பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
-
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி கட்டத்தில், வக்ஃப் திருத்த மசோதா முதலில் மக்களவையிலும், மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுடன் சட்டமாக அமலுக்கும் வந்துவிட்டது.
வக்ஃப் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் நீண்ட காலத்துக்கு அரசாங்கத்துக்கு பயனளிக்கும் என்று வழக்கறிஞர்களும் நிபுணர்களும் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சிவில் சமூகத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நிறைவேற்றிய இந்த திருத்தங்கள் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாவது நிச்சயம்.
இந்த புதிய திருத்தம் அரசியலமைப்பின் பல விதிகளை மீறுவதாக மூத்த வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
“வக்ஃப் சட்டம், நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றின் அடிப்படை என்ன என்பதை சட்டத் துறையுடன் தொடர்புடையவர்கள் முடிவு செய்வார்கள்” என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரவூப் ரஹீம் பிபிசியிடம் தெரிவித்தார்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) போன்ற பல அமைப்புகள், புதிய சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.
இதுகுறித்து பேசிய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் எம்.ஆர். ஷம்ஷாத் கூறுகையில், “புதிய சட்டங்கள் இஸ்லாமிய நன்கொடைகளை (வக்ஃப் என்பதன் மற்றொரு பெயர்) முடிவுக்குக் கொண்டுவராது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘அப்போது ஒரு தகராறு நடந்தது’ எனக் கூறி நிர்வாகம் அந்தச் சொத்தை கைப்பற்றும். இதனால் அரசு தான் மிகுந்த பலனடையும்” என்றார்.
“வக்ஃபைப் பொறுத்தவரை, வரவிருக்கும் இருண்ட நாட்களை நான் காண்கிறேன். இந்தத் திருத்த மசோதா சரியாகத் தயாரிக்கப்படவில்லை, ஆனால் இது நிச்சயமாக நன்கு வடிவமைக்கப்பட்ட சட்டம். அதன் பல விதிகள் குழப்பமானவை, அவற்றிலிருந்து ஒருவர் எளிதில் வெளியேற முடியாது” என்று ரஹீம் கூறினார்.
‘வக்ஃப் நிலம் அதன் வக்ஃப் தன்மையை இழக்கும்’
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலையை ஆய்வு செய்த நீதிபதி ராஜீந்தர் சச்சர் குழுவின் முன்னாள் ஓ.எஸ்.டி சையத் ஜாபர் மஹ்மூத் பிபிசியிடம் கூறுகையில்,
“பெரும்பாலான வக்ஃப் சொத்துகள் அவற்றின் வக்ஃப் தன்மையை இழக்க வாய்ப்புள்ளது. மிகச் சில சொத்துகள்தான் வக்ஃப் சொத்துகளாகவே மிஞ்சும். மீதமுள்ள சொத்துகள் இழக்கப்படலாம்” என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் கே.ரஹ்மான் கான் 2013 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்தார்.
“பல்வேறு அரசாங்கங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 1.25 லட்சம் ஏக்கர் வக்ஃப் நிலம் (நாட்டில் உள்ள 9.4 லட்சம் ஏக்கரில்) இனி வக்ஃப் சொத்துகளாக இருக்காது” என்று அவர் மதிப்பிட்டிருந்தார்.
டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் நிலங்கள், வக்ஃப் சொத்துகளின் பாதுகாவலர்களுடன் வழக்குத் தொடரப்பட்ட நிலங்கள், அபகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.
வக்ஃப் சொத்துகள் வணிக பயன்பாட்டுக்காக பெயருக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
“இந்தச் சட்டத்தால், அதற்கு என்ன நடக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும்” என்று மஹ்மூத் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “வக்ஃப் விவகாரங்களில் எந்த தலையீடும் இருக்காது என்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளது. இது நல்லதாக தோன்றுகிறது. ஆனால், மாநில வக்ஃப் வாரியத்தினரே முடிவுகளை எடுப்பார்கள். அவர்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒதுக்கீடும் செய்யப்படாது. இதுவே எதிர்காலத்திலும் தொடரும்” என்று கூறினார்.
பிரதிநிதித்துவத்தில் உள்ள வேறுபாடு
பட மூலாதாரம், Getty Images
“இந்தக் கண்ணோட்டத்தில், மாநில வக்ஃப் வாரியம் (SWB) மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சில் (CWC) ஆகியவையும் அமைக்கப்பட வேண்டும். முதலாவதாக, புதிய சட்டத்தின்படி, பெரும்பான்மையான உறுப்பினர்கள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது, முடிவுகளை எடுக்கும் பெரும்பாலான மக்கள் இஸ்லாமியர்களாக இருக்க வாய்ப்பில்லை” என்று ரெஹ்மான் கான் கூறுகிறார்.
வாரியங்கள் மற்றும் கவுன்சில்களில் குறைந்தது இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
தவறவிடப்பட்ட முக்கியமான அம்சம் ஒன்று என்னவென்றால், புதிய திருத்தம், 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி வக்ஃப் இஸ்லாமியர்களால் நடத்தப்பட வேண்டும்.
இது நாட்டில் உள்ள பிற மத அமைப்புகளுக்கும் பொருந்தும்.
“அரசியலமைப்பின் பிரிவு 26, ஒவ்வொரு மதப் பிரிவினரும் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கவும், சொத்துகளை சொந்தமாக வைத்திருக்கவும், கையகப்படுத்தவும், நிர்வகிக்கவும் உரிமை உண்டு என்பதை உறுதி செய்கிறது” என்று மஹ்மூத் கூறுகிறார்.
“இதனால் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அவர்கள் இனி மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் பெரும்பான்மையானவர்களாக இருக்க மாட்டார்கள்” என்று கூறும் மஹ்மூத், “திருத்தம் மறுபரிசீலனை செய்யப்படும் வரை எந்த மாற்றங்களும் செய்யப்படக் கூடாது என்று நீதிமன்றம் கூறாவிட்டால், குத்தகைதாரர்கள் கிட்டத்தட்ட உரிமையாளர்களாக மாறலாம்” என்றும் தெரிவித்தார்.
முக்கியப் பிரச்னை என்ன ?
பட மூலாதாரம், Getty Images
வக்ஃப் நிலத்தைக் கைப்பற்ற பல வாய்ப்புகள் உள்ளன என்று ரஹீம் கூறுகிறார்.
“அவற்றில் முதலாவது, ஒரு சொத்து வக்ஃப்-தானா இல்லையா என்பதை முடிவு செய்யும் ஒரு அரசாங்க அதிகாரம் உள்ளது. அது வக்ஃப் சொத்தா இல்லையா என்பதை அவர்கள் கண்டறிந்தவுடன், அது உண்மையில் வக்ஃப் சொத்துதானா என்பதை நிரூபிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்” என்கிறார்.
“இந்த அதிகாரத்தின் கண்காணிப்பிலிருந்து தப்பித்தவுடன், நீங்கள் வேறொரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறீர்கள். அதுதான் வரம்புச் சட்டம். முன்னதாக, வரம்பு நிரந்தரமானது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபடி, ஒரு வக்ஃப் எப்போதும் வக்ஃப்தான்” என்று ரஹீம் குறிப்பிட்டார்.
“ஒருவேளை ஒரு ஆக்கிரமிப்பு நடந்து, அது பதிவேடுகளில் காட்டப்படவில்லை அல்லது முத்தவல்லி அல்லது பராமரிப்பாளர் சொத்தை அந்நியப்படுத்தி விற்றால், நீங்கள் நீதிமன்றத்துக்குச் செல்லலாம். ஆனால், இப்போது நீங்கள் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லப்படும்.”
“புதிய திருத்தம் முந்தைய திருத்தத்தின் விளைவை மாற்றும். அது நில சீர்திருத்தச் சட்டமாக இருந்தாலும் சரி அல்லது மாநில அளவில் உள்ள எந்தச் சட்டமாக இருந்தாலும் சரி.
சட்டங்கள் முரண்பாடாக இருக்கலாம். ஆனால் ஒரு தகராறு ஏற்பட்டால், எந்தச் சட்டம் மேலோங்கும்?
இது தொடர்ச்சியான வழக்குகளைத் தொடங்க காரணமாக அமையும். உண்மையைக் கூற வேண்டுமென்றால், ஒரு பாதை உருவாக்கப்பட்டுள்ளது என்று ரஹீம் தெரிவித்தார்.
இஸ்லாமியர் என்பதற்கான சான்று
பட மூலாதாரம், Getty Images
புதிய திருத்தத்தை நீதிமன்றத்தில் சவால் செய்வதற்கு ஷம்ஷாத் வேறு ஒரு காரணத்தை முன்வைக்கிறார்.
“சட்டப்படி இந்தத் திருத்தங்கள் இஸ்லாத்தில் உருவாக்கப்பட்ட வக்ஃபின் முழுத் திட்டத்தையும் பாதிக்கின்றன. இது அரசியலமைப்பின் 25 மற்றும் 26வது பிரிவுகளின் கீழ் பாதுகாக்கப்படுகிறது” என்கிறார் ஷம்ஷாத்.
“புதிய வக்ஃபை உருவாக்குவதற்கு கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய நிபந்தனைகள் உள்ளன. புதிய சட்டத்தின்படி, புதிய வக்ஃபை உருவாக்க விரும்பும் எவரும் தான் ஒரு இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க வேண்டும். அவர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தைப் பின்பற்றி வருகிறார் என்பதை நிரூபிக்க வேண்டும்.”
இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், “ஒருவர் இஸ்லாமியர் என்பதை நிரூபிப்பதற்கான தொடக்கப் புள்ளி என்ன?
ஒருவர் தாடி வளர்க்கிறாரா அல்லது எப்படி, எப்போது தொழுகை நடத்துகிறார் என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுமா? வக்ஃபை தடை செய்வதே இதன் நோக்கம்” என்றும் குறிப்பிட்டார்.
ஷம்ஷாத் ஆட்சேபிக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
“ஒரு நபர் வக்ஃபுக்கு நிலம் கொடுத்தால், பரம்பரை உரிமைகள் பாதிக்கப்படுமா இல்லையா என்பதை அரசு அதிகாரிகள் முடிவு செய்வார்கள்” என்கிறார் ஷம்ஷாத்.
“ஒரு இஸ்லாமியராக, எனது வாரிசுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் அந்த வாரிசு ஒரு புதிய வக்ஃப்பை உருவாக்க ஆட்சேபனையில்லா சான்றிதழை வழங்க வேண்டும்.”
‘பயன்பாட்டில் உள்ள வக்ஃப் சொத்து’ நீக்கப்பட்டது, ஷம்ஷாத் மற்றும் ரஹீம் போன்ற வழக்கறிஞர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
‘பயனாளர் அடிப்படையிலான வக்ஃப்’ என்ற கொள்கை, மசூதிகள் மற்றும் கல்லறைகள் போன்ற மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால், அது அதிகாரப்பூர்வமாக வக்ஃப் என அறிவிக்கப்படவில்லை என்றாலும், தானாகவே வக்ஃப் நிலமாக மாறிவிடும் என்பதைக் குறிக்கிறது என ஷம்ஷாத் தெரிவிக்கிறார்.
“இது தற்போதுள்ள வக்ஃபை பாதிக்கிறது.”
“அதை நீக்குவது அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இந்தக் கொள்கை நிலைநிறுத்தப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கும் எதிரானது” என்றும் ரஹீம் தெரிவித்தார்.
வக்ஃப் வாரியங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை, வக்ஃப் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டியவர்களுக்கு எதிராக, அதாவது முத்தவல்லி அல்லது பராமரிப்பாளருக்கு எதிராக நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்வதுதான்.
“புதிய திருத்தங்கள் ஒரு முத்தவல்லி சொத்தை சட்டவிரோதமாக விற்றால், சொத்தை விற்றதற்காக அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்படும் என்று கூறுகின்றன” என்று ரஹீம் தெரிவித்தார்.
“தவறு செய்பவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது, அதேசமயம் இதுபோன்ற வேறு எந்த சொத்து வழக்கிலும் ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படுகிறது. மீண்டும், இது மற்ற சட்டங்களுடன் முரண்படுகிறது.”
“புதிய சட்டத்தின் காரணமாக, பல சொத்துகள் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட வழியமைத்துக் கொடுக்கிறது. உரிமைகளுடன் கூடவே தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளும் மெதுவாக இழக்கப்படுகின்றன” என்று ரஹீம் குறிப்பிடுகிறார்.
இந்த புதிய சட்டத் திருத்தம் தொடர்பான நேர்மறையான அம்சங்கள் குறித்தும் ரஹீம் பேசுகிறார்.
“அனைத்து தகராறுகளும் ஆறு மாதங்களுக்குள் தீர்க்கப்படுவதை, புதிய திருத்தங்கள் உறுதி செய்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, வக்ஃப் தீர்ப்பாயம் ஒரே நீதிபதியால் நிர்வகிக்கப்படும். தேவையான மற்றொரு விஷயம் என்னவென்றால், அதிக எண்ணிக்கையிலான தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் உள்ளது” என்று ரஹீம் குறிப்பிட்டார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு