• Thu. Aug 28th, 2025

24×7 Live News

Apdin News

50% வரி அமல் – திருப்பூர் ஜவுளி தொழிலுக்கு ‘பேரிடியை’ ஏற்படுத்துகிறதா?

Byadmin

Aug 28, 2025


காணொளிக் குறிப்பு, அமலுக்கு வந்த டிரம்பின் வரி; திருப்பூர் ஜவுளி தொழிலின் நிலை என்ன?

காணொளி: திருப்பூர் ஜவுளி தொழிலுக்கு ‘பேரிடியை’ ஏற்படுத்தும் டிரம்பின் 50% வரி – வேலை பறிபோகும் அபாயம்

கடந்த ஜூலை மாத இறுதியில் இந்திய பொருட்களுக்கு 25 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். பின்னர் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் அதை 50 சதவிகிதமாக உயர்த்தினார். இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்திருத்தார். ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்த வரி அமலுக்கு வந்தது. இது திருப்பூர், கோவை, கரூர் மாவட்டங்களை சேர்ந்த பின்னலாடை மற்றும் ஜவுளித் துறையில் எந்த வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற கருத்துக்களை தொழிற்துறையினர் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.

திருப்பூரில் 10 ஆயிரம் நிறுவனங்கள் இருக்குமென கொண்டால் அதில் சுமார் 2,500 நிறுவனங்கள் பெரிய அளவில் ஏற்றுமதி செய்து வந்தன. 2024 – 25 நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் 40 சதவிகிதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அமெரிக்காவின் திடீர் வரிவிதிப்பு அறிவிப்பால் தொழிலில் மோசமான நிலையை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளரான பொன்னுசாமி, இந்த வரி அமலுக்கு வருவதற்கு முன்பே உற்பத்தியை நிறுத்தி விட்டதாகவும், இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் கூறினார்.

“கடந்த வாரத்திலேயே பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளனர். அமெரிக்க வாடிக்கையாளர்கள் இந்த வரியையும் தங்களையே செலுத்த கூறுவதாகவும்” இவர் கூறுகிறார்.

“தற்போது அமெரிக்க இறக்குமதியாளர்கள் இறக்குமதி வரியையும் எங்களையே செலுத்த சொல்கின்றனர். முன்பு இருந்த 16 சதவீத வரி மற்றும் தற்போது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரி இரண்டையும் சேர்த்து 66 சதவீத வரியை உள்ளடக்கிய விலையில் பொருட்களை தர வேண்டிய நிலை உள்ளது. 70 சதவீதம் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.”

சீனாவுக்கு மாற்றாக அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் நேரடி முதலீடு செய்து வந்ததாகக் கூறிய இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் பிரபு தாமோதரன், அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த சமயத்தில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த வரி விதிப்பு பேரிடியாக உள்ளது என்றார்.

“இந்தியாவில் இருந்து வருடத்துக்கு ரூ.73 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளி பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்தோம். குறிப்பாக கடந்த மூன்று நான்கு வருடங்களாக இந்த தொழில் வருடாந்திர வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்தது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு நேரடியாகவே வந்து முதலீடு செய்து வந்தனர். சீனாவிற்கு மாற்றாக இந்தியா இருக்கும் என்ற அடிப்படையில் இதை அவர்கள் மேற்கொண்டனர். அமெரிக்க ஏற்றுமதியை மட்டும் முழுமையாக நம்பி நிறுவனங்கள் கட்டமைப்பை உருவாக்கிய நிலையில் இந்த வரிவிதிப்பு பேரிடியாக நிகழ்ந்துள்ளது.”

போட்டி நாடுகளுக்கு குறைவான வரி விதிக்கப்பட்டுள்ளதால், இறக்குமதியாளர்கள் அந்த நாடுகளிடமிருந்து பொருட்கள் வாங்குவார்கள் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

“நமது போட்டிநாடுகளான பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம், இலங்கை போன்ற நாடுகளுக்கு நம்மைவிட வரிவிதிப்பு குறைவாக உள்ளது. அவர்களுக்கு 30 முதல் 35 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதிக வரி விதிப்பால் தொடர்ந்து முன்பை போல் நம்மால் ஏற்றுமதி செய்ய முடியுமா என்பது சந்தேகமே. வாங்குபவர்கள் 5 சதவீத விலை வித்தியாசம் இருந்தாலே ஒரு நிறுவனத்திலிருந்து மற்ற நிறுவனத்திற்கு செல்வர். 10 சதவீத வித்தியாசம் இருப்பதால் வேறு நாடுகளில் வாங்க தான் முயற்சி செய்வார்கள். இதனால் 60 முதல் 70 சதவீதம் வரை அமெரிக்க சந்தையை சார்ந்து உற்பத்தி செய்த நிறுவனங்களின் இயக்கமே கேள்விக்குறியாகி விடும்.” என்கிறார் பிரபு தாமோதரன்.

அமெரிக்காவிலிருந்து வரும் ஆர்டரின் அடிப்படையிலேயே பெரும்பாலும் உற்பத்தி நடந்து வந்ததாகக் கூறும் பிரபு தாமோதரன், தற்போதைய இந்த வரியால் 40 சதவீதம் பணியாட்களைப் பணியிலிருந்து நீக்கவுள்ளதாகக் கூறினார்.

“திருப்பூரில் 40 சதவீத அளவிற்கு அமெரிக்க ஆர்டர்கள் தான் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. புதிய வரிவிதிப்பால் 40 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவை எடுப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

அமெரிக்காவில் இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி அதிகரித்துள்ளதால், பெரும்பாலான ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

“3 அமெரிக்க டாலருக்கு தயாரிக்கப்பட்ட டி-சர்ட்டுக்கு 1.5 டாலர் வரிவிதிக்கப்படுகிறது. ஒரு டி-சர்ட்டை 3 டாலருக்கு இறக்குமதி செய்த அமெரிக்க நிறுவனம் தற்போது 4.5 டாலருக்கு இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு ஆர்டர் தரும் அமெரிக்க நிறுவனங்கள் ஆர்டர்களை அப்படியே நிறுத்திவிடுமாறு கூறிவிட்டன.

திருப்பூரில் உள்ள நிறுவனங்களை மூன்றாக வகைப்படுத்திய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச்செயலாளர் குமார் துரைசாமி. இதில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் நிலவுவதாக” அவர் கூறினார்.

திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மூன்று வகையாக பிரிக்கலாம். முற்றிலுமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், அமெரிக்கா மற்றும் இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனங்கள் , அமெரிக்கா அல்லாத மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனங்கள். இதில் அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனங்கள் அதிக பாதிப்பை அடையும். அடுத்ததாக அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் சற்று குறைவான பாதிப்பை அடையும். அதேபோல் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாத நிறுவனங்களுக்கும் கூட சிறிய பாதிப்பு இருக்கும். அமெரிக்க வரிவிதிப்பு சிக்கல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாது. ஆனால் இந்த சிக்கல் கற்றுக்கொடுத்த பாடத்தின் காரணத்தால் வேறு சந்தைகளை நோக்கி முதலிரண்டு வகைப்பாடு நிறுவனங்கள் செல்லும் போது , உள்ளூரிலேயே போட்டி ஏற்படும். இதனால் மூன்றாம் வகை நிறுவனங்களும் பாதிப்படையும் சூழல் உள்ளது.

“இந்தியாவிலிருந்து 10 பில்லியன் டாலர் அளவிற்கு தங்க வர்த்தகம் நடைபெற்று வருவதாகவும், இந்த வரி விதிப்பால் அது பாதிப்படையும் வாய்ப்புள்ளதாகவும்” கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறினார்.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மொத்த தங்கத்தில், அமெரிக்காவிற்கு மட்டுமே 40%, தங்கம் 10 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த வரிவிதிப்பால், நமது நாணயம் வீழ்ச்சி அடைந்தால், அதிக பணம் கொடுத்து டாலரை வாங்கி , அதன் மூலமாகத்தான் தங்கம் வாங்க வேண்டும். உலகசந்தையில் தங்கத்தின் விலை குறைவாக இருக்கும்போது, இந்தியாவில் அதிகமாக இருக்கக்கூடிய நிலை ஏற்படும். வேலை வாய்ப்புகள் குறையும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin