பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/Shadow the Scientist; Processing: J Miller, M Rodriguez, TA Rector, M Zamani
இது ஒரு வால் நட்சத்திரம் (comet) என்பதை கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இது, வேற்றுக்கிரகவாசிகளின் வருகை மற்றும் மனிதகுலத்தின் முடிவு பற்றிய ஊகங்கள் பரவுவதைத் தடுக்கவில்லை.
3I/அட்லஸ் என்பது நமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருந்து (interstellar object) வந்து நமது வானத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பொருள் ஆகும். எனவே அதன் பெயர் “3I” எனத் தொடங்குகிறது.
நமக்குத் தெரிந்த பெரும்பாலான வால் நட்சத்திரத்தைப் போலல்லாமல், இது சூரியனைச் சுற்றி வருவதில்லை. இதன் பாதை மற்றும் வேகத்திலிருந்து இது நமது விண்மீன் மண்டலத்தின் வேறொரு இடத்திலிருந்து வந்திருப்பதுடன் அடுத்த ஆண்டு முற்பகுதியில் நமது சுற்றுப்புறப் பகுதியை விட்டு வெளியேறும் ஒருமுறை பயணத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.
இதன் சில அம்சங்கள் ஹார்வர்ட் வானியற்பியலாளரான பேராசிரியர் அவி லோப் – மற்றும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத்தில் இது செயற்கையாக இருக்கலாம் என்ற சாத்தியத்தை சிந்திக்கத் தூண்டியுள்ளது.
ஈலோன் மஸ்க் கூட இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ரியாலிட்டி நிகழ்ச்சி நட்சத்திரமான கிம் கர்தாஷியன் கூட எக்ஸ் தளத்தில்: “இருங்கள்.. 3I அட்லஸ் பற்றிய தகவல் என்ன?!!!!!!!!!?????” என்று பதிவிட்டார்.
ஆனால் நாசாவும் மற்றும் வானியலாளர்களின் பெரும்பான்மையினரும் இதுவரை செய்யப்பட்ட அனைத்து அவதானிப்புகளையும் இயற்கையான, வேற்றுக்கிரகவாசிகள் அல்லாத நிகழ்வுகளால் விளக்க முடியும் என்று தெளிவாக வலியுறுத்துகின்றனர்.
இதுவரை நமக்குத் தெரிந்தது என்ன?
3I/அட்லஸ் முதன்முதலில் ஜூலை 2025-இல் சிலியில் உள்ள நாசாவால் நிதியளிக்கப்பட்ட அட்லஸ் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது முதல் இது உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
பட மூலாதாரம், Atlas/University of Hawaii/Nasa
“நமக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன, அதன் பிறகு இந்தப் பொருளை நாம் மீண்டும் பார்க்க மாட்டோம்,” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியரான கிறிஸ் லின்டாட் கூறுகிறார். “அதனால் எங்களால் முடிந்தவரை அதிகமான தரவுகளைப் பெற நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.”
சிலர் இது நியூயார்க்கின் மன்ஹாட்டன் அளவு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து கிடைத்த அளவீடுகள் இதன் விட்டம் 5.6 கிலோமீட்டரோ அல்லது 440 மீ சிறியதாகவோ இருக்கலாம் என்று கூறுகின்றன.
இது கண்டுபிடிக்கப்பட்டபோது விநாடிக்கு சுமார் 61 கிமீ வேகத்தில் விண்வெளியில் விரைந்து கொண்டிருந்ததாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறுகிறது.
இது எங்கிருந்து வந்தது?
3I/அட்லஸ் ஒரு தொலைதூர நட்சத்திர அமைப்பின் பிறப்பின் போது உருவாகி, பில்லியன் கணக்கான ஆண்டுகளாக விண்மீன் இடையேயான வெளியில் (interstellar space) பயணித்து வந்துள்ளது என்று வானியலாளர்கள் நினைக்கிறார்கள்.
இது நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வால் நட்சத்திரமாக இருக்கலாம்; ஒரு ஆய்வு அதன் வயதை 7 பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள், இது 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான நமது சொந்தச் சூரிய குடும்பத்திற்கு முன்பே இருந்ததாகும்.
“இதன் பொருள் நமது விண்மீன் மண்டலத்தின் வரலாற்றின் ஆரம்பத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி இது நமக்குத் தெரிவிக்கிறது,” என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார்.
இந்த வால் நட்சத்திரம் தனுசு விண்மீன் குழுவின் (constellation Sagittarius) திசையில் நம்மிடம் வந்தது, இது நமது பால்வெளி விண்மீன் மண்டலத்தின் மையம் இருக்கும் இடமாகும்.
பட மூலாதாரம், M Hopkins/Ōtautahi-Oxford team; Base map: Esa/Gaia/DPAC, S Payne-Wardenaar
இது பூமியில் இருந்து பார்க்க முடியாதவாறு அக்டோபரில் சூரியனுக்குப் பின்னால் கடந்து சென்றது, இதனால் அது ஏன் “மறைந்திருந்தது” என்பது பற்றிய அவதானிப்புகளுக்கு தூண்டுகோலானது.
ஆனால், பல விண்வெளி ஆய்வுச் சாதனங்கள் வால் நட்சத்திரத்தைக் கண்காணித்து வருகின்றன, இது ஏற்கெனவே தரையில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூரியனுக்கு அருகில் வெப்பமடைதல்
3I/அட்லஸ் சூரியனை நோக்கிய தனது பயணத்தில் வெப்பமடைந்து, ஈர்ப்பு விசை அல்லாத முடுக்கத்தைக் (non-gravitational acceleration) காட்டியது – அதாவது ஈர்ப்பு விசையால் நகரும் வேகம் என எதிர்பார்க்கப்படுவதை விட அதிக வேகமாக நகர்ந்தது.
ஒரு “தொழில்நுட்ப ராக்கெட் எஞ்சின்” இதை உந்தித் தள்ளுவதாக இருக்கலாம் என்று பேராசிரியர் லோப் ஊகித்தார், இதனால் வேற்றுக்கிரக விண்கலம் பற்றிய தலைப்புச் செய்திகள் மற்றும் மீம்கள் இணையத்தில் வெள்ளம்போல் பெருகின.
பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/K Meech (IfA/U Hawaii); Processing: J Miller, M Zamani
ஆனால் வால் நட்சத்திரங்களை அளவிடுவதில் நிபுணத்துவம் வாய்ந்த பல விஞ்ஞானிகள், இந்த முடுக்கம் வாயு வெளியேற்றத்தின் (outgassing) வரம்புக்குள் தான் உள்ளது என்று கூறுகின்றனர் என்று பேராசிரியர் லின்டாட் விளக்குகிறார்.
வெப்பமடையும் வால் நட்சத்திரத்தில் உள்ள சில பொருட்கள் திடப் பனிக்கட்டியிலிருந்து வாயுவாக மாறும் போது, மேகம் மற்றும் தூசி தாரைகளை வெளியேற்றுகிறது. இந்த தாரைகள், உந்துவிசைகளைப் போலச் செயல்படுகின்றன.
உண்மையில், 3I/அட்லஸ் அதி தீவிரமாகச் செயல்படுவதாகத் தோன்றியது.
ஒரு வால் நட்சத்திரத்தில் இருந்து வெளியேற்றப்படும் தூசி பொதுவாக ஒளியைப் பிரதிபலிக்கும், இது சூரியனை நெருங்கும்போது வால் நட்சத்திரத்தைப் பிரகாசமாக்குகிறது. 3I/அட்லஸ் மிக விரைவாகப் பிரகாசமானது.
இது சிவப்பு நிறத்திலிருந்து நீல நிறமாக மாறியிருக்கலாம் என்ற சில தகவல்களும் உள்ளன, இதனால் ஒரு வேற்றுக்கிரக ஆற்றல் மூலத்தைப் பற்றிய கோட்பாடுகள் தூண்டப்பட்டன.
வானியலாளர்கள் இது ஏன் என்று துல்லியமாகக் கண்டறிய இன்னும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், ஏராளமான இயற்கையான விளக்கங்கள் உள்ளன என்று கூறுகின்றனர்.
இந்த விரைவான பிரகாசமடைதல், “அங்கு நிறைய பனிக்கட்டிகள் உள்ளன என்பதைக் குறிக்கலாம்,” என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார்.
நிற மாற்றம் உண்மையாக இருந்தாலும், மற்றும் அது அளவிடப்பட்ட விதத்தில் ஏற்பட்ட தவறாக இருந்தாலும் இது மாறும் வேதியியலைக் குறிக்கலாம்.
பட மூலாதாரம், Nasa/SPHEREx
“நாம் உண்மையில் செய்ய விரும்புவது வால் நட்சத்திரத்தின் உள் பகுதி எதனால் ஆனது என்பதைக் கண்டுபிடிப்பதுதான்,” என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார்.
மர்மமான வேதியியல்
3I/அட்லஸ்ஸின் ரசாயன அமைப்பைப் புரிந்துகொள்வது, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அது தோன்றிய தொலைதூர நட்சத்திர அமைப்பு எப்படி இருந்தது என்பதைப் பற்றி நமக்குத் தெரிவிக்கலாம்.
தொலைநோக்கிகள் இதுவரை வால் நட்சத்திரத்தில் நிறைய கார்பன் டை ஆக்சைடைப் பார்த்துள்ளன.
மேலும் இது நிக்கல் என்ற உலோகத் தனிமத்தில் செறிவூட்டப்பட்டதாகத் தெரிகிறது – இந்த அவதானிப்பு வேற்றுக் கிரக விண்கலம் என்ற கருத்தை தீவிரப்படுத்தியுள்ளது, ஏனெனில் நமது சொந்த விண்கலங்களின் பல பாகங்களில் நிக்கல் உள்ளது.
தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் பாட்காஸ்டில் பேசிய ஈலோன் மஸ்க், முழுவதுமாக நிக்கலால் செய்யப்பட்ட ஒரு விண்கலம் மிகவும் கனமாக இருக்கும், அது “ஒரு கண்டத்தையே அழிக்கக்கூடும்” என்று குறிப்பிட்டார்.
ஆனால், 2019-இல் கண்டுபிடிக்கப்பட்ட இண்டர்ஸ்டெல்லார் வால்நட்சத்திரமான 2I/போரிசோவ் உட்பட மற்ற வால்மீன்களிலும் நிக்கல் காணப்பட்டுள்ளது.
மிகுதியான நிக்கல் இருப்பது 3I/அட்லஸ் உருவான சூழலை பிரதிபலிக்கலாம் அல்லது அதன் நீண்ட விண்மீன் பயணத்தில் வால் நட்சத்திரம் விண்வெளிக் கதிர்வீச்சால் தாக்கப்பட்டிருக்கலாம். இது அதன் மேற்பரப்பு வேதியியலை மாற்றியிருக்கலாம் என்று ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
வெளியேறும் வழியில்
அக்டோபர் மாத பிற்பகுதியில் சூரியனைத் தாண்டிச் சென்ற 3I/அட்லஸ் விரைவில் விடைபெறும்.
இது டிசம்பர் 19 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில், 270 மில்லியன் கிமீ என்ற பாதுகாப்பான தூரத்திற்கு வரும். இது சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் தூரத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தூரம் ஆகும்.
பட மூலாதாரம், Spacecraft: Esa/ATG medialab; Jupiter: Nasa/Esa/J Nichols (Uni of Leicester)
பல விண்வெளி மற்றும் தரை அடிப்படையிலான ஆய்வகங்கள் அதிக அளவீடுகளை எடுக்கமுடியும் என நம்புகின்றன, மேலும் பொழுதுபோக்கு வானியலாளர்கள் கூட 8-இன்ச் தொலைநோக்கி மூலம் அதைப் பார்க்க முடியும் என்கின்றனர்.
இதுவரை மூன்று விண்மீன் இடையேயான வால் நட்சத்திரங்களை மட்டுமே பார்த்திருப்பதால், இந்த பண்டைய பயணிகளைப் பற்றி நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
“விண்மீன் மண்டலத்தில் இவற்றைப் போல பில்லியன்கணக்கானவை இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம், நாம் மூன்றைதான் பார்த்திருக்கிறோம்,” என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார். “இது மிகவும் ஆரம்ப நிலை என்பதால் இது அசாதாரணமானதா என்று சொல்வது கடினம்.”
சிலியில் உள்ள வேரா ரூபின் ஆய்வகம் போன்ற சக்திவாய்ந்த புதிய தொலைநோக்கிகள் மூலம், அடுத்த பத்தாண்டுகளில் மேலும் டஜன் கணக்கானவற்றைக் கண்டுபிடிப்போம் என்று அந்த வானியற்பியலாளர் நம்புகிறார்.
“அப்போது, எந்த வகையான நட்சத்திரங்கள் கோள்களை உருவாக்குகின்றன, பொதுவான கலவைகள் என்னென்ன என்பது பற்றி நம்மால் சொல்ல முடியும். மேலும் நமது சூரிய குடும்பம் இந்தப் படத்தில் எப்படிப் பொருந்துகிறது என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை நாம் பெறலாம்,” என்று அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு