• Fri. Nov 7th, 2025

24×7 Live News

Apdin News

4 ஆண்டுகளில் 211 மசோதாக்களில் 170-க்கு ஒப்புதல்: தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் | Is there any delay in approving bills passed in the Legislative Assembly? – Explanation from the Governor’s Office

Byadmin

Nov 7, 2025


சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானதாக உள்ளதாகவும், சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 31, 2025 வரை ஆளுநர் மாளிகையால் பெறப்பட்ட மசோதாக்களில் 81% மசோதாக்கள் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. (இவற்றில் 95% மசோதாக்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.) 13% மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன (இவற்றில் 60% மசோதாக்கள் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன). மீதமுள்ள மசோதாக்கள் அக்டோபர், 2025-இன் இறுதி வாரத்தில் பெறப்பட்டு, பரிசீலனையில் உள்ளன.

18.09.2021 முதல் 31.10.2025 வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 211. ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மசோதாக்களின் எண்ணிக்கை 170. இவற்றில் 73 மசோதாக்களுக்கு ஒரு வாரத்திலும், 61 மசோதாக்களுக்கு ஒரு மாத காலத்திலும், 27 மசோதாக்களுக்கு மூன்று மாத காலத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 9 மசோதாக்கள் மூன்ற மாத காலத்துக்குப் பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களின் எண்ணிக்கை 27. இவற்றில் மாநில அரசின் பரிந்துரையின்படி அனுப்பிவைக்கப்பட்டுளள மசோதாக்களின் எண்ணிக்கை 16. குறிப்புகளுடன் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை 4. மாநில அரசால் திரும்ப பெறப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை 2.

மேற்கண்ட விவரங்கள், சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் கூறப்படும் தவறான குற்றச்சாட்டுகளை மறுத்து உண்மைத்தன்மையை நிரூபிக்கின்றன. மேலும் சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, சட்டப்பேரவையால் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

10 மசோதாக்கள், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டு அரசுக்குத் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும், இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டபோது, அவை நாடாளுமன்ற சட்டத்தின்கீழ் இயற்றப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிகளுக்கு முரணாக இருந்ததாலும், அவை மாநில சட்டமன்றத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாகக் கருதப்பட்டதாலும், ஆளுநர் அந்த மசோதாக்களை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு ஆளுநர் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு மசோதாவையும் உரிய கவனத்துடன் ஆய்வு செய்துள்ளார். ஆளுநர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்குவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கடமைகளைப் பின்பற்றி, மாநில மக்களின் நலன்களைக் காப்பதிலும், உண்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டுள்ளார்.

மேலும், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற நேர்மையுடனும், உரியகவனத்துடனும் செயல்பட்டு, தனது அரசிலமைப்புக் கடமைகளை அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி அனைத்துச் சட்டங்களும், அரசியலமைப்பிற்கு உட்பட்டு இயற்றப்படுவதை உறுதி செய்கிறார்.

ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் மீது மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளார். மேலும், தமிழர் பாரம்பரியம், கலை மற்றும் இலக்கியத்தை முன்னிலைப்படுத்தும் ஆன்மீக, கலாச்சார மற்றும் மொழி சார்ந்த முன்னெடுப்புகளுக்கு ஆதரவளித்து வருகிறார். இது தமிழர் பண்பாட்டின் மீது ஆளுநரின் ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்துகிறது. ஆளுநர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin