பட மூலாதாரம், Getty Images
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்களுக்கு மத்தியில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை மாலை திடீரென செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அனைத்து வகையான தாக்குதல்களையும் நிறுத்த இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாகக் கூறினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல்களை அளித்த விக்ரம் மிஸ்ரி, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தும் வகையில் உத்தரவுகள் பிறப்பித்துள்ளன என்று தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விக்ரம் மிஸ்ரி பேசுகையில்,
“பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல், இன்று (மே 10) பிற்பகல் 3:35 மணிக்கு இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரிடம் தொலைபேசியில் பேசினார்.
இந்த உரையாடலில், இன்று (மே 10) மாலை 5 மணி முதல் நிலம், கடல் மற்றும் வான்வழி மூலமாக நடைபெறும் தாக்குதல்களை இரு தரப்பும் நிறுத்துவதில் உடன்பாடு எட்டப்பட்டது”என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் தேவையான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகள் பிரிவுகளின் இயக்குநர்கள் ஜெனரல்கள், மே 12ஆம் தேதி திங்கள் கிழமை மீண்டும் பேசவுள்ளனர்” என்றும் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
போர் நிறுத்தத்தை அறிவித்த அமெரிக்கா
பட மூலாதாரம், Getty Images
இந்தியா போர் நிறுத்தம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு அல்லது தாக்குதல்களை நிறுத்த முற்படுவதற்கு முன்பாகவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ட்ரூத் சோஷியல்’ என்ற சமூக ஊடக தளத்தில், “இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி மற்றும் முழுமையான போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளன” என்று பதிவிட்டார்.
அதன் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் பரந்த அளவிலான பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தனது பதிவில் தெரிவித்தார்.
“கடந்த 48 மணி நேரத்தில், துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் நானும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி , பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அசிம் மாலிக், மேலும் இந்தியா – பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகளுடன் பேசியுள்ளோம்” என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கூற்றை நிராகரித்த இந்தியா
தாக்குதல்களை நிறுத்த இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒப்புக்கொண்டது. ஆனால் அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடவில்லை.
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக கூறியதையும் இந்தியா நிராகரித்தது.
“போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் இருதரப்புக்கும் இடையிலானது. பாகிஸ்தானின் ராணுவ இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) பேச்சுவார்த்தையை தொடங்கினார். அதன் பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன” என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சனிக்கிழமை மாலை பதிவிட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த தெளிவை இந்தியா வழங்கியது. அதற்கிடையில் டொனால்ட் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ஒரு புதிய பதிவை வெளியிட்டார். இந்த பதிவு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
“இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான, உறுதியான தலைமையைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன். சரியான நேரத்தில் அவர்கள் அறிவாற்றலையும் தைரியத்தையும் வெளிப்படுத்தி, கோடிக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கும்,பெரும் சேதத்திற்கும் வழிவகுத்திருக்கக்கூடிய இந்த மோதலை நிறுத்த முடிவு செய்தனர்” என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
“இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எட்ட அமெரிக்காவால் உங்களுக்கு உதவ முடிந்ததில் நான் பெருமைப்படுகிறேன்” என்றும் டிரம்ப் கூறினார்.
மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்தும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள டிரம்ப்,
காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து அமைதியான தீர்வைக் காண்பது குறித்தும் தெரிவித்துள்ளார் .
72 மணி நேரத்திற்குள் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியது எப்படி ?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட இப்பதிவிற்குப் பிறகு, வெளியுறவுக் கொள்கை நிபுணரும் ஆய்வாளருமான மைக்கேல் குகல்மேன் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “டிரம்ப் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் குறித்து பதிவிட்டுள்ளார் . இந்த முறை காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க (இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன்) இணைந்து பணியாற்றுவதாகக் கூறியுள்ளார்.”என்று குறிப்பிட்டிருந்தார்.
“இரு தரப்பும் விரும்பினால், காஷ்மீர் விவகாரத்தில் தாம் மத்தியஸ்தம் செய்யலாம் என்று அவர் தனது முதல் பதவிக்காலத்தில் கூறியிருந்தார். அந்தக் கருத்தை விட இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.”
முன்னதாக, அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் பதற்றம் குறித்த பிரச்னையில் இருந்து அமெரிக்கா விலகி இருப்பதாகவும், ராஜ்ஜீய வழியில் இதனைக் கையாளும் என்றும் கூறியிருந்தார்.
“இரு நாடுகளும் பதட்டத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும் என அவர்களை ஊக்குவிக்கத்தான் எங்களால் முடியும். ஆனால் நாங்கள் அடிப்படையில் போரில் ஈடுபடப் போவதில்லை. அது எங்கள் வேலை அல்ல” என்று ஜே.டி. வான்ஸ் கூறினார்.
“இந்தப் பிரச்னையைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் திறனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இச்சிக்கலைத் தீர்ப்பதற்காக நாங்கள் ராஜ்ஜீய வழிமுறைகள் மூலம் தொடர்ந்து முயற்சி செய்வோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
மே 8 அன்று, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அவர்கள் இருவரையும் நான் நன்கு அறிவேன். இதை அவர்கள் தீர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதை அவர்கள் நிறுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.
“என்னால் எந்த வகையிலாவது உதவ முடிந்தால், நான் உதவுவேன்” என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட கடன்
பட மூலாதாரம், Getty Images
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
படிப்படியாக இந்தப் பதற்றம் நெருக்கமான மோதலாக மாறிக்கொண்டிருந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று இரவு, வெளியுறவுக் கொள்கை நிபுணரும் ஆய்வாளருமான மைக்கேல் குகல்மேன், “இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்கு மிக அருகில் வந்துவிட்டன” என்று தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் ‘ஆபரேஷன் பன்யான் அல் மர்சூஸைத்’ தொடங்கியது.
ஆனால் சனிக்கிழமை மாலைக்குள் இரு நாடுகளும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக அறிவித்தன.
வேகமாக மாறிவரும் இந்த சூழலும், அதன் பின்னணியில் உள்ள அமெரிக்காவின் கூற்றுகளும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தின.
அமெரிக்க அதிபர் டிரம்பும் அவரது துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸும் இப்பிரச்னையில் வெளிப்படையாக தலையிட மறுத்துவிட்டாலும், பிபிசியிடம் பேசிய ஆய்வாளர்கள் இரு தரப்பினருக்கும் இடையே திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்ததாக கருதுகின்றனர்.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவில் இருந்தபோது பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை, இரண்டாவதாக, அமெரிக்காவின் நலன்கள் இரு நாடுகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது மற்றும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தெற்காசியாவில் ஒரு மோதல் ஏற்படுவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்புவதில்லை, மேலும் அது சீனாவுக்கு எதிராக பலவீனமாக மாறுவதையும் தவிர்க்க விரும்புகிறது.
அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்கள் குறித்த நிபுணரான பேராசிரியர் முக்ததர் கான் இதுகுறித்து கூறுகையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்.
“உடனடி போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு லஞ்சம் கொடுத்ததாக நான் நினைக்கிறேன், ஆனால் அவர்கள் அதை இந்தியாவுடன் எவ்வாறு சமாளித்தார்கள் என்பது இன்னும் புரியவில்லை” என்றும் அவர் கூறுகிறார்.
“சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது.
அதன் பிறகு சில மணி நேரங்களுக்குப் பிறகு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனது வாய்ப்பை நிராகரித்திருந்தால், அதற்கு கடன் கிடைத்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறும் பேராசிரியர் முக்ததர் கான்,
“இந்தியாவைப் பொறுத்தவரை, இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். எனக்கு சரியாகத் தெரியவில்லை, இது நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம்” என்றும் தெரிவித்தார்.
1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இந்திய ஆயுதப்படைகள் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி போன்ற பாகிஸ்தான் நகரங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது இதுவே முதல் முறை.
அதற்கு பதிலடியாக, பதான்கோட், பதிண்டா, ஜம்மு, அமிர்தசரஸ் மற்றும் ஆதம்பூர் போன்ற பல இடங்களைத் தாக்க பாகிஸ்தான் முயன்றது. இந்திய ராணுவத்தின் கூற்றுப்படி, தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.
புதிதாக ஒரு பிரச்னை உருவாவதை அமெரிக்கா விரும்பவில்லை
பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் பாகிஸ்தான் டிஜிஎம்ஓக்களுக்கு (ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்) இடையே பிற்பகல் 3:30 மணியளவில் பேச்சுவார்த்தை நடந்தது, பின்னர் மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இது எந்த சூழ்நிலையில் நடந்தது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
தெற்காசியாவில் உருவாகி வரும் நெருக்கடியை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, இந்த முறை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்களைக் குறைக்க அமெரிக்கா தொடக்கத்தில் குறைவாக முயற்சி செய்ததாகக் கூறுகின்றனர்.
1999 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மத்தியஸ்த முயற்சிகளின் போது அமெரிக்கா மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது.
ஆனால் இந்த முறை அமெரிக்கா இந்த விஷயத்தில் அவ்வளவு சுறுசுறுப்பாக செயல்படவில்லை என்று மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறித்த நிபுணரான உதவிப் பேராசிரியர் முனைவர் மனன் திவேதி கூறுகையில்,
“நேரடியாகப் பார்க்கையில், அமெரிக்கா வேறு விதமாக நடந்துகொண்டது போல் தோன்றியிருக்கலாம்.
ஆனால் அது திரைக்குப் பின்னால் இரண்டு ராஜ்ஜீய நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது.
அமெரிக்கா இந்த விஷயத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தது.
அமெரிக்காவைத் தவிர, சவுதி அரேபியா மற்றும் இரானும் தங்கள் பங்கைக் கொண்டிருந்தன.”என்றார்.
இதற்கிடையில், நியூயார்க்கில் உள்ள அல்பானி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் உதவிப் பேராசிரியர் கிறிஸ்டோபர் கிளாரி, பிபிசி உருதுவிடம் பேசுகையில்,
“அதிபர் டிரம்பின் குழு தற்போது பல கண்டங்களில் உள்ள பல்வேறு நெருக்கடிகளைத் தீர்க்க முயற்சிக்கிறது.
இதனால் தான் அமெரிக்கா பெரிய நெருக்கடிகளில் இருந்து விலகி இருக்க விரும்புகிறது” என்று கூறினார்.
“அமெரிக்கா தற்போது இந்தியாவின் உத்தி சார்ந்த பங்காளியாகவும், பாகிஸ்தான் அமெரிக்காவின் பழைய பங்காளியாகவும் உள்ளது.
அத்தகைய சூழ்நிலையில், இந்த மோதல் அதிகரித்திருந்தால், அதற்கு முன்பே மற்றொரு பிரச்னை எழுந்திருக்கும்.
அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யா-யுக்ரேன், இரான், காசா, சீனா மற்றும் வர்த்தகப் பிரச்னைகளில் சிக்கியுள்ளது, மேலும் இந்த விஷயத்தை விரைவில் தீர்க்க விரும்புகிறது” என்று முனைவர் மனன் திவேதி கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கை குறித்து குழப்பத்தில் இருப்பதாகவும், தெற்காசியாவை விட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலவியல் சார் அரசியலில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அவர் கூறுகிறார்.
அமெரிக்கா தனது சொந்த நலன்களுக்கு ஏற்ப ராஜ்ஜீய நடவடிக்கைகளையும், அரசியலையும் முன்னெடுக்கிறது என்று மனன் திவேதி கூறுகிறார்.
சீனாவுடன் சிக்கல்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வது அதன் நலனுக்கு உகந்ததல்ல.
“அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யும் வரலாற்றைக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக அரசியலில் தனது நம்பகத்தன்மையை வலுப்படுத்த அமெரிக்கா இதைச் செய்து வருகிறது” என்றும் மனன் திவேதி விளக்கினார்.
மோதலுக்கு பிறகு, அடுத்து என்ன?
பட மூலாதாரம், Getty Images
இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் மட்டுமல்ல. கூர்ந்து கவனித்தால், இந்த மோதல் மேற்கத்திய நாடுகளின் தொழில்நுட்பத்திற்கும், சீனாவிற்கும் இடையிலான மோதலாகவும் தென்பட்டது.
“இந்தியா-பாகிஸ்தான் மோதலுடன், உலக நாடுகள் ஏற்கனவே இந்தப் பிரச்னையைப் பற்றி விவாதிக்கத் தொடங்கிவிட்டது. இது சீன மற்றும் மேற்கத்திய தொழில்நுட்பத்திற்கு இடையிலான மோதல் என்று அனைவரும் கூறுகிறார்கள்” என்கிறார் பேராசிரியர் முக்ததர் கான்.
யாருடைய தொழில்நுட்பம் யாரை விட, எந்த அளவிற்கு உயர்ந்தது என்பது பகுப்பாய்வுக்குப் பிறகு தெரியவரும்.
ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் எந்த திசையை நோக்கிச் செல்லும் என்பது தான் இப்போது எழும் முக்கியக் கேள்வி.
“இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு, சீனா எந்த வகையில் செயல்பட்டாலும், அதற்கு இந்தியா எந்தளவுக்கு தயாராக உள்ளது என்பது விவாதிக்கப்பட வேண்டும்.
இந்தியா சீனாவை எவ்வாறு கையாளப்போகிறது என்பதும் ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது.
இந்தியாவுக்கு சீனாவுடன் வர்த்தக உறவுகள் உள்ளன. சீனா ஒரு அண்டை நாடாகவும் உள்ளது” என்று பேராசிரியர் முக்ததர் கான் கூறுகிறார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவு, பெரும்பாலும் பேச்சுவார்த்தை எங்கு நடைபெறும் என்பதைப் பொறுத்தது என்று பேராசிரியர் முக்ததர் கான் நம்புகிறார்.
ஆனால், “மே 12 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் டிஜிஎம்ஓக்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்” என்று மட்டுமே இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த சந்திப்பு நிச்சயமாக நடக்குமா என்பது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் எதுவும் கூறவில்லை .
“வேறு எந்த பிரச்னை தொடர்பாகவும் வேறு எந்த இடத்திலும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சனிக்கிழமை மாலை சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ இல் தெரிவித்தது.
“சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையின் குறிப்பின்படி, நிலுவையில் உள்ள பிரச்னைகளில் காஷ்மீரையும் சேர்க்கலாம்.
இது இந்தியாவின் நலனுக்காக இருக்காது. இது காஷ்மீரின் பிரச்னை அல்ல, எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று இந்தியா கூற வேண்டும்,” என்று பேராசிரியர் முக்ததர் கான் கருதுகிறார்.
பேராசிரியர் கான் தொடர்ந்து பேசுகையில், “இரு நாடுகளுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் வர்த்தகம் போன்ற பல பிரச்னைகள் விவாதிக்கப்படலாம்.
கடந்த ஆண்டு, இரு நாடுகளுக்கும் இடையே 1.3 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்தது. பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து விலை குறைவான மருந்துகள் மிகவும் தேவைப்படுகின்றன”என்றார்.
அமெரிக்காவின் தெற்காசியக் கொள்கையை உத்தி சார்ந்த ஆய்வாளர் பர்மா சின்ஹா பாலிட் கேம்பிரிட்ஜ் இதழில் ஆய்வு செய்துள்ளார்.
அதில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தெற்காசியாவின் அதிகார சமநிலையில் காஷ்மீர் பிரச்சினை ஒரு முக்கியக் காரணியாக இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதில் அமெரிக்கா எந்த வகையிலாவது வெற்றி பெற்றால், அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய வெற்றியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு