• Wed. Mar 11th, 2026

24×7 Live News

Apdin News

99/66 | திரைவிமர்சனம் – Vanakkam London

Byadmin

Mar 9, 2026


தயாரிப்பு : மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்

நடிகர்கள் : ரட்சிதா மகாலட்சுமி, ரோஹிந்த், சபரி, ஸ்வேதா டோரத்தி, எம் எஸ் மூர்த்தி, ஜாவா சுந்தரேசன், கோதண்டம், முல்லை மற்றும் பலர்.

இயக்கம் : எம். எஸ். மூர்த்தி

மதிப்பீடு : 2 / 5

வழக்கமான பேய் படங்களில் இருந்து வித்தியாசமான படம் என்பதால், ’99/ 66 ‘ படத்தைக் காண ரசிகர்கள் பட மாளிகைக்கு சென்றனர். அவர்களுக்கு எம்மாதிரியான அனுபவம் கிடைத்தது? என்பதை தொடர்ந்து காண்போம்.

திருமணமான குணா ( சபரி) – சங்கீதா( ரட்சிதா மகாலட்சுமி) தம்பதிகள் மிகப்பெரிய குடியிருப்பு வளாகத்தில் 66 என்ற இலக்கமுள்ள குடியிருப்பை தெரிவு செய்து, அங்கு வசிக்க தொடங்குகிறார்கள். அவருக்கு அதே குடியிருப்பில் 99 என்ற இலக்கமுள்ள குடியிருப்பில் வசிக்கும் ரஞ்சிதா ( ஸ்வேதா டோரத்தி) எனும் பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் நட்பாகிறார்கள்.  தங்களது நட்பை இருவரும் பரஸ்பரம் விரிவு படுத்திக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் குணா- சங்கீதாவை கொலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால் அந்த முயற்சி அனைத்தும் அமானுஷ்யமான ஆற்றலால் தோல்வியை தழுவுகிறது.  அதனைத் தொடர்ந்து சங்கீதா தனது தோழியான ரஞ்சிதாவை அவரது கணவர் கரண் ( ரோஹிந்த்) கொலை செய்வது போல் கனவு காண்கிறார்.

அது உண்மை என்று நம்பி குடியிருப்பு வாசிகளை அழைத்துச் சென்று அதை தடுக்க அப்போதுதான் ரஞ்சிதா – கரண் தம்பதிகள் அங்கு இல்லை என்பதும், அந்த குடியிருப்பில் யாரும் வசிக்கவில்லை என்பதும் சங்கீதாவிற்கு தெரிய வருகிறது.

அப்போது தன்னுடைய கண்ணிற்கு தெரிந்த ரஞ்சிதாவின் உருவம் யார்? அவருடைய பின்னணி என்ன? என்பதை அந்த குடியிருப்பு வாசிகளுக்கு தலைவராக இருப்பவரிடத்தில் கேட்கிறார். அவர் ரஞ்சிதா பற்றிய உண்மைகளை விவரிக்கிறார். அது என்ன? இந்த குடியிருப்புவாசிகளுக்கு அமானுஷ்யமாக வருகை தந்து தக்க தருணங்களில் காப்பாற்றும் சக்தி என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

பேய் – அமானுஷ்யம் – நல்ல சக்தி – தீய சக்தி – துர் சக்தி- போன்ற பாமர மக்களின் உள்ளத்தில் எளிதாக அச்சத்தை பரவச் செய்யும் விடயங்களில் படைப்பாளிகள் பாவிக்கும் இருள் பின்னணியிலான விடயங்களை படக் குழுவினர் தவிர்த்திருக்கிறார்கள்.

அத்துடன் புத்த மதம் பற்றிய விவரணங்கள் ரசிகர்களுக்கு புதிது. ஆனால் அது மட்டும் போதாது.

முதல் பாதி திரைக்கதை வழக்கமான பழக்கப்பட்ட தேய்த்து தேய்த்து துவைக்கப்பட்ட பாணியில் இருப்பதால் ரசிகர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. அதிலும் கொமடி என்ற பெயரில் பஞ்ச் பரமேஸ் – திகில் தினேஷ் – கசமுசா கருணாஸ் – உதவிக்கரம் உலகநாதன் செய்யும் சேட்டைகள்- சிரிப்பை விட எரிச்சலே அதிகம்.

சங்கீதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷிதா மகாலட்சுமி அழகாக தோன்றி ரசிகர்களை வசீகரிக்கிறார். பேயாகத் தோன்றி பயமுறுத்துகிறார்.

ரஞ்சிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி- அமைதியும் அழகும் கொண்ட நடிப்பால் கவர்கிறார்.

குணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சபரி கிடைத்த வாய்ப்பில் வில்லத்தனம் செய்வது சிறப்பு.

கரண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஹிந்த்.. ஸ்கிரீன் பிரசன்ஸ் ஓகே என்றாலும் நடிப்பு ….!!?

இயக்குநரும், தயாரிப்பாளருமான மூர்த்தி சில காட்சிகளில் தோன்றுகிறார்.

‘பேரன்பே பெருந்தெய்வம்…’ பாடல் கவனம் ஈர்க்கிறது.

இசையமைப்பாளர் சௌந்தர்யனின் மகனான அமர் கீத் பின்னணி இசையமைத்திருக்கிறார்.  இதுபோன்ற ஹாரர் படங்களுக்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் அவரின் உழைப்பு ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல்.

99/66 –  இந்த எண் ரசிகர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால்

By admin