கும்பகோணம்: கும்பகோணத்தில் 70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழை நீர் பல்வேறு காரணங்களால் வடியாததால் 5 மணி நேரம் பணிகள் மேற்கொள்ளும் இடத்தில் அமர்ந்து கும்பகோணம் எம்எல்ஏ மழைநீரை வடிய செய்துள்ளார்.
கும்பகோணத்தில் கடந்த ஆக.19-ம் தேதி பெய்த மழையின் போது சோலையப்பன் தெரு, ஆலையடி சாலை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதேபோல் வாழை, கரும்பு, தீவனப் புல் மற்றும் நெற்பயிர் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கியது.
இதையடுத்து அண்மையில் பெய்த பலத்த மழை நீரும் சேர்ந்து, சுமார் 3 அடிக்கு மேல் தேங்கியுள்ளது. பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டும் தேங்கிய மழை நீர் வடியாமல் இருந்துள்ளது. ஒருபுறம் இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அழுகி பாதிக்கப்பட்டது. மறுபுறம் நகர் பகுதியில் சூழ்ந்த மழைநீரால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையறிந்த எதிர்க்கட்சிகள், அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் துறை சார்ந்த அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளத்திருந்தனர்.
இதனிடையே, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் இன்று (அக்.30) காலை 9.30 மணியளவில், மாநகராட்சி அனைத்து பிரிவு அதிகாரிகளை, மழை நீர் தேங்கிய பகுதிக்கு அழைத்துச் சென்று, தேங்கிய மழை நீரை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வடியவைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தேங்கிய மழைநீர் வடிய வைக்கும் பணி நிறைவடையும் வரை இங்கே இருக்கப்போகிறேன் என அதிகாரிகளிடம் தெரிவித்து அந்த இடத்திலேயே நாற்காலியில் அமர்ந்தார். பின்னர், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் தொடங்கி மதியம் 2.30 மணிக்கு சாலையில் பள்ளம் தொண்டி தேங்கிய மழை நீரை வடியச் செய்துள்ளனர். அதன் பின்னர் எம்எல்ஏ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் காந்தி ராஜ், பொறியாளர் மாதவராஜ், நகர திட்டமிடுநர் அருள்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 70 நாட்களுக்கு மேல் தேங்கி நின்ற மழை நீரை வடியவைக்கும் பணியை, 5 மணி நேரம் அந்த இடத்தில் அமர்ந்திருந்து கண்காணித்த எம்எல்ஏ-விற்கு அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் கூறியதாவது: ”கும்பகோணத்தில் அண்மையில் பெய்த மழை நீரை வடியவைக்க, ரெட்டிராயர் குளத்திற்கு நீர் வரும் பாதையை கண்டறிந்து, அந்த வழியாக தேங்கிய மழை நீரை வடியவைக்க முடிவு செய்யப்பட்டன. அதன்படி, தேங்கிய மழை நீரை, எள்ளுக்குட்டையில் இருந்து, ரெட்டிராயர் குளத்திற்கு செல்லும் எள்ளுக்குட்டை வாய்க்கால் பாதையை கண்டறியப்பட்டன.
பின்னர், அந்த வாய்க்கால் பாதையை பொக்லைன் இயந்திரம் மூலம் குளத்திற்கு நீர் புகும் முகத்துவாரம் வரை தூர் வாரப்பட்டு, தேங்கிய மழை நீரை வடியவைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பழமையான வரைப் படம் மூலம் கண்காணித்து தூர்ந்து, மறைந்து போன ரெட்டிராயர் குளத்திற்கு செல்லும் எள்ளுக்குட்டை வாய்க்கால் பாதையை கண்டறிந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ரெட்டிராயர் குளம் நிரம்பினால், அந்த நீர் குளத்தில் இருந்து வெளியேறும் பாதை வழியாக காவிரி ஆற்றிற்குச் சென்று விடும். இந்தப் பகுதிகளில் வருங்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தேங்கிய மழைநீர் 2 நாட்களுக்குள் வடிய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் கூறினார்.