• Thu. Aug 28th, 2025

24×7 Live News

Apdin News

50% வரி: இறக்குமதி வரி என்பது என்ன? யார் செலுத்த வேண்டும்? 4 கேள்வி-பதில்கள்

Byadmin

Aug 28, 2025


அமெரிக்க வரிகள் இந்தியப் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க வரிகள் இந்தியப் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும்

அமெரிக்கா இந்தியாவின் மீது 50 சதவிகித இறக்குமதி வரி (tariff) விதிக்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்தியாவின் மீது புதிய வரிகள் இன்று (27-08-2025) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் யுக்ரேன் போருக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறது என்பதை இந்தியா மீது கூடுதலாக 25 சதவிகிதம் (ஏற்கெனவே 25% வரி உள்ளது) வரிவிதிப்பதற்கு காரணம் என வாதிடுகிறர் டிரம்ப்.

எனினும், டிரம்பின் இந்த முடிவை அடிப்படையற்றது என இந்தியா கூறியுள்ளது. மேலும், பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், “இந்த நடவடிக்கை நியாயமற்றது, காரணமற்றது மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது” என்று கூறியுள்ளது.

“இந்திய அரசு தற்போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்கிறது” என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதமர் நரேந்திர மோதியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கைக்குலுக்கிக்கொள்ளும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோதி அமெரிக்காவுக்குப் பயணம் செய்திருந்தார் (கோப்புப் படம்)

டாரிஃப் (இறக்குமதி வரி) என்றால் என்ன, அது எப்படி செயல்படுகிறது?

டாரிஃப் என்பது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் ஒரு வரியாகும். இது பொருளின் விலையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமாகக் கணக்கிடப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, 10 சதவிகித வரிகள் என்றால், ஒரு பொருளின் விலை 100 ரூபாய் என்றால், அதற்கு 10 ரூபாய் வரி விதிக்கப்படும். அதாவது, வரிகள் விதிக்கப்பட்ட பிறகு அந்தப் பொருளின் விலை 110 ரூபாயாக உயரும்.

டாரிஃப் எனப்படும் வரிகள் ஏற்றுமதி செய்பவர்களுக்கு அல்லாமல், பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு நிறுவனம் 50,000 டாலர் விலையுள்ள காரை இறக்குமதி செய்தால், அதன் மீது 25 சதவிகித வரி விதிக்கப்பட்டால், ஒவ்வொரு காருக்கும் 12,500 டாலர் வரி செலுத்த வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், வரி விகிதங்களின்படி அரசுக்கு வரி செலுத்த வேண்டும்.

இதன் பொருள், நிறுவனங்கள் வரியின் முழு சுமையையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கலாம்.

இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் பொருளின் விலையை உயர்த்தி வரிச் செலவை ஈடு செய்தால், இதன் பொருளாதார சுமை முழுவதும் அமெரிக்க நுகர்வோர் மீது விழும்.

பொருட்களின் விலை அதிகரிக்கும்போது, அவற்றுக்கான தேவை குறையக்கூடும். அதாவது, வரி விகிதம் அதிகரிக்கும் போது, பொருட்களின் விலையும் அதிகளவு உயரக்கூடும்.

இதுபோன்ற சூழ்நிலையில், விலையுயர்ந்த பொருட்களுக்கான தேவை அமெரிக்க நுகர்வோர் மத்தியில் குறையும், அதன் விளைவாக அமெரிக்க நிறுவனங்கள் குறைவான பொருட்களை இறக்குமதி செய்யும்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், அமெரிக்க நிறுவனங்களும், நுகர்வோரும் பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் நாடுகளையும் சந்தைகளையும் நாடுவார்கள்.

தேசிய அவசரகால அதிகாரங்களின் கீழ் இத்தகைய பல வரிகளை விதிக்கும் உரிமை டிரம்புக்கு இல்லை என்று மே மாதத்தில் அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் கூறியது.

எனினும், வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, வரிகள் அமலில் இருக்கலாம் என்று மறுநாளே மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.

ஏன் வரிகள் விதிக்கப்படுகின்றன?

டிரம்ப் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரிகள் மூலம் அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க டிரம்ப் விரும்புகிறார்

வரிகள் விதிப்பது அமெரிக்க நுகர்வோர் அதிக அமெரிக்கப் பொருட்களை வாங்குவதற்கு வழிவகுக்கும் என டிரம்ப் கூறுகிறார்.

இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பது வரி வசூலை அதிகரிக்கும் என்பதுடன் அமெரிக்காவில் முதலீடு செய்து பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் என்பது அவரது கூற்று.

வரிகள் உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவற்றைப் பாதுகாக்கின்றன என டிரம்ப் பலமுறை கூறியுள்ளார்.

டிரம்ப் வரிகளை அமெரிக்கப் பொருளாதாரத்தையும் வரி வருவாயையும் உயர்த்தும் ஒரு வழியாகக் கருதுகிறார்.

உலகின் பிற நாடுகளிலிருந்து அமெரிக்கா வாங்கும் பொருட்களுக்கும், அமெரிக்கா பிற நாடுகளுக்கு விற்கும் பொருட்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் குறைக்க விரும்புகிறார்.

இது வர்த்தகப் பற்றாக்குறை என்று அழைக்கப்படுகிறது. “துரோகிகள்” அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொண்டதாக டிரம்ப் கூறுகிறார்.

வெவ்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வெவ்வேறு வரிகளை டிரம்ப் அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, “எனது திட்டத்தின் கீழ், அமெரிக்கத் தொழிலாளர்கள் இனி தங்கள் நாட்டில் வெளிநாட்டவர்களால் வேலை இழப்பது குறித்து கவலைப்பட மாட்டார்கள். மாறாக, வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கள் வேலைகளை இழப்பது குறித்து கவலைப்படுவார்கள்” என்று டிரம்ப் கூறினார்.

டிரம்ப் உலகளாவிய பொருளாதார வரைபடத்தை அடிப்படையில் மாற்ற விரும்புகிறார், என பிபிசியின் பொருளாதார ஆசிரியர் ஃபைசல் இஸ்லாம். மேலும், சீனா மற்றும் ஐரோப்பா இடையிலான வர்த்தக உபரியை “அமெரிக்காவை கொள்ளையடிக்கும்” செயலாக கருதும் டிரம்ப், அதை குறைக்க விரும்புகிறார்.

2018 ஆம் ஆண்டில் அதிபராக இருந்தபோது, பாதுகாப்பு-தொழில்துறை துறையின் அடித்தளமாக உள்ள எஃகு மற்றும் அலுமினியத்தின் மீது வரிகளை அறிமுகப்படுத்தியதாகவும், இவை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

உலகளாவிய பொருளாதாரத்தில் அமெரிக்க வரிகளின் தாக்கம் என்ன?

துறைமுகத்தில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் வரிகள் உலகின் பல நாடுகளைப் பாதிக்கின்றன

டிரம்பின் அறிவிப்புகளால் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்கும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த சில நாட்களாக சந்தைகள் சற்று நிலையாக உள்ளன.

பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள், நேரடியாக பங்குகளில் முதலீடு செய்யாதவர்களையும் பாதித்துள்ளன, ஏனெனில் இது ஓய்வூதியங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் வட்டி விகிதங்களைப் பாதித்துள்ளது.

அமெரிக்க டாலரின் மதிப்பு பொதுவாக நிலையாக இருக்கும், ஆனால் ஒரு கட்டத்தில் இதிலும் பெரிய வீழ்ச்சி காணப்பட்டது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆகிய இரண்டுமே வரிகளின் விளைவாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்று கணித்துள்ளன.

இந்த இரு அமைப்புகளும் அமெரிக்கப் பொருளாதாரமே மிக மோசமான பாதிப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளன.

2025 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான புதிய புள்ளிவிவரங்கள், அமெரிக்கப் பொருளாதாரம் ஆண்டுக்கு 3% விகிதத்தில் வளர்ந்துள்ளதாகக் காட்டுகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமெரிக்க நுகர்வோருக்கு பணவீக்கம் அதிகரிக்கிறதா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி கைகுலுக்கும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவின் மீது 25 சதவீவிகித கூடுதல் வரிகளை விதிக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்

அமெரிக்காவின் பணவீக்க விகிதத்தில் வரிகளின் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அமெரிக்காவில் பணவீக்கம் 2.4% இலிருந்து 2.7% ஆக உயர்ந்துள்ளது. ஆடைகள், காபி, பொம்மைகள் மற்றும் மின்சார உபகரணங்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனம், வரிகளின் காரணமாக அமெரிக்க நுகர்வோருக்கு விலைகளை உயர்த்த உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் பாதிக்கு மேற்பட்ட பொருட்கள் வியட்நாம் மற்றும் இந்தோனீசியாவில் தயாரிக்கப்படுகின்றன, இவற்றின் மீது முறையே 20% மற்றும் 19% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

நைக்கி நிறுவனமும் அமெரிக்காவில் தனது பொருட்களின் விலைகள் உயரும் என்று கூறியுள்ளது. வரிகளால் தனது செலவு ஒரு பில்லியன் டாலர்கள் உயரக்கூடும் என்று இந்நிறுவனம், எச்சரித்துள்ளது.

சில நிறுவனங்கள் வெளிநாட்டுப் பொருட்களை குறைவாக இறக்குமதி செய்கின்றன, இதனால் கிடைக்கும் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் அமெரிக்கப் பொருட்களின் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு கார் முழுமையாக ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பு அதன் பல பாகங்கள் பலமுறை அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடாவின் எல்லைகளைக் கடக்கின்றன.

புதிய வரிகளால் அமெரிக்க எல்லையில் சுங்கச் சோதனைகளில் கடுமையான நடவடிக்கைகள் அதிகரிக்கும், இதனால் பொருட்கள் எல்லையைக் கடப்பதில் தாமதம் ஏற்படுவது இயல்பாகிவிடும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin