அனைத்து சமூகத்தினருக்கும் வழிபாடு நடத்த சம உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், உத்தபுரம் தலித் மக்களால் அந்தப் பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்க முடியவில்லை. பத்து ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, திருவிழா கண்ட முத்தாலம்மன் கோவில் மாவட்ட நிர்வாகத்தால் மீண்டும் பூட்டப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள உத்தபுரம் கிராமம், சாதிய தீண்டாமைச் சுவருக்கு எதிரான போராட்டத்தால் அறியப்பட்டது. பல ஆண்டுகளாகவே கடுமையான தீண்டாமையை எதிர்கொண்டு வரும் அந்தப் பகுதியின் தலித் மக்களுக்கு, 1989ஆம் ஆண்டு முதல் அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அந்தக் கோவிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபட சம உரிமை உண்டு என்று கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை உத்தபுரம் கோவிலில் தலித் மக்கள் வழிபாடு நடத்தினர். இருப்பினும், இந்த மாற்றம் இயல்பாக ஏற்கப்படவில்லை. தற்போது கோவில் திருவிழா நடக்கும் நிலையில், அதில் சமமாகப் பங்கேற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகப் பேச்சுவார்த்தையின் விளைவாக தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைந்தனர். ஆனால் இதற்கு எதிரான தரப்பினர் கோபமடைந்தனர். அதனால் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக சாதி இந்துக்கள் 2014ஆம் ஆண்டு கோவிலைப் பூட்டி வழிபாட்டை முற்றிலும் நிறுத்திவிட்டனர். இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில்தான் தற்போது அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமை உண்டு என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற வழக்கு என்ன?
மதுரை உத்தபுரத்தைச் சேர்ந்த பாண்டி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 2024ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், உத்தபுரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோவில்களைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
“பங்குனி, புரட்டாசி மாதங்களில் அந்த கோவில்களில் திருவிழா நடைபெறும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோவில் மற்றும் கோவில் திருவிழாவை நிர்வகித்து வருகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டில் கோவிலில் வழிபடுவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இதனால் கடந்த 9 ஆண்டுகளாக கோவில் பூட்டப்பட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து, கோவிலைத் திறந்து தினசரி வழிபாடு நடத்த அனுமதி வழங்கினார். இதற்கு எதிராக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி உத்தரவின் பேரில் கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்காததால் மதுரை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீடு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், “உத்தபுரம் கோவிலில் திருவிழா நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே திருவிழாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது. தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “கோவிலில் இருக்கும் மரத்தை பக்தர்கள் சுற்றி வரலாம். மரத்தைத் தொடக்கூடாது, ஆணி அடிக்கக் கூடாது, சந்தனம் பூசக்கூடாது என அறநிலையத் துறை சார்பில் தகவல் பலகை வைக்க வேண்டும். கோவிலுக்கு பக்தர்கள் செல்வது, பக்தர்கள் மரத்தை வணங்குவதை யாரும் தடுக்க முடியாது. மரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலான செயல்களை யாரும் செய்யக்கூடாது.
இரு தரப்பினரும் சம உரிமையுடன் கோவிலில் வழிபாடு நடத்தலாம். உத்தபுரம் முத்தாலம்மன் கோவில் வழிபாட்டில் அரசு எந்தத் தடை ஆணையும் பிறப்பிக்கக் கூடாது. பிரச்னை ஏற்படும்போது சுவர் எழுப்பித் தடுத்தால் பிரச்னை தீர்ந்துவிடாது. மனங்கள் இணைந்தால்தான் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்” என்று தீர்ப்பளித்தனர்.
தீர்ப்புக்குப் பிறகும் கிடைக்காத தீர்வு
சென்னை உயர்நீதிமன்றம் அனைவருக்கும் வழிபாட்டில் சம உரிமை என்று கூறிய பிறகும், திருவிழா நடத்துவதில் சம உரிமை வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
உத்தபுரத்தில் இருந்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, “வருகிற மே 6ஆம் தேதிக்குள் திருவிழா நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மூன்று நாள் நடைபெறும் திருவிழாவில் முதல் நாளான செவ்வாய்க் கிழமை சாதி இந்துக்கள் மைக் செட் அமைத்தனர், முளைப்பாரி எடுத்தனர். ஆனால் தலித் மக்கள் அதே போலச் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை,” என்று கூறினார்.
மேலும், இரண்டாவது நாளான புதன்கிழமை பொங்கல் வைக்க வேண்டும். ஆனால், சாதி இந்துக்கள் மட்டுமே பொங்கல் மற்றும் கிடா வைத்ததாகவும், காலை முதலே கேட்ட போதிலும் தலித் மக்கள் இந்த நடைமுறைகளைச் செய்ய காவல்துறை அனுமதிக்கவில்லை எனவும் செல்லக்கண்ணு குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, “வாக்குவாதம் முற்றியதில், காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் கோவிலைப் பூட்டிவிட்டனர். நாங்கள் மறியல் செய்து வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
அரச மரத்தை வழிபட மறுப்பு
கடந்த 1989ஆம் ஆண்டு உத்தபுரத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தலித் மக்களுக்கும் சாதி இந்துகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
கோவிலுக்கு வெளியில் இருக்கும் அரச மரத்தை தலித் மக்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் மீது கற்கள் எறியப்பட்டன. இந்த மோதல்களைத் தொடர்ந்து கிராமத்தில் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டது, அதில் மின்சாரமும் ஏற்றப்பட்டது.
இதன் மூலம் தலித் மக்கள் முத்தாலம்மன் கோவில் மற்றும் அங்கிருந்த அரச மரத்தை வழிபடுவது தடுக்கப்பட்டது.
இடிக்கப்பட்ட தீண்டாமைச் சுவர்
இரு சமுதாயத்தினருக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்தன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உத்தரபுரத்தில் நடைபெறும் சாதிப் பாகுபாடுகள் குறித்து ஆய்வு நடத்தியது. தீண்டாமைச் சுவர் குறித்த செய்திகள் வெளியே தெரியத் தொடங்கிய பிறகு, உத்தரபுரம் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அரசு உத்தரவின் பேரில் 2008ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி சுவர் இடிக்கப்பட்டபோது சாதி இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக மூன்று வாரங்களுக்கு அருகில் இருந்த மலையடிவாரத்தில் வசித்து வந்த சாதி இந்துக்களை மாவட்ட நிர்வாகம் பேசி ஊருக்குள் அழைத்து வந்தனர்.
தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட பிறகு, சாதி இந்துக்களால் தலி மக்கள் தாக்கப்பட்டனர், அவர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டங்களின்போது நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தலித் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்தது. இந்தத் தாக்குதல்களில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன என்று ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
22 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் நுழைவு
கோவில் நுழைவு மற்றும் அரச மர வழிபாடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், தலித் மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழிபாட்டு உரிமை கோரி வழக்கு தொடுத்தனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில், தலித் மக்கள் கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கோவில் நிர்வாகம் சாதி இந்துக்களிடம் இருக்கும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. கோவில் சுவர்களை இடிக்க மாட்டோம் என தலித் மக்கள் உறுதி அளித்தனர். இருபுறமும் பதிவு செய்திருந்த குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து 22 ஆண்டுகள் கழித்து உள்ளே நுழைந்தனர். காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற அந்த நிகழ்வின்போது சாதி இந்துக்கள் சிலர் கைகூப்பி தலித் மக்களை கோவிலுக்கு உள்ளே அழைத்தாலும், அருகில் இருந்த சாதி இந்து பெண்கள் கூச்சலிட்டு அவர்களை ஏசியது நிலைமை சுமூகமாகவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது.
கடந்த 2012ஆம் ஆண்டு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டபோது தலித்துகள் தடுப்புகள் போட்டு அதற்கு வெளியே நிறுத்தப்பட்டனர். 2013ஆம் ஆண்டு திருவிழாவின் போதும் அரச மர வழிபாட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே கோவில் வழிபாட்டு உரிமை கோரி தலித் மக்கள் தொடுத்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது.
மீண்டும் மறுக்கப்பட்ட உரிமை
தீர்ப்பை ஏற்க மறுத்த சாதி இந்துக்கள் கோவிலை பூட்டி வழிபாடுகளை நிறுத்திவிட்டனர். 2014ஆம் ஆண்டு முதல் பூட்டப்பட்டிருந்த கோவிலை 2024ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் மூலமே திறக்க முடிந்தது.
“கடந்த ஓராண்டாக கோவிலை நிர்வகித்து வரும் சாதி இந்துக்கள் விளக்கு ஏற்றி வருகின்றனர். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை” என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு கூறினார்.
இப்போதும் கோவில் திருவிழாவில் சாதி இந்துக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தலித் மக்களும் அதே உரிமையைக் கோரியபோது, கோவில் பூட்டப்பட்டுள்ளது. தலித் மக்கள் தங்கள் கோரிக்கைக்காக மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.