படக்குறிப்பு, இந்த அறுவை சிகிச்சை டூமாய் ரோபோடிக் அமைப்பைப் பயன்படுத்தியதுகட்டுரை தகவல்
லண்டனில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், 2,400 கி.மீ தொலைவில் ஜிப்ரால்டரில் உள்ள ஒரு நோயாளிக்கு பிரிட்டனின் முதல் நீண்ட தூர ரோபோ அறுவை சிகிச்சையைச் செய்ததாகக் கூறுகிறார்.
முன்னணி ரோபோடிக் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ப்ரோகர் தாஸ்குப்தா, பால் பக்ஸ்டனுக்கு ப்ராஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டபோது “தான் அங்கே இருப்பதைப் போலவே உணர்ந்ததாக” கூறினார்.
ஆய்வில் பங்கேற்று மருத்துவ வரலாற்றின் ஒரு பகுதியாக மாறுவது தனக்கு எளிதான முடிவாகவே இருந்ததாக, 62 வயதாகும் புற்றுநோய் நோயாளியான பால் பக்ஸ்டன் கூறினார்.
தொலைதூர ரோபோடிக் அறுவை சிகிச்சை எதிர்கால நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகப் பயணம் செய்வதில் உள்ள “பெருமளவு சிரமம் மற்றும் செலவை” தவிர்க்க உதவும் என்றும், தொலைதூர இடங்களில் உள்ள மக்களுக்குச் சிறந்த சுகாதார சேவையை வழங்க உதவும் என்றும் நம்பப்படுகிறது.
பிரிட்டனை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொலைதூர அறுவை சிகிச்சையில் முக்கியமான முன்னேற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில், அவர்கள் அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் 4,000 மைல் தொலைவில் இருந்து, அறிவியல் ஆராய்ச்சிக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட ஒருவரின் உடலில், ரோபோடிக் பக்கவாத சிகிச்சையைச் செய்தனர். இது நீண்டதூர அறுவை சிகிச்சை தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் என்பதைக் காட்டியது.
சோமர்செட்டில் உள்ள பர்ன்ஹாம் ஆன் சீயை சேர்ந்த பக்ஸ்டன், 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜிப்ரால்டருக்கு குடிபெயர்ந்தார்.
பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பிரதேசமான ஜிப்ரால்டரில், யூரோபோர்ட்டில் உள்ள செயின்ட் பெர்னார்ட்ஸ் என்ற ஒரேயொரு மருத்துவமனை மட்டுமே உள்ளது. அதாவது மிகவும் சிக்கலான மருத்துவத் தேவைகளைக் கொண்ட குடியிருப்புவாசிகள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். பொதுவாக தகுதி இருப்பின், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையை அணுகுவார்கள்.
கிறிஸ்துமசுக்கு பிறகு ப்ராஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு பக்ஸ்டன் தேசிய சுகாதார சேவையின் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்த்தார். ஆனால், ஒரு சோதனையின் ஓர் அங்கமாகத் தொலைதூர சிகிச்சையை மேற்கொள்ளும் முதல் நோயாளியாகும் வாய்ப்பை பெற்றதால் அதைப் பயன்படுத்திக் கொண்டதாக அவர் கூறினார்.
“நீங்கள் உண்மையிலேயே இதைச் செய்யப் போகிறீர்களா?” என்று பலர் தன்னிடம் கேட்டதாக அவர் கூறினார். ஆனால், இதில் பங்கேற்பதன் மூலம் தான் உதவுவதாக அவர் உணர்ந்தார்.
போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வரும் பக்ஸ்டன், ஜிப்ரால்டரில் தொலைதூர அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்யாவிட்டால், லண்டனுக்கு விமானத்தில் செல்ல வேண்டியிருக்கும் என்று விளக்கினார். அங்கு, பொது சுகாதார அமைப்பின் மூலம் சிகிச்சைக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். சுமார் மூன்று வாரங்கள் லண்டனில் தங்கியிருக்க நேரலாம்.
பட மூலாதாரம், PA
படக்குறிப்பு, முன்னணி ரோபோடிக் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ப்ரோகர் தாஸ்குப்தா இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
எனவே, இதை ஒரு எளிதான மற்றும் விவேகமான முடிவாக அவர் கருதினார். ஜிப்ரால்டருக்கு அறுவை சிகிச்சை முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். ஏனெனில், அங்குள்ள மக்கள் இப்போது தங்கள் பகுதியை விட்டு வெளியேறாமலே இந்த சிகிச்சையைப் பெறலாம்.
மருத்துவக் குழு தன்னை மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டதாகவும், பிப்ரவரி 11 அன்று நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு தான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்ததாகவும் பக்ஸ்டன் கூறினார்.
ரோபோடிக் அறுவை சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?
3டி ஹெச்.டி கேமரா மற்றும் நான்கு கைகள் பொருத்தப்பட்ட ஒரு ரோபோவை பயன்படுத்தி லண்டன் கிளினிக்கில் இருந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அனைத்தும் 0.06 விநாடிகள் தாமதத்துடன் ஒரு கன்சோல் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன.
பிரிட்டனில் உள்ள கன்சோல் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் வழியாக, 5ஜி இணைப்புடன், ஜிப்ரால்டரில் உள்ள ரோபோவுடன் இணைக்கப்பட்டது.
இணைய இணைப்பு செயலிழந்தால் அறுவை சிகிச்சையில் உதவ ஜிப்ரால்டரில் ஒரு மருத்துவக் குழு தயாராக இருந்தது. ஆனால், முழு அறுவை சிகிச்சையும் நடக்கும் போது இணைப்பு நிலையாகவே இருந்தது.
இந்த அறுவை சிகிச்சை டூமாய் ரோபோடிக் சிஸ்டத்தை பயன்படுத்தியது. அதோடு, லண்டன் கிளினிக் மற்றும் ஜிப்ரால்டர் சுகாதார ஆணையத்தின் கூட்டு முயற்சியின் மூலம் இது மேற்கொள்ளப்பட்டது.
சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் செயல்படலாம் என்பதால் தொலைதூர இடங்களிலும் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்தத் தொழில்நுட்பம் உதவும் என்று அறுவை சிகிச்சை நிபுணர் ப்ரோகர் தாஸ்குப்தா கூறினார்.
இந்த அறுவை சிகிச்சை இரண்டு சோதனை நிகழ்வுகளில் முதலாவதாகும். இரண்டாவது அறுவை சிகிச்சை மார்ச் 4ஆம் தேதி ஜிப்ரால்டரில் உள்ள 52 வயதான மற்றொரு நோயாளிக்கு செய்யப்பட்டது.
மார்ச் 14ஆம் தேதி தாஸ்குப்தா மீண்டும் இந்த அறுவை சிகிச்சையைச் செய்வார். இது ஐரோப்பிய சிறுநீரக சங்க மாநாட்டில் உலகின் முன்னணி சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் 20,000 பேருக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.
“இது மிகவும் உற்சாகமானது. மனிதாபிமான நன்மை இதில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
2035ஆம் ஆண்டுக்குள், ஆண்டுதோறும் 500,000 ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சைகளைச் செய்வதை இலக்காகக் கொண்டு, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை உள்ளூர் ரோபோ உதவி அறுவை சிகிச்சைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.