• Wed. Oct 22nd, 2025

24×7 Live News

Apdin News

3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழா இலங்கை குழாத்தின் பாதுகாப்பு அதிகாரி கோபி

Byadmin

Oct 22, 2025


பாஹ்ரெய்ன், மனாமாவில் நாளை புதன்கிழமை (22) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் 100 வீர, வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கோபிநாத் சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

‘சிகோ’ என அனைவராலும் அழைக்கப்படும் கோபிநாத் சிவராஜா, 2022ஆம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் (IOC) இருந்து விளையாட்டுத்துறை நலன், பாதுகாப்பு விடயங்களில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணத்துவத்தைப்  பெற்றுக்கொண்டார்.

ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் சகல விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு, நலன்புரி, நல்வாழ்வு ஆகியவற்றை உறுதிசெய்வதற்காக ஒவ்வொரு நாடும் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசிய ஒலிம்பிக் பேரவையின் (AOC) பரிந்துரைக்கு அமைய இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவினால் (NOC) பாதுகாப்பு அதிகாரியாக சிகோ நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு கருவிகள் மற்றும் கல்வி உபகரணங்களைப் பயன்படுத்தி தேசிய ஒலிம்பிக் குழு பிரதிநிதிகளுக்கு கற்பித்தல்,

குழாத்தின் தலைமை அதிகாரியுடன் இணைந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தல்,

விளையாட்டுப் போட்டிகள் முழுவதும் விளையாட்டு வீரர்களின் மன மற்றும் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்தல்,

பணியில் உள்ள ஆசிய ஒலிம்பிக் பேரவை பாதுகாப்பு அதிகாரியுடன் தொடர்பு கொள்ளுதல்,

தேசிய ஒலிம்பிக் குழுவுக்குள் தெளிவான மற்றும் ரகசியமான அறிக்கையிடல் முறைமையை நிறுவுதல்,

விளையாட்டுப் போட்டிகளின் போது விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்களை துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பதற்கான ஆசிய ஒலிம்பிக் பேரவை கட்டமைப்பை அமுல்படுத்தல் என்பன பாதுகாப்பு உத்தியோகத்தரான கோபிநாத் சிவராஜாவின் கடமையும் கடப்பாடும் ஆகும்.

ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வீர, வீராங்கனைகள் இங்கிருந்து பாஹ்ரெய்ன் புறப்படுவதற்கு முன்னர் நேர்த்தியான விளையாட்டு முறை தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் மற்றொருவரை தவறான சிந்தைகளில் தூண்டுதல் அல்லது துஷ்பிரயோகம் செய்ய முயற்சிசெய்தல் போன்றவற்றை தடுப்பது மற்றும் அவை குறித்து பாதுகாப்பு அதிகாரிக்கு முறையிடுதல் தொடர்பாகவும் இலங்கை குழாத்தினருக்கு பாதுகாப்பு அதிகாரியால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் நடைபெறும் 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவுக்கு மிகப் பெரிய குழுவை தேசிய ஒலிம்பிக் குழு அனுப்புவதுடன் வீர, வீராங்கனைகள் பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் பலர் முதல் முறையாக சர்வதேச போட்டியில் பங்குபற்றுவகிறார்கள்.

இதன் காரணமாக  இலங்கை விளையாட்டு வீரர்கள் புறப்படும் தருணத்திலிருந்து பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை அவர்களைப் பாதுகாத்து வழிநடத்தும் பாரிய பொறுப்பு பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் ‘சிகோ’ சிவராஜாவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

By admin