சென்னை: நாட்டின் 76-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை போர் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் பாதுகாப்புப்
படைகளின் மூத்த அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.
ரவி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தேசம் காக்கும் பணியில் உயிர் நீத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு அவர் மரியாதை
செலுத்தினார்.
தென்னிந்திய பகுதிக்கான இந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார், ஏவிஎஸ்எம், பிவிஎஸ்எம், போர்
நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிக்கான இந்திய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய், என்.எம். மற்றும் இந்திய கடலோர
காவல்படை கிழக்கு மண்டல தளபதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் தத்விந்தர் சிங் சைனி, டி.எம். ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து
மரியாதை செலுத்தினர்.
இந்திய விமானப்படை தாம்பரம் நிலைய தலைமை நிர்வாக அதிகாரி விங் கமாண்டர் கல்யாண ராமன், நிலைய கமாண்டிங் அதிகாரி ரதீஷ்
குமார் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
நாட்டைக் காக்கும் பணியில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் துணைவியர் மற்றும் முன்னாள் பாதுகாப்புப்படை வீரர்களும், 76வது குடியரசு
தினத்தையொட்டி, வெற்றிப் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.