“என்னிடம் யாராவது, ‘என்ன படித்தாய்?’ எனக் கேட்கும்போது பத்தாம் வகுப்பில் பாதியிலேயே வெளியேறிவிட்டதாகக் கூறுவது சங்கடத்தை ஏற்படுத்தியது. அதை சரிசெய்யவே பி.காம், எம்.காம், எம்.பி.ஏ ஆகிய படிப்புகளை முடித்தேன்” என்கிறார், கடலூர் மாவட்டம் வடலூரில் வசிக்கும் 72 வயது முதியவரான செல்வமணி.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் எலக்ட்ரிகல் பிரிவில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது சீர்காழியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மின்னியல் படித்து வருகிறார்.
“அறிவை மேம்படுத்திக் கொள்ளவே படிப்பில் தொடர்ந்து ஆர்வம் செலுத்துகிறேன்” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் உள்ள புத்தூரில் சீனிவாசா சுப்பராயா அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1300 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
72 வயதில் தொழிற்கல்வியை தேர்வு செய்தது ஏன்?
மின்னியல் பிரிவின் இரண்டாம் ஆண்டில் 72 வயதான செல்வமணி என்பவர் படிக்கும் தகவலைக் கேள்விப்பட்டு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு பிபிசி தமிழ் சென்றது.
ஆய்வகத்தில் சக மாணவர்களுடன் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த செல்வமணியிடம் பேசினோம்.
“பத்தாம் வகுப்பை முடிக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறிவிட்டேன். அதன்பிறகு, 1974 ஆம் ஆண்டில் ஐ.டி.ஐ படித்தேன். 1976 ஆம் ஆண்டில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பயிற்சி உதவியாளராக பணியில் சேர்ந்தேன். பிறகு அங்கேயே வேலை கிடைத்தது. சீனியர் கிரேடு ஃபோர்மேனாக பணியில் இருந்து ஓய்வு பெற்றேன்” எனக் கூறுகிறார், செல்வமணி.
இவர் 1980 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். “என்னை நேரில் பார்க்கும் நபர்கள், ‘என்ன படித்தாய்?’ எனக் கேட்கும்போது சங்கடமாக இருக்கும். அதை சரிசெய்யவே தொடர்ந்து படித்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன்” என்கிறார், செல்வமணி.
” ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது மட்டும் சவாலாக இருந்தது. பிளஸ் 2 தேர்வில் ஆங்கிலத்தை மட்டும் நான்கு முறை எழுதினேன்” எனக் கூறும் செல்வமணி, “பிறகு பி.காம் படிப்பை தேர்வு செய்து முடித்தேன். 2 ஆண்டுகள் இடைவெளியில் எம்.காம் படிப்பையும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.பி.ஏ படிப்பையும் முடித்தேன்” எனக் கூறுகிறார்.
“பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு மீண்டும் தொழிற்கல்வியை தேர்வு செய்தது ஏன்?” என பிபிசி தமிழ் கேட்டது.
“என்.எல்.சியில் வேலையில் இருக்கும்போதே பாலிடெக்னிக் படிப்பில் சேர முயற்சி செய்தேன். அகாடமிக் படிப்புகளை முடித்தாலும் தொழில் படிப்பில் சேர முடியவில்லை. ஐ.டி.ஐயில் எலக்ட்ரிகல் படிப்பை முடித்துள்ளேன். இதை சற்று மேம்பட்ட வடிவில் கற்றுக் கொள்ளவே வந்திருக்கிறேன்” எனக் கூறுகிறார், செல்வமணி.
‘யாரும் சீட் கொடுக்கவில்லை’
பணி ஓய்வுக்குப் பிறகு பாலிடெக்னிக்கில் சேரும் முடிவை எடுத்தாலும் அவ்வளவு எளிதில் செல்வமணிக்கு இடம் கிடைக்கவில்லை.
” கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் படிப்பதற்கு இடம் கேட்டேன், ஆனால் கிடைக்கவில்லை. ஒரு கல்லூரியில் மட்டும், ‘சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், வேறு யாராவது சேர்ந்தால் பணத்தைத் திருப்பித் தருவோம்’ என்றனர். அதேபோல், பணத்தைத் திருப்பித் தந்துவிட்டனர்” என்கிறார்.
புத்தூரில் உள்ள சீனிவாசா சுப்பராயா அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மட்டுமே தனது முயற்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததாகக் கூறுகிறார், செல்வமணி.
“கல்லூரியின் முதல்வர் குமாரிடம், ‘சில கல்லூரிகளில் என் வயதைக் காரணம் காட்டி நிராகரித்துவிட்டனர்’ என்றேன். ‘உடனே வந்து சேருங்கள்’ என உற்சாகம் கொடுத்து இடம் கொடுத்தார். நான் பிளஸ் 2 முடித்திருந்ததால் இரண்டாம் ஆண்டு மின்னியல் பிரிவில் இடம் கிடைத்தது” என்கிறார், செல்வமணி.
தொடர்ந்து பேசிய அவர், “பள்ளியிலும் ஐ.டி.ஐ படிக்கும்போதும் சக வயதுள்ள மாணவர்களுடன் படித்துள்ளேன். அதன்பிறகு என்னைவிட வயது குறைவானவர்களுடன் தான் படித்து வந்திருக்கிறேன். அதனால் வயதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை” என்கிறார்.
“இனி நீங்கள் வேலைக்குப் போகப் போவதில்லை. அப்படியானால் இந்தப் படிப்பு எந்த வகையில் உதவி செய்யப் போகிறது?” எனக் கேட்டோம்.
“எதுவும் பயன்பட வேண்டும் என்பதற்காக படிப்பதில்லை. என்னுடைய அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கு கல்வி உதவுகிறது. எனக்கு மறதிநோய் வந்துள்ளது. கல்வி கற்கும்போது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. வீட்டில் இருந்தால் தொலைக்காட்சிப் பெட்டியை மட்டுமே பார்க்க வேண்டியதாக உள்ளது” என்கிறார்.
தனது வகுப்பறையில் சுமார் 70 மாணவர்கள் உள்ளதாகக் கூறும் செல்வமணி, “இவர்களுடன் போட்டியிட்டு தேர்வில் 50 சதவிகித மதிப்பெண் எடுத்தாலே நான் வெற்றி பெற்றதாக அர்த்தம்” எனக் கூறி சிரிக்கிறார்.
‘தினசரி மூன்றரை மணிநேர பயணம்’
“முதல் நாள் வகுப்பறைக்கு வந்தபோது, நான் மாணவர் எனக் கூறியதை சக மாணவர்கள் நம்பவில்லை. ‘ஆசிரியரா?’ எனக் கேட்டார்கள். அவர்களிடம் கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் என்.எல்.சி அடையாள அட்டையைக் காட்டிய பிறகு தான் ஏற்றுக் கொண்டனர்” என்கிறார், செல்வமணி.
இவருக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவரது மூத்த மகள் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்த அதே காலகட்டத்தில் செல்வமணியும் எம்.பி.ஏ நிறைவு செய்துள்ளார்.
” எனது முயற்சிகளுக்கு வீட்டில் எதுவும் சொல்ல மாட்டார்கள். நான் படிப்பதை மனைவியும் மகள்களும் ஊக்கப்படுத்தியே வந்துள்ளனர்” எனவும் பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார்.
கல்லூரிக்கு வருவதற்காக வடலூரில் காலை 6.30 மணிக்கு அரசுப் பேருந்தில் ஏறும் செல்வமணி, சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பிறகே கல்லூரிக்கு வருகிறார்.
” வடலூரில் சபை நிறுத்தத்தில் பேருந்து ஏறினால் சீர்காழியில் கல்லூரி அருகே இறங்க வேண்டும். கல்லூரி முடிந்து போகும்போது இரண்டு மணிநேரம் தேவைப்படும். வீட்டுக்குப் போன பிறகு படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. வகுப்பறையில் படிப்பது மட்டும் தான்” எனக் கூறுகிறார், செல்வமணி.
‘தாத்தாவிடம் பேசும் உணர்வு’
செல்வமணியுடன் படிக்கும் சக மாணவர் துஷ்யந்திடம் பிபிசி தமிழ் பேசியது.
” முதல்நாள் அவர் வகுப்புக்கு வந்தபோது ஆச்சர்யப்பட்டோம். ஆசிரியராக இருப்பார் என்று தான் நினைத்தோம். ஸ்டூடண்ட் எனக் கூறியதை முதலில் நம்பவில்லை” எனக் கூறுகிறார்.
“அவர் எலக்ட்ரிகல் துறையில் வேலை பார்த்திருந்ததால், எந்த சந்தேகம் வந்தாலும் அவரிடம் கேட்டுத் தெளிவுபெறுவோம். எந்தவித பாகுபாடும் காட்டாமல் பழகுவார். வீட்டில் உள்ள தாத்தாவிடம் எப்படிப் பேசுவோமோ, அப்படியொரு உணர்வு கிடைக்கிறது” எனவும் துஷ்யந்த் தெரிவித்தார்.
‘எந்த வயதிலும் தொழிற்கல்வி படிக்கலாம்’ – முதல்வர் குமார்
“தொழில்நுட்பப் படிப்புகளைப் பொறுத்தவரை வயது வித்தியாசம் என எதுவும் இல்லை. எந்த வயதில் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்” எனக் கூறுகிறார், சீனிவாசா சுப்பராயா அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் குமார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” தொழிற்கல்வியை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அவர் நெய்வேலியில் இருந்து பல மணிநேரம் பயணித்து கல்லூரிக்கு வருகிறார். இதுவரை அவர் பெரிதாக விடுப்பு எடுத்ததில்லை” என்கிறார்.
“ஐ.டி.ஐ படிப்புக்குப் பிறகு தபால் வழியில் மட்டுமே படித்து வந்த செல்வமணி, சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தினசரி வகுப்பறைக்கு வந்து செல்கிறார். தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு அவர் முன்னுதாரணமாக இருக்கிறார்” எனக் கூறுகிறார், குமார்.
“தமிழ்நாட்டில் இவ்வளவு வயதில் ஒருவர் தொழிற்கல்வியை படித்ததாக உதாரணம் எதுவும் இல்லை” எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
“இனி நான் வேலை தேட வேண்டிய அவசியம் என எதுவும் இல்லை. பொருளாதார ரீதியாகவும் ஓரளவு நன்றாக இருக்கிறேன். தற்போதுள்ள மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும். படிப்பதற்கு வயது ஒரு பிரச்னையே அல்ல” எனக் கூறுகிறார், 72 வயதான செல்வமணி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு