• Fri. Oct 24th, 2025

24×7 Live News

Apdin News

5 ஆண்டுகளில் சாலை அமைத்ததாக கணக்கு காட்டிய தமிழக அரசின் ரூ.78 ஆயிரம் கோடி நிதி எங்கே? – அண்ணாமலை கேள்வி  | Annamalai questions TN govt about Road funds

Byadmin

Oct 24, 2025


சென்னை: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சாலைகள் அமைத்ததாக கணக்கு காட்டிய ரூ.78 ஆயிரம் கோடி நிதி எங்கு சென்றது என முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக – கர்நாடகா எல்லைப் பகுதியான ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி ஆகிய மலை கிராமங்களுக்கு நேரடியாகச் செல்ல பாதை இல்லை. கர்நாடக, தமிழக வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள கர்கேகண்டி நீரோடை பள்ளம் வழியாக சுமார் 20 கி.மீ. பயணம் செய்தே இந்த கிராமங்களுக்குச் செல்ல முடியும். இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக,கர்கேகண்டி நீரோடை பள்ளத்தில், காட்டாறு வெள்ளமாக ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர். இங்கு சாலைவசதி கோரி நீண்டநாட்களாக கோரிக்கை வைத்தும் அரசு நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 5 ஆண்டுகளில் சாலைகள், பாலங்கள் அமைக்க சுமார் ரூ.78 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கை கூறுகிறது. அந்த நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சாலை வசதிகள் இல்லாத மலைக் கிராமங்களுக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக சாலைகள், உயர்மட்டப் பாலங்கள் அமைத்து தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



By admin