• Mon. Aug 18th, 2025

24×7 Live News

Apdin News

3 ஆண்டுகளுக்கும் மேலான நிலுவை வழக்குகள்: சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை! | Cases pending for more than three years High Court takes suo motu cognizance

Byadmin

Aug 18, 2025


சென்னை: மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு, முடித்து வைக்க ஏதுவாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு, விரைந்து முடிக்க, உச்ச நீதிமன்ற குழு, விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வு, தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா உத்தரவின்படி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகள் குறித்த விவரங்களை வழங்கும்படி, வழக்கறிஞர்கள், காவல் துறையினர், வழக்கு தொடுத்தவர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு தொடர்பாக பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.

மேலும், சமரசம் செய்யத்தக்க வழக்குகளை அடையாளம் கண்டு, சமரசம் மூலமாகவோ, மாற்று முறை தீர்வு மூலமாகவோ வழக்கை முடித்து வைக்கலாம் எனவும், சமரசம் செய்து கொள்ள முடியாத வழக்குகளுக்கும் தீர்வு காணலாம் எனவும் தெரிவித்த நீதிபதி, தகுதியான வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து காவல் துறைக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் எனவும், செக் மோசடி வழக்குகளிலும் சமரசம் செய்வது குறித்து முயற்சிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதேபோல சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்கு, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.



By admin