0
கனடாவின் மரீன்லேண்ட் (Marineland) கேளிக்கை பூங்கா, கனடா அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி கிடைக்காவிட்டால் அங்கிருக்கும் 30 பெலுகா திமிங்கிலங்களைக் (beluga whales) கருணைக் கொலை செய்யவேண்டும் என்று மிரட்டியுள்ளது.
மரீன்லேண்ட் கேளிக்கை பூங்கா, கடந்த ஆண்டிலிருந்து மூடப்பட்டுள்ளது. அங்கு விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மரீன்லேண்ட் நிதிச் சிக்கலிலிருந்து மீள அதன் கட்டுப்பாட்டிலிருக்கும் பெலுகா திமிங்கிலங்களைச் சீனாவின் சைம்லோங் பூங்காவுக்கு (Chimelong Ocean Kingdom) விற்க முயன்றது. எனினும், அந்த விற்பனையை கனடா அரசாங்கம் தடுத்து நிறுத்தியது.
வேறொரு பூங்காவுக்கு திமிங்கிலங்கள் விற்கப்பட்டால் அவை தொடர்ந்தும் துன்புறுத்தப்படும் என்று மீன் வள அமைச்சர் கூறினார்.
2019ஆம் ஆண்டிலிருந்து மரீன்லேண்டில் 20 திமிங்கிலங்கள் மரணமடைந்திருப்பதாக கனடா ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தற்போது மரீன்லேண்ட் திமிங்கிலங்களைப் பராமரிக்க முடியாததால், அவசரமாக உதவி தேவைப்படுகிறது என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.
திமிங்கிலங்களின் பராமரிப்புக்கு மரீன்லேண்ட் ஏற்கெனவே திட்டமிட்டிருக்கவேண்டும்; அது அரசாங்கத்தின் பொறுப்பல்ல என கனடா மீன் வள அமைச்சர் தெரிவித்துள்ளார்.