பட மூலாதாரம், NASA
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குள்ளேயே விண்வெளி வீரர்களை நிலவைச் சுற்றி பத்து நாள் பயணத்துக்கு அனுப்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்தைத் தொடங்க உறுதி பூண்டிருந்த நாசா, இப்போது இந்தப் பணியை முன்கூட்டியே செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளது.
50 ஆண்டுகளாக எந்த நாடும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பயணத்தை மேற்கொண்டதில்லை. நாசா நான்கு விண்வெளி வீரர்களை அங்கு அனுப்பி, அமைப்புகளைச் சோதிக்க உள்ளது.
ஆர்டெமிஸ் II திட்டம் என்பது ஆர்டெமிஸ் திட்டத்தின் இரண்டாவது ஏவுதல் ஆகும். இந்த திட்டத்தின் நோக்கம் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்க வைப்பதும், இறுதியில் நிலவின் மேற்பரப்பில் நீண்ட கால இருப்பை ஏற்படுத்துவதுமாகும்.
பட மூலாதாரம், NASA
நாசாவின் (பொறுப்பு) துணை நிர்வாகி லாகீஷா ஹாக்கின்ஸ், இது மனிதர்கள் மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கியமான தருணமாக இருக்கும் என்று கூறினார்.
“வரலாற்று நிகழ்வுக்கு மிக நெருக்கமான ஒரு தருணத்தில் நாம் உள்ளோம்,” என்று அவர் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“ஏவுதலுக்கான வாய்ப்பு பிப்ரவரி ஐந்தாம் தேதிக்கு முன்னதாகவே ஏற்படலாம், ஆனால் பாதுகாப்புதான் எங்கள் முதன்மை முன்னுரிமை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.”
விண்வெளி வீரர்களை நிலவுக்குக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பான விண்வெளி ஏவுதல் அமைப்பு (SLS), “ஏறக்குறைய ஏவுவதற்குத் தயாராக உள்ளது” என்று ஆர்டெமிஸ் ஏவுதல் இயக்குநர் சார்லி பிளாக்வெல்-தாம்சன் விளக்கினார்.
எஸ்எல்எஸ் உடன் இணைக்கப்படும் ஓரியன் (Orion) எனப்படும் விண்வெளி வீரர் காப்ஸ்யூல் தயாரிப்பு மற்றும் தரைவழி சோதனைகளை நிறைவு செய்வது மட்டுமே மீதமுள்ளது.
ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் பணி 25 நாட்கள் நீடித்தது. அது 2022 நவம்பர் மாதம் ஆட்கள் இல்லாத விண்கலத்தை ஏவியது. அந்த விண்கலம் நிலவைச் சுற்றி பயணம் செய்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது.
அந்தப் பணி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இருப்பினும், விண்கலம் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது வெப்பக் கவசத்தில் சில சிக்கல்கள் இருந்தன. அவை இப்போது சரி செய்யப்பட்டுள்ளன.
ஆர்டெமிஸ் II ஏவுதலில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்றுவர பத்து நாள் பயணம் மேற்கொள்வார்கள். நாசாவின் ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி அமைப்பைச் சேர்ந்த ஜெரெமி ஹேன்சன் ஆகியோர் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இருப்பினும், 1972-ஆம் ஆண்டு அப்போலோ 17-க்குப் பிறகு குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் பயணிக்கும் முதல் குழுவினர் இவர்களாகத்தான் இருப்பார்கள்.
ஆர்டெமிஸ் II இன் தலைமைப் பயண இயக்குநர் ஜெஃப் ரடிகன், விண்வெளி வீரர்கள் இதுவரை யாரும் சென்றிராத அளவு தொலைவுக்கு விண்வெளியில் பயணிப்பார்கள் என்று விளக்கினார்.
“அவர்கள் நிலவுக்கு அப்பால் குறைந்தது 5,000 கடல் மைல்கள் (9,200 கி.மீ) பயணம் செய்வார்கள், இது முந்தைய பயணங்களைவிட மிக அதிகம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திட்டத்தின் நோக்கம்
நிலவில் தரையிறங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ராக்கெட் மற்றும் விண்கலத்தின் அமைப்புகளைச் சோதிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
விண்வெளி வீரர்கள் ஓரியன் காப்ஸ்யூலில் நுழைவார்கள். இது அவர்களின் பயணத்தின்போது அவர்களுக்கு வீடாக இருக்கும். இது எஸ்எல்எஸ்-இன் உச்சியில் அமர்த்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இது, இரண்டு திட ராக்கெட் பூஸ்டர்களின் உதவியுடன் புவி சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்லப்படும். அவை கனமான உந்துவிசையை அளித்த பின் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு வந்துவிடும்.
ஏவப்பட்ட உடன் என்ன நடக்கும்?
ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்குப் பிறகு ராக்கெட்டின் பிரமாண்டமான கோர் ஸ்டேஜ், இடைக்கால க்ரையோஜெனிக் உந்துவிசை அமைப்பு (Interim Cryogenic Propulsion System – ICPS) மற்றும் ஓரியன் விண்வெளி வீரர் பகுதியிலிருந்து பிரிந்து செல்லும். ஓரியனின் சூரிய மின் தகடுகள் விரிந்து விண்கலத்தின் பேட்டரிகளுக்குச் சூரிய ஒளி இல்லாதபோது மின்சாரம் வழங்கத் தொடங்கும்.
தொண்ணூறு நிமிடங்களுக்குப் பிறகு ஐசிபிஎஸ் தனது என்ஜின்களை இயக்கி வாகனத்தை ஒரு உயர் புவி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும். அடுத்த 25 மணி நேரத்துக்கு ஒரு முழு அமைப்புகள் சரிபார்ப்பு நடைபெறும்.
எல்லாம் சரியாக இருந்தால், ஓரியன் ஐசிபிஎஸ்-இலிருந்து பிரிந்து செல்லும்.
விண்வெளி வீரர்கள், நிலவில் தரையிறங்குவதற்கான ஒரு வாகனத்துடன் இணைக்கும் செயல்முறைகளை ஒத்திகை பார்க்க, ஓரியனின் நகர்வுக்கான உந்துகருவியை (Manoeuvring thruster) கட்டுப்படுத்தி ஐசிபிஎஸ்-ஐ நோக்கிச் செல்வார்கள்.
இருபத்தி மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ஓரியனின் சேவை அமைப்பு ஒரு ‘நிலவு நோக்கி உந்துதல் (TLI) எரியூட்டலை’ நடத்தும் – இது விண்கலத்தை நிலவை நோக்கி குறிவைக்கும் ஒரு உந்துவிசையாகும். அதற்குப் பிறகு ஓரியன் நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து 2,30,000 மைல்களுக்கு அப்பால் கொண்டு செல்லும்.
பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் தொடர்ந்து அமைப்புகள் சரிபார்ப்புகளை மேற்கொள்வார்கள்.
ஒரு வகையில், குழுவினர் சோதனை எலிகளாக இருப்பார்கள்.
அவர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்கும் சோதனைகள் நடத்தப்படும். விஞ்ஞானிகள் விண்வெளி வீரர்களின் ரத்தத்திலிருந்து அவர்களின் பயணத்துக்கு முன்னும் பின்னும் பெறப்பட்ட திசு மாதிரிகளை அதாவது ஆர்கனோய்ட்ஸை, வளர்ப்பார்கள்.
விண்வெளி வீரர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஆர்கனோய்ட்ஸின் இரண்டு தொகுப்புகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்று நாசாவின் அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் நிக்கி ஃபாக்ஸ் தெரிவித்தார்.
“எங்களிடம் அந்த விண்வெளி வீரர்களே இருக்கும்போது ஏன் இதையெல்லாம் செய்கிறோம் என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த மாதிரிகளின் மீது புவியீர்ப்பு விசை இல்லாத சூழல் மற்றும் கதிர்வீச்சின் விளைவை ஆழமாக ஆய்வு செய்ய நாங்கள் விரும்புகிறோம். நான் நிச்சயமாக ஒரு விண்வெளி வீரருக்கு உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை! ஆனால், இந்தச் சிறிய ஆர்கனோய்ட் மாதிரிகளை அறுத்து, வித்தியாசத்தை உண்மையில் பார்க்க முடியும்.” என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
விண்கலம் நிலவைத் தாண்டி செலுத்தப்பட்டபின் பூமியின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் பூமி திரும்பும் நான்கு நாள் பயணத்தைத் தொடங்குவார்கள்.
பூமியை வந்தடைந்ததும், விண்கலத்தின் முதன்மை உந்துவிசையமைப்பைக் கொண்ட சேவை அமைப்பு, குழு அமைப்பிலிருந்து பிரிந்துவிடும். விண்வெளி வீரர்கள் பின்னர் பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைந்து, கலிபோர்னியாவின் கடற்கரையில் பாராசூட் மூலம் தரையிறங்குவார்கள். இது பயணத்தின் மிகவும் ஆபத்தான பகுதியாகும்.
பட மூலாதாரம், NASA/Robert Markowitz
இந்தப் பயணத்தின் வெற்றி, நாசா எப்போது ஆர்டெமிஸ் III-ஐ ஏவ முடியும் என்பதையும், உண்மையில் நிலவில் தரையிறங்க முடியும் என்பதையும் தீர்மானிக்கும். ஆனால், இந்தப் பயணம் சரியாக நடந்தாலும் கூட, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் “2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னதாக இல்லை” என்ற இலக்கு, ஓபன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சிமியோன் பார்பரின் கூற்றுப்படி, யதார்த்தமற்றது.
“‘முன்னதாக இல்லை’ என்பது நாசாவுக்கு நன்கு தெரிந்த ஒரு சொல்தான், அதற்கு அதுதான் அர்த்தம். அதுதான் மிக விரைவான சாத்தியமாக உள்ளது,” என்று அவர் கூறினார். ஆர்டெமிஸ் III-ஐ சரியான பாதையில் வைத்திருப்பதற்கான செலவு காரணமாக அது கூட அதிக நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார்.
“[ஈலோன் மஸ்க்கின்] ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்புக்கு அழைத்துச் செல்லவும், அழைத்து வரவும் தேவைப்படும். சமீபத்திய மாதங்களில், பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைப் பயணத்தை அடையவே ஸ்டார்ஷிப் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் எனும் நிலையில் விண்வெளி வீரர்களை அதில் அமர்த்துவது மிகவும் கடினம்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு