பட மூலாதாரம், Karnataka Assembly
கர்நாடக சட்ட மேலவை உறுப்பினரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எஸ்.எல். போஜேகெளடா, ‘சுமார் 2800 நாய்களைக் கொன்றேன்’ எனக் கூறியுள்ளார்.
புதன்கிழமை சட்டப் பேரவை நடவடிக்கைகளின் போது போஜேகெளடா இந்தக் கூற்றை முன்வைத்தார்.
சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவை ஆதரித்த போஜேகெளடா, தெருநாய்களால் கடிக்கப்பட்ட குழந்தைகளின் வலியை பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்றார்.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சந்தர்ப்பத்தில் போஜேகெளடாவின் கருத்து வெளிவந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு விலங்குநல ஆர்வலர்களும், பல தலைவர்களும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு வியாழக்கிழமையன்று இந்த வழக்கை விசாரிக்கும்.
செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 12) பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெருநாய்களைத் தொந்தரவாகக் கருதி அவற்றை ‘அகற்றுவது’ ஆட்சி முறை அல்ல, அது கொடுமை என்று கூறினார்.
“பொதுமக்களையும் விலங்குகளையும் பாதுகாக்கும் தீர்வுகளை மனித சமூகங்கள் கண்டுபிடிக்கின்றன. அவை கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு பணிகள் என பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அச்சத்தின் அடிப்படையிலான முடிவுகள் பாதுகாப்பை அல்ல, துன்பத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்” என்று சித்தராமையா கூறினார்.
பட மூலாதாரம், ANI
சட்ட மேலவையில் எம்.எல்.சி போஜேகெளடா சொன்னது என்ன?
“கர்நாடக சட்ட மேலவை உறுப்பினரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எஸ்.எல். போஜேகெளடா, தான் ‘சுமார் 2800 நாய்களைக் கொன்றதாக’ தெரிவித்துள்ளார்.
“குழந்தைகளும், பாதிக்கப்பட்டவர்களும் படும் வேதனை எங்களுக்கு மட்டுமே தெரியும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த சூழ்நிலையை அனுபவிக்கும்போது, இதன் பின்னணியில் உள்ள பிரச்னையை அவர்கள் புரிந்துகொள்வார்கள்” என்று போஜேகெளடா கூறினார் .
“நகராட்சி மன்றத் தலைவராக நான் பதவி வகித்த போது, எனது மேற்பார்வையின் கீழ் 2,800 நாய்களைக் கொன்றுள்ளேன். இதுவொரு குற்றம் என்றால், அதற்காக நான் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன்” என்று போஜேகெளடா கூறினார்.
தி பிரிண்ட் செய்தியின்படி, தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை மட்டுமே செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று போஜேகெளடா கோரிக்கை விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றும் முதல் மாநிலமாக கர்நாடகா மாற வேண்டும் என்று போஜேகெளடா கோரியுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Karnataka Assembly
போஜேகெளடா யார்?
ஜேடிஎஸ் தலைவர் எஸ்எல் போஜேகெளடா தற்போது கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். சிக்மகளூரு நகராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
போஜேகெளடாவின் பேஸ்புக் சுயவிவரத்தின்படி , அவர் இந்திய பார் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினராகவும் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
போஜேகெளடா, காபி பயிரிடுகின்ற விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர், ஜேடிஎஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான எச்.டி. குமாரசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று பிபிசி ஹிந்திக்காக பணியாற்றும் பத்திரிகையாளர் இம்ரான் குரேஷி கூறுகிறார்.
போஜேகெளடாவுக்கு முன்பு, அவரது மூத்த சகோதரர் எஸ்.எல். தர்மகெளடா எம்.எல்.சி.யாக இருந்தார், அவர் குமாரசாமிக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தார்.
2020ஆம் ஆண்டில், தர்மகெளடா ரயில் பாதையில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்தார்.
பட மூலாதாரம், Sanchit Khanna/Hindustan Times via Getty Images
தெருநாய்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு
சமீபத்தில், உச்ச நீதிமன்றம் டெல்லி-என்சிஆர் தெருக்களில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்றி, நாய்கள் காப்பகங்களில் வைக்க உத்தரவிட்டது.
அதிகரித்து வரும் நாய் கடி மற்றும் வெறிநாய்க்கடி சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம், எட்டு வாரத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளது.
“குழந்தைகளும் சிறு குழந்தைகளும் எக்காரணம் கொண்டும் ரேபிஸுக்கு பலியாகக்கூடாது. மக்கள் பயமின்றி சுதந்திரமாக நடமாட முடியும், தெருநாய்கள் அவர்களைத் தாக்காது என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட வேண்டும். இதில் எந்த உணர்ச்சிபூர்வமான அம்சமும் இருக்கக்கூடாது” என்று நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையின் போது கூறியதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, டெல்லியைத் தவிர, நொய்டா, குருகிராம் மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களுக்கும் பொருந்தும்.
இந்த செயல்முறைக்கு எந்த நபரோ அல்லது அமைப்போ இடையூறு விளைவித்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாய்களைப் பிடிக்க சிறப்புப் படையை அமைக்கவும் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, நாய்களை பராமரிக்கும் ஒவ்வொரு தங்குமிடமும் குறைந்தது 5,000 நாய்களை வைத்திருக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். அங்கு கருத்தடை செய்வதற்கும் தடுப்பூசி போடுவதற்கான வசதிகள் இருக்க வேண்டும். மேலும் சிசிடிவி கேமராக்களையும் நிறுவ வேண்டும்.
தற்போதைய சட்டங்கள் கருத்தடை செய்யப்பட்ட நாய்கள், அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடுவிக்க அனுமதிக்கின்றன, ஆனால் இனிமேல் கருத்தடை செய்யப்பட்ட நாய்களைக் கூட தெருக்களில் விடக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இவற்றைத் தவிர, நாய் கடி மற்றும் வெறிநாய்க்கடி வழக்குகளை புகாரளிக்க ஒரு வாரத்திற்குள் உதவி எண் ஒன்றைத் தொடங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு வழக்குகளை விசாரிக்கும்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு