• Mon. Dec 29th, 2025

24×7 Live News

Apdin News

30 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த முதல் குழந்தை: இத்தாலிய கிராமத்தை நோக்கி குவியும் பயணிகள்!

Byadmin

Dec 29, 2025


இத்தாலியின் அப்ருஸ்ஸோ (Abruzzo) மாகாணத்தில் உள்ள சிறிய கிராமமான பாலியரே டி மார்சி (Pagliara dei Marsi) தற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அவர்கள் கிராமத்தின் இயற்கை அழகைக் காண வந்தாலும், முக்கியமாக ஒரே ஒரு குழந்தையைப் பார்ப்பதற்காகவே அங்கு செல்கின்றனர்.

அந்தக் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகப் பிறந்த குழந்தை தான் லாரா பூசி டிராபூகோ (Lara Bussi Trabucco). மார்ச் மாதம் லாரா பிறந்தபோது, பெரும்பாலும் மூத்தோர் வசிக்கும் அந்தக் கிராமம் முழுவதும் கொண்டாட்டக் களத்தில் மூழ்கியது. குழந்தையின் பிறப்பு, நீண்ட காலமாக அமைதியாக இருந்த கிராமத்துக்கு புதிய உயிர் வந்ததுபோல் உணர வைத்தது.

லாராவின் வருகையால் கிராம மக்கள் தொகை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பலர் குழந்தையை நேரில் பார்க்கவே கிராமத்துக்குப் பயணம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்த மகிழ்ச்சிக்கிடையே லாராவின் எதிர்காலம் குறித்து சில அக்கறைகளும் எழுந்துள்ளன. சுற்றுவட்டாரங்களில் பள்ளிகள் இருந்தாலும், மாணவர்கள் குறைவாக இருப்பதால் அவை தொடர்ந்து செயல்படுமா என்பது உறுதி இல்லை. மேலும், குழந்தைப் பராமரிப்பு வசதிகளும் அந்தப் பகுதியில் இல்லாததால், குழந்தையை வளர்ப்பது குறித்து லாராவின் பெற்றோர் கவலையுடன் யோசித்து வருவதாக The Guardian ஊடகம் தெரிவித்துள்ளது.

இத்தாலி முழுவதும் இந்த ஆண்டு பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இந்த நிலைமையை மாற்ற, குடும்பங்களுக்கு அரசு மற்றும் சமூக ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்று மக்கள்தொகை வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

By admin