• Mon. Mar 17th, 2025

24×7 Live News

Apdin News

‘65 ஆண்டுகளாக யாருமே எதிர்த்து போட்டியிடவில்லை!” – திராவிட இயக்க மூத்த தலைவர் சு.துரைசாமிக்கு பாராட்டு | Praise for Dravidian Movement senior leader Su Duraisamy

Byadmin

Mar 16, 2025


கோவை: “எந்தப் பிரச்சினையையும் பொறுமையுடனும் விவேகத்துடனும் எதிர்கொள்ளக்கூடிய திறமை கொண்டவர். 65 ஆண்டுகள் தொடர்ந்து பொறுப்பு வகிப்பது மிகவும் சிரமமான காரியம்” என திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் சு.துரைசாமிக்கு கோவையில் நடந்த விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பஞ்சாலை தொழிற்சங்கங்கள் சார்பில், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர், கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் சு.துரைசாமிக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை கோவை, ஹோப்காலேஜ் அருகே உள்ள மணி மஹாலில் நடந்தது.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் சு.துரைசாமியின் 65 ஆண்டு கால தொழிற்சங்கப் பணிக்காக நடத்தப்பட்ட இந்த விழாவில், ‘எச்எம்எஸ்’ மாநில செயலாளர் டி.எஸ்.ராஜாமணி வரவேற்று பேசும்போது, “எந்த பிரச்சினையையும் பொறுமையுடனும், விவேகத்துடனும் எதிர்கொள்ளக்கூடிய திறமை கொண்டவர் சு.துரைசாமி. கூட்டு நடவடிக்கைக் குழு மூத்த தலைவர்களுடன் நீண்ட காலம் பயணித்தவர். கூட்டு நடவடிக்கை குழுவின் பொருளாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன பொதுச் செயலாளராக தொடங்கி இன்று வரை 65 ஆண்டு காலம் நடைபெறும் சங்க தேர்தல்களில் இயற்கையாக தொழிலாளர்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு செயலாற்றியவர். இவர் செயல்பாடுகள் காரணமாக யாரும் இவரை எதிர்த்து போட்டியிட முன்வரவில்லை. அக்காலத்தில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் என சங்கத்தில் எண்ணிக்கை இருந்தபோதும் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

கல்வியாளர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வாழ்த்துரையில் பேசும்போது, “தொழிற்சங்கத்தின் தலைவராக 65 ஆண்டுகள் பொறுப்பு வகிப்பது மிகவும் சிரமமான காரியம். அந்த வகையில் சு.துரைசாமியின் சேவை வியக்க வைக்கிறது. பாராட்ட வேண்டியவர்களை உரிய நேரத்தில் பாராட்ட வேண்டும் என்பது நம் மரபு.

கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள், முதலாளிகள் இடையே பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளும் பக்குவம் இருந்தது.

1991-ம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டு வரப்பட்ட பின் அனைத்தும் மாறியது. கரோனா நோய்த் தொற்று பரவலுக்கு பின் உலகளவில் கடும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. நாம் சிறப்பாக கடந்து வந்தோம்.

சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்தியாவின் சாதனையை உலகமே கண்டு வியக்கிறது. ஐந்து

டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை நோக்கி நம் பொருளாதாரம் செல்வது மகிழ்ச்சி. இருப்பினும் நம்மிடம் உள்ள இயற்கை வளம், மனித வளம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி குறைவாக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் தேசம் குறித்த சிந்தனை குறைந்து வருவது தான் காரணம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களித்து விட்டு, நாட்டை யாரோ பார்த்துக் கொள்வார்கள் என்ற மனநிலையில் உள்ளனர். பணம் பெற்று வாக்களிக்க தொடங்கிய நாள் முதல் தேச சிந்தனை முடிவுக்கு வந்துவிட்டது.

இன்றைய இளைஞர்களிடம் சமூக சிந்தனை இல்லை. இது ஆரோக்கியமானதல்ல. அவர்களுக்கு கல்வியுடன் பண்பாட்டையும் கற்றுத் தர வேண்டும். மகாத்மா காந்தியடிகள் கூறியுள்ள பொருளாதார கொள்கையை நாம் பின்பற்ற வேண்டும். நம் குழந்தைகளுக்கும் அதைச் கற்றுத்தர வேண்டும். நமது பண்பாடு, கலாசாரம், மொழியைச் தொலைத்து விட்டு உலகை ஆளலாம் என நினைப்பது முட்டாள்தனம்” என்று பேசினார்.

சு.துரைசாமி ஏற்புரையில் பேசும்போது, “போராட்டத்தில் ஈடுபட்டபோது, திமுக முன்னாள் அமைச்சர் ராஜராம் ஆளுங்கட்சியில் இருந்து கொண்டு நாம் போராடுவது ஏற்புடையதாக இல்லை என்றார். அவரிடம் கட்சி வேறு, தொழிலாளர் நலன் என்பது வேறு என கூறி எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன்” என்றார்.

மூத்த வழக்கறிஞர் என்.வி.நாக சுப்பிரமணியன், கூடுதல் தொழிலாளர் ஆணையர்( ஓய்வு) பி.மாரிமுத்து உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் ‘ஏஐடியூசி’ தொழிற்சங்க பொதுச் செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் மு.தியாகராசன் சிறப்புரையாற்றினார். சங்க நிர்வாகிகள் பழனிசாமி, சீனிவாசன், கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தொழிற்சங்கங்கள் சார்பில் சு.துரைசாமிக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.



By admin