பட மூலாதாரம், Maharashtra Cyber/Getty Images
தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில், நவீன தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்க்கையை எளிதாக்கினாலும், இதில் பல்வேறு சவால்களும் ஒளிந்திருக்கின்றன.
ஏனெனில் சமீபத்தில் புதுப்புது பரிமாணங்களில் நிகழும் சைபர் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
இது மக்கள் மத்தியில் உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்துவதோடு பண இழப்பையும் ஏற்படுத்துகிறது. அதைவிட, தொழில்நுட்பத்தைப் தவறாக பயன்படுத்தி நடைபெறும் மோசடிகளால் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகள் எழுகின்றன.
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி ஆதார் மற்றும் பான் அட்டை தயாரிக்கப்பட்டதாக சமீபத்தில் சில சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
போலியாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆதார் மற்றும் பான் அட்டைகள் அச்சு அசலாக உண்மையானது போலவே தோற்றமளிக்கின்றன.
ஏஐ தொழில்நுட்பம், பல விதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதாக உருவாக்க வழிவகுக்கிறது.
ஆன்லைனில் இருந்து மக்களின் அடையாளங்களை திருடி, சைபர் குற்றவாளிகள் இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்.
பாதுகாப்பு குறித்த கோணத்தில் பார்க்கும்போது இது புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பல போலி ஆவணங்கள் உருவாக்கப்படுவதால் நிஜ மற்றும் போலி ஆவணங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை கண்டறிவதில் பல சிக்கல்கள் உள்ளன.
இதனால் இந்த மோசடிகளுக்கு பலரும் இரையாகின்றனர்.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு சைபர் குற்றப் பிரிவினரும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கான வழி மற்றும் ஆதார் அல்லது பான் அட்டைகளின் உண்மை தன்மையை கண்டறிய சைபர் குற்றப் பிரிவினர் சில வழிகளை கூறுகின்றனர்.
போலி அடையாள அட்டைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அது தவறாக பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் ஆபத்துகள், விளைவுகளை எடுத்துரைக்க வேண்டும் என சைபர் குற்றப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
உங்கள் அடையாளங்கள் திருடப்படுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
போலியான அடையாள அட்டைகளை தயாரிக்க குற்றவாளிகள் ஏஐ, டீப்ஃபேக், டெம்பலேட் எடிட்டிங், போலி QR கோடுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர்.
இதில் பயன்படுத்தப்படும் பெயர்கள், எழுத்துக்கள், டிசைன் ஆகியவை அச்சு அசலாக உண்மையான அடையாள அட்டையைப் போலவே இருக்கின்றன.
புதிய வங்கிக் கணக்கு தொடங்குவது, கடனுக்கு விண்ணப்பிப்பது, பணமோசடி குற்றங்களை நிகழ்த்துவது போன்ற குற்றச் செயல்களுக்கு இதுபோன்ற போலி ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சைபர் குற்றங்களில் ஈடுபடுவதற்கும், அரசின் நலதிட்ட உதவிகளை பெறுவதற்கும் கூட திருடப்பட்ட உங்களின் அடையாளங்கள் பயன்படுத்தப்படலாம்.
ஏஐ கருவிகள் மற்றும் டீப்ஃபேக் ஆதார் மற்றும் பான் அட்டைகளில் உள்ள புகைப்படங்களை மாற்ற உதவுகின்றன. குற்றவாளிகள் உங்களின் ஆதார் அல்லது பான் எண்ணை பயன்படுத்தியும் ஆதாயம் தேடிக்கொள்ளக் கூடும்.
இது உங்களின் தனிப்பட்ட மற்றும் தேசிய பாதுகாப்புக்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
ஏஐ கருவிகள், QR Code, Segno போன்ற பைதான் லைப்ரரிகளை பயன்படுத்தியும் போலி QR Code-கள் உருவாக்கப்படுகின்றன.
இது போலியான ஆதார் தளத்தை உருவாக்கி தரவுகளை மாற்றவும், குற்றவாளிகள் சோதனை நடைமுறைகளில் இருந்து எளிதில் தப்பித்து குற்றச் செயல்களில் ஈடுபடவும் வழிவகுக்கும்.
பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
ஆதார் மற்றும் பான் கார்ட் குறித்த தரவுகளை சரிபார்க்க, எப்போதும் UIDAI மற்றும் நேஷனல் செக்யூரிட்டி டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட தளங்களை அணுகுங்கள்.
புகைப்படத்தை ஸ்கேன் செய்தோ, QR Code முறையிலோ ஆதார் அல்லது பான் அட்டையை சரி பார்க்க வேண்டும்.
உங்களுக்கு யாரேனும் ஆதார் அல்லது பான் கார்ட் புகைப்படம் அனுப்பினால், அதை உடனடியாக நம்பிவிட வேண்டாம். அது போலியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அரசின் அங்கீகரிக்கப்பட்ட தளத்திற்குச் சென்று, அந்த அடையாள அட்டை குறித்த விவரங்களை உடனடியாக சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
யாருக்கும் உங்களின் ஆவணங்களை எளிதில் அனுப்பிவிடாதீர்கள். இவற்றை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம். அப்படி செய்தால் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
போலி அடையாள அட்டைகளில் உள்ள போலியான புகைப்படங்கள் அல்லது தவறான எழுத்துக்களை கண்டறிய சிறப்பு ஏஐ கருவிகள் உள்ளன.
வங்கி ஊழியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் போலி அடையாள அட்டைகளை கண்டறிவதற்கான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பட மூலாதாரம், Maharashtra Cyber/Getty Images
போலி அடையாள அட்டைகளை கண்டறிவது எப்படி?
ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட போலி ஆதார் மற்றும் பான் அட்டைகளை பார்ப்பதற்கு உண்மையானவை போலவே இருக்கும். அதை சோதித்து பார்ப்பதன் மூலமாக மட்டுமே அது உண்மையானதா? அல்லது போலியா என அறியமுடியும்.
முதலில் ஆதார், பான் அட்டைகளில் உள்ள புகைப்படத்தை பரிசோதிக்க வேண்டும். உண்மையான புகைப்படத்திற்கும் போலி புகைப்படத்திற்கும் சிறிய வித்தியாசம் இருக்கும்.
இதைக் கண்டறிய புகைப்படத்தை உற்று நோக்குங்கள். இந்த வித்தியாசங்களை எளிதில் கண்டறிவது கடினம்தான். எனினும் சாத்தியமான ஒன்றுதான்.
ஆதார் மற்றும் பான் அட்டைகளில் மத்திய அரசின் லச்சினை இருக்கும். அதை கவனிக்க வேண்டும். ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருந்தால் அது உண்மையான லோகோவில் இருந்து சற்று மாறுபட்டிருக்கும்.
லோகோவின் டிசைன், நிறம், அதில் உள்ள எழுத்துகளில் ஏதேனும் ஒரு மாற்றம் இருக்கும்.
ஆதார் மற்றும் பான் அட்டைகளில் QR Code-கள் இருக்கும். அதை ஸ்கேன் செய்தும் பரிசோதித்துக் கொள்ளலாம்.
இதில் எழுதப்பட்டிருக்கும் இந்தி மற்றும் ஆங்கில எழுத்துக்களில் வேறுபாடுகள் இருக்கக் கூடும்.
கமா, அரைப்ப்புள்ளி, கோடுகள் உள்ளிட்டவை சரியான இடத்தில் உள்ளதா, அவற்றின் நிறம், அளவு சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
ஏனெனில் போலி அட்டைகளில் இதுபோன்ற தவறுகள் நிகழவும் வாய்ப்புள்ளது.
(தகவல்: மகாராஷ்டிரா சைபர் பிரிவு)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு