திற்காக கிளின் ரஸல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
லிண்டாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. அவரது உடலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சுமார் கால் நூற்றாண்டாக, அவரது குடும்பத்தினர் எந்தப் பதிலும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். லிண்டாவின் மறைவுக்காக உரிய முறையில் துக்கம் அனுசரிக்கவோ, இறுதிச் சடங்கு நடத்தவோ அவர்களால் முடியவில்லை.
ஏப்ரல் மாதம் பரோல் வாரியம் கிளின் ரஸலை விடுவிக்கலாம் என்று முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த முடிவு பின்னர் உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பான இரண்டு நாள் விசாரணையும் சமீபத்தில் நடைபெற்றது.
தனது தந்தை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, தனது தாயாரின் உடல் எங்கே உள்ளது என்பதைத் தெரிவிக்கும் வரை விடுவிக்கப்படக்கூடாது என கேட் கூறுகிறார்.
படக்குறிப்பு, தனது தந்தையால் தாயார் கொலை செய்யப்பட்டபோது, கேட்டுக்கு வெறும் 13 வயதுதான்.
பிரிட்டனின் சோமர்செட்டில் உள்ள க்ரூகெர்னைச் சேர்ந்த ரஸல், இதுவரை நான்கு முறை பரோல் கோரி விண்ணப்பித்துள்ளார். 2021-ஆம் ஆண்டு அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபோது, ‘ஹெலன் சட்டம்’ அடிப்படையில் பரோல் மறுக்கப்பட்ட முதல் கைதி என்ற நிலையை அவர் பெற்றார்.
கொலை செய்யப்பட்டவரின் உடலை எங்கு மறைத்து வைத்தார் என்பதைத் தெரிவிக்க கொலையாளி மறுப்பதை பரோல் வாரியம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
நீதிமன்றம், ரஸ்ல் ஆன்லைனில் யார் வேண்டுமானாலும் எளிதாக பார்க்கக்கூடிய ஓர் இணையதளத்தில் தொடர்ந்து எழுதி வந்ததைக் கண்டறிந்தது. அந்த இணையதளத்தில், தான் குற்றமற்றவர் என்று அவர் கூறி வருகிறார்.
தங்கள் தந்தை சிறையில் இருந்து விடுவிக்கப்படக்கூடாது என்று வாதிடுவதற்காக நீதிமன்றத்தில் ஆஜரானவர்களில் கேட் மற்றும் அவருடன் பிறந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
தங்களது தந்தை சிறையிலேயே உயிரிழக்க வேண்டும் என்று தாங்கள் விரும்பவில்லை என்று கேட் பிபிசி செய்தியிடம் கூறினார். ஆனால், தங்களது தாயாருக்கு என்ன செய்தார் என்பதை அவர் ஒப்புக்கொண்டு, அவரது உடல் எங்கே உள்ளது என்பதைத் தெரிவிக்கும் வரை அவர் விடுவிக்கப்படக்கூடாது என்று அவர்கள் கருதுவதாகக் கூறினார்.
“அவர் தனது தாயாருக்கு என்ன செய்தார் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் வரை, அதன் தொடர்ச்சியாக எங்களுக்கு அவர் ஏற்படுத்திய பாதிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் வரை, அந்தக் குற்றத்தின் தாக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கும்,” என்று அவர் கூறினார்.
“அப்படிப்பட்ட செயலைச் செய்யத் தயாராக இருந்த ஒருவர் விடுதலை செய்யப்படத் தகுதியானவர் என்று நாங்கள் நம்பவில்லை,” என்றும் கேட் கூறினார்.
பட மூலாதாரம், Family photo
படக்குறிப்பு, லிண்டா ரஸல் 2002-ஆம் ஆண்டு வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போனார்
லிண்டா காணாமல் போனபோது அவருக்கு 41 வயது. அவர் ஸ்விண்டன் கல்லூரியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது மாயமானார்.
அன்றைய வேலைநாள் முடிவில் தனது இளைய இரு குழந்தைகளை பள்ளிக்குப் பிறகு நடைபெறும் செயல்பாடுகள் மையத்திலிருந்து அழைத்துச் செல்ல அவர் வராதபோதுதான், அவர் காணாமல் போனது தெரியவந்தது.
அந்த நேரத்தில் லிண்டாவும் ரஸ்லும் விவாகரத்து பெறும் நடவடிக்கையில் இருந்தனர். லிண்டா காணாமல் போவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ரஸ்லின் வங்கிக் கணக்குகளை முடக்க நீதிமன்ற உத்தரவுடன் அவர் உள்ளூர் வங்கி ஒன்றுக்குச் சென்றிருந்தார்.
லிண்டாவின் உடல் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், காவல்துறையினர் தடயவியல் ஆதாரங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றில், கேட்டின் தந்தை பயன்படுத்திய காரின் பின்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட லிண்டாவின் ரத்தத்தின் தடயங்களும் அடங்கும்.
தனது தாயாரைப் பற்றிய பல மகிழ்ச்சியான நினைவுகள் தனக்கு இருப்பதாக கேட் கூறினார். அவர் தனது தாயாரை “மிகவும் அன்பான மற்றும் தாராள மனம் கொண்டவர்” என்று வர்ணித்தார்.
“அவர் எப்போதும் மற்றவர்களுக்காக தன்னால் முடிந்ததைவிட அதிகமாகச் செய்வார்,”என்று கேட் கூறினார்.
“எனக்காகவே பிரத்யேகமான ஆடை அலங்காரங்களைத் தயாரித்து கொடுப்பார். எங்களது பிறந்தநாளுக்கான கேக்குகளையும் அவரே எப்போதும் தயாரிப்பார். அவர் மிகவும் அக்கறையும் அன்பும் கொண்ட ஒரு பெண்.
பட மூலாதாரம், Family photo
படக்குறிப்பு, லிண்டாவுடன் இருக்கும் கேட், தனது தாயார் ‘மிகவும் அன்பும் அக்கறையும் கொண்டவர்’ என்று வர்ணித்துள்ளார்.
ஒரு பெற்றோரை மட்டுமல்ல, இரு பெற்றோரையும் இழந்தது தனக்கும் தனது மூன்று இளைய உடன் பிறந்தோருக்கும் “மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவமாக” இருந்ததாக கேட் கூறுகிறார். என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் மிகவும் குழப்பமடைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“நீங்கள் சிறு குழந்தையாக இருக்கும்போது, எல்லாம் சரியாகிவிடும் என்று உங்களிடம் சொல்ல உங்கள் பெற்றோர் வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“அதுவும் உங்கள் சொந்த தந்தையே இதற்குக் காரணமாக இருந்தால், நடந்ததைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். நீண்ட காலம் அதை எப்படிப் புரிந்துகொள்வது என்று முயற்சி செய்தேன். அதே நேரத்தில், அதைப் பற்றி சிந்திக்காமலும் நீண்ட காலம் இருந்தேன். ஏனென்றால், அதை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது.”
‘மிகவும் துயரமான காலம்’
பல பதின்பருவ வயதினர் தங்கள் பெற்றோருடன் நேரம் செலவிடுவதைத் தவிர்க்கும் நிலையில், பெற்றோர் அருகில் இல்லாமல் இருப்பது எவ்வளவு தனிமையானது என்பதை தான் நேரடியாக அனுபவித்திருப்பதாக கேட் கூறினார்.
தனது தாயார் காணாமல் போனது மற்றும் தனது தந்தை குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த முக்கியமான வாழ்க்கைக் கட்டங்களில், தானும் தனது உடன்பிறந்தோரும் “மிகவும் துயரத்தை” அனுபவித்ததாக அவர் கூறினார்.
“இழப்பின் தாக்கம் எல்லாவற்றிலும் தெரியும்,” என்று அவர் கூறினார்.
“திருமணங்கள்… அங்கு பெற்றோரின் இல்லாமை தெளிவாகத் தெரியும். பட்டமளிப்பு விழாக்களிலும் அப்படித்தான். ஆனால், அன்றாட வாழ்க்கையிலும் கூட, பெற்றோரின் வீட்டுக்குச் சென்று அவர்களுடன் இரவு உணவு சாப்பிடுவது போன்ற எளிமையான விஷயங்களைக் கூட இழக்கிறோம். எங்கள் அனைவருக்கும் அந்த இல்லாமை மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது.”
பட மூலாதாரம், PA
படக்குறிப்பு, 2003-ஆம் ஆண்டு தனது மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக ரஸலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, தற்போது சிறையில் உள்ள ரஸல், “விதிக்கப்பட்ட நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றி வந்துள்ளார்” என்றும், உளவியல் நிபுணருடன் 20 ஆலோசனை அமர்வுகளில் பங்கேற்றுள்ளார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் டிரிஸ்டன் ஜோன்ஸ் கே.சி. தெரிவித்தார்.
ஆனால், ரஸலை “ஆழமாகப் பொய் கூறக்கூடிய நபர்” என்று வர்ணித்த அவர், லிண்டாவுக்கு எதிராக ரஸல் “தொடர்ச்சியான வன்முறை நடவடிக்கையை” மேற்கொண்டதாகவும் கூறினார்.
லிண்டா உயிரிழப்பதற்கு முன்பு, குடும்ப வன்முறை தொடர்பாக காவல்துறையிடம் அளித்த புகார் குறித்த ஆதாரங்களையும் நீதிமன்றம் பரிசீலித்தது. அதில், ரஸல் தன்னைக் கொலை செய்துவிடுவார் என்று லிண்டா அஞ்சியிருந்தது தெரியவந்தது.
லிண்டாவைக் கொலை செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு, குடும்ப வன்முறை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் ரஸல் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பரோல் வாரிய விசாரணையில், கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ரஸல் லிண்டாவைத் துன்புறுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று முடிவு செய்யப்பட்டது.
ஏப்ரல் மாதம் ரஸலை விடுவிக்க பரோல் வாரியம் அனுமதி அளித்தபோது, “பொதுமக்களின் பாதுகாப்புக்காக அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று குழு திருப்தி அடைந்ததாக அறிக்கையில் தெரிவித்திருந்தது.
தற்போது உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது. எனினும், நீதிபதிகள் உடனடியாகத் தீர்ப்பை வெளியிடப் போவதில்லை என்றும், இறுதித் தீர்ப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.