சல்மான் கான் நடித்த ‘டைகர் 3’ திரைப்படத்தில் தோன்றிய பஞ்சாபின் பிரபல உடற்கட்டழகர் (Bodybuilder) மற்றும் நடிகர் வரிந்தர் சிங் குமன் காலமானார்.
அவர் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
பிபிசி பஞ்சாபி செய்தியாளர் பிரதீப் சர்மாவின் கூற்றுப்படி, சுமார் 42 வயதான வரிந்தர் குமன், குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குர்தாஸ்பூரில் உள்ள தல்வண்டி ஜுக்லா கிராமத்தில் பிறந்த அவர், 1988 இல் ஜலந்தரில் உள்ள கை நகருக்கு (மாடல் ஹவுஸ்) குடிபெயர்ந்தார்.
அவர் லியால்பூர் கல்சா கல்லூரியில் (Lyallpur Khalsa College) எம்பிஏ படித்தவர். அவரது தந்தையின் பெயர் உப்பிதிந்தர் சிங். அவரது தாய் உயிருடன் இல்லை.
பட மூலாதாரம், Varinder Ghuman/FB
படக்குறிப்பு, வரிந்தர் குமன் டைகர் 3 திரைப்படத்தில் நடித்தார்
வரிந்தரின் சகோதரர் பக்வந்த் சிங் ஒரு வருடத்திற்கு முன்பு காலமானார்.
வரிந்தர் குமனுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் (இரண்டு மகன்கள், ஒரு மகள்) உள்ளனர்.
தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக அவர் வியாழக்கிழமை அமிர்தசரஸில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், மாலை 6 மணியளவில் அவர் காலமானார் என்ற செய்தி கிடைத்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
வரிந்தர் சிங் குமன் விவசாயம் மற்றும் பால் பண்ணைத் தொழிலும் செய்து வந்தார்.
உடற்கட்டமைப்பின் மீதான ஆர்வம்
வரிந்தர் குமன் சிறுவயதிலிருந்தே உடற்கட்டமைப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தனது வீட்டிற்கு அருகில் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தையும் (Gym) தொடங்கினார்.
2024 இல் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் ஒரு முழுமையான சைவ உணவுப் பிரியர் என்றும், தான் ஒரு நாம்தாரி குடும்பத்தைச் (Namdhari family) சேர்ந்தவர் என்பதால் முட்டை கூடச் சாப்பிடுவதில்லை என்றும் வரிந்தர் கூறியிருந்தார்.
அவர் சமூக ஊடகங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
வரிந்தர் 2009 ஆம் ஆண்டில் ‘மிஸ்டர் இந்தியா’ பட்டத்தை வென்றார். மேலும், உடற்கட்டமைப்பில் ஆசிய அளவிலும் அவர் புகழ் பெற்றார். அதன் பிறகு, 2012 ஆம் ஆண்டு ‘கபடி ஒன்ஸ் அகைன்’ (Kabaddi Once Again) என்ற பஞ்சாபி திரைப்படத்தின் மூலம் அவர் நடிப்பு உலகில் நுழைந்தார்.
அதன் பிறகு, அவர் பல பஞ்சாபி மற்றும் இந்தி திரைப்படங்கள் மற்றும் தென்னிந்தியப் படங்களிலும் நடித்தார்.
பட மூலாதாரம், Varinder Ghuman/FB
படக்குறிப்பு, வரிந்தர் இந்தி, மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளார்
ஆனால், திரைப்படங்களைப் பற்றிப் பேசுகையில், அவர் தன்னைத் திரைக்கு ஏற்றவராகக் கருதவில்லை என்று கூறியிருந்தார். இதற்குக் காரணம் கூறுகையில், பல இயக்குநர்கள் தன்னை எடையை குறைக்கும்படி கூறியதாகவும், ஆனால் தனக்குள்ளே இருக்கும் விளையாட்டு வீரனை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
“நான் என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன், 2-4 படங்கள் குறைவாக நடித்தாலும் அது எனக்கு முக்கியமில்லை. திரைப்படங்களில் கிடைக்கும் அதே புகழ் இந்த விளையாட்டிலும் எனக்குக் கிடைக்கிறது. நான் உயிரோடு இருக்கும் வரை, இந்த அடையாளத்தில்தான் இருப்பேன். நான் இறந்த பிறகும் மக்கள் என்னை ஒரு விளையாட்டு வீரராகவும், உடற்கட்டழகராகவும் (Bodybuilder) தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Varinder Ghuman/FB
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், வளர்ச்சியை மையமாகக் கொண்ட அரசியல் செய்ய விரும்புவதாகக் கூறி, அரசியலில் நுழைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
உடைகளைப் பற்றிப் பேசிய அவர், தனது உடலமைப்புக்கு ஏற்றவாறு ஆடை வடிவமைப்பாளர்கள் மும்பை மற்றும் ஜலந்தரில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.