• Sat. Jan 4th, 2025

24×7 Live News

Apdin News

“500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா?” – அண்ணாமலை | Does the TN govt not have the funds to even improve 500 govt schools? – Annamalai

Byadmin

Jan 1, 2025


சென்னை: “500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதி இல்லையா? மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வரவேற்றிருக்கிறார். 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது தேர்தல் வாக்குறுதிகளில், சிதிலமடைந்த 10,000 அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் புதிதாகக் கட்டிக் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

சமீபத்தில், மாவட்டக் கல்வி அலுவலகங்களின் இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.5 கோடியைக் கூட கட்டாமல், இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது பள்ளிக் கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, “500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் நோக்கம் படிப்படியாக அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும்” என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். வாசிக்க > ‘தமிழக அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பது நியாயமற்றது’ – மார்க்சிஸ்ட் கண்டனம்



By admin