• Wed. May 14th, 2025

24×7 Live News

Apdin News

5 ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு மீனவர் சங்கம் வலியுறுத்தல் | Fishermen association urges the govt for boats should be inspected only once every 5 years

Byadmin

May 14, 2025


சென்னை: மீன்பிடி படகுகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்யும் முறையை மாற்றி, 5 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என, தமிழக அரசை மீனவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, அனைத்து மீனவர்கள் சங்கங்களின் தலைவர் நாஞ்சில் பி.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் விசைப் படகுகள் மற்றும் இயந்திரங்கள் பொருத்திய நாட்டுப் படகுகள் போன்றவற்றை மத்திய, மாநில அரசுகள் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்யும் நடைமுறை இருந்துவந்தது. இந்த வழக்கம் மாற்றப்பட்டு தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மீன்பிடி படகுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வின்போது, மீனவர்களை உள்நோக்கத்தோடு அதிகாரிகள் அணுகுகின்றனர்.

மாதந்தோறும் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கு மானிய டீசல் பிடிக்கச் செல்லும்போது அனைத்து படகுகளும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா, வார்ப்பு கட்டணம் கட்டப்பட்டுள்ளதா, தீர்வு நிதி கட்டப்பட்டுள்ளதா என எல்லா ஆய்வுகளும் செய்துதான் மானிய டீசல் வழங்கப்பட்டு வருகிறது.

மீன்பிடித் தொழில் மூலம் ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் அந்நிய செலாவணி வருவாய் ஈட்டப்படுகிறது. கடற்கரையை பாதுகாக்கும் பாதுகாவலராக இருக்கும் மீனவர்களை படகுகள் ஆய்வு என்ற பெயரில் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்.

எனவே தமிழக முதல்வர், மீன்வளத் துறை அமைச்சர், மீன்வளத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மீன்பிடி படகுகளை ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்வதை மாற்றி 5 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin