தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுள் 64.2% மாணவர்கள்தான் இரண்டாம் வகுப்பு பாடங்களை வாசிப்பதாகவும் 40% மாணவர்களே வகுத்தல் கணக்குகளை போடுவதாகவும் கல்வி ஆண்டு நிலை அறிக்கை 2024 (ASER Rural 2024) கூறுகிறது.
பள்ளி மாணவர்களிடையே வாசித்தல் மற்றும் அடிப்படை கணிதத் திறன் தொடர்பாக இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம் ஜனவரி 28 அன்று வெளியானது.
இதில், இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வி தொடர்பான பல தரவுகள் தரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களிடையே, வாசிப்பு மற்றும் அடிப்படை கணிதத் திறன் எந்த அளவில் உள்ளது என்ற தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் தரவுகள், மாணவர்களிடையே வாசிப்பு மற்றும் அடிப்படை கணிதத்தில் இடைவெளி இருப்பதைக் காட்டுகின்றன.
ஆனால், இந்த ஆய்வின் மாதிரிகள் மிகக் குறைவானவை என்பதால், இதை ஒட்டுமொத்த பள்ளிக் கல்வியின் நிலையாகக் கூற முடியாது என கல்வியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
எனினும், வாசிப்பு மற்றும் கணிதத்தில் சில புதுமைகளைப் புகுத்தி மாணவர்களிடையே கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்கான வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தரவுகள் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி குறித்துக் கூறுவது என்ன? நிபுணர்கள் அதை எப்படிப் பார்க்கின்றனர்?
தமிழக ஊரகப் பகுதிகளில், வாசித்தல் மற்றும் அடிப்படை கணிதத்தில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்கள் (அரசு மற்றும் தனியார்) குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதாகவும் இந்த புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டில் 67.4% மாணவர்கள் (6-14 வயதுடையவர்கள்) அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர், இந்த விகிதம் 2022இல் 75.7% ஆக உயர்ந்தது. ஆனால், 2024இல் இந்த விகிதம் 68.7 சதவீதமாக குறைந்ததாக அந்த புள்ளிவிவரம் கூறுகிறது.
இந்த ஆண்டு வெளியான புள்ளிவிவரத்தின்படி எட்டாம் வகுப்பு படிக்கும் 64.2% மாணவர்களால், இரண்டாம் வகுப்பு பாடங்களைப் படிக்க முடிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2022இல் 63% ஆக இருந்தது.
அதேபோன்று, 40% எட்டாம் வகுப்பு மாணவர்களால் வகுத்தல் (division) கணக்குகளைப் போட முடிவதாக அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.
அதேபோன்று, ஐந்தாம் வகுப்பு படிக்கும் 20.8% மாணவர்கள் வகுத்தல் கணக்குகளைப் போட முடிவதாக அந்த புள்ளிவிவரம் கூறுகிறது.
மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுள் இரண்டாம் வகுப்பு பாடங்களை வாசிக்கும் திறனுடைய மாணவர்கள் 2018இல் 4.8 சதவீதமாக இருந்தனர். இந்த விகிதம் 2024இல் 12 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசியளவில் இந்த விகிதம் 2022இல் 16.3 சதவீதமாகவும் 2024இல் 23.4% ஆகவும் உள்ளது.
பல தரப்புகளில் 2022க்கு பிறகு வாசித்தல் மற்றும் எண் கணிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அது கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தையை நிலையை எட்டவில்லை என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
‘ஆய்வில் குறைபாடு’
இந்த புள்ளிவிவரங்களை கல்வியாளர்கள் எப்படி பார்க்கின்றனர்?
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகையில், “ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கக்கூடிய அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
இதை முக்கியமாக இந்த ஆய்வில் கருத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. என்னென்ன காரணங்களால், அந்த குழந்தைகள் படிக்கவில்லை என்பது இந்தப் புள்ளிவிவரத்தில் சுட்டிக் காட்டப்படவில்லை” என்றார்.
மேலும், இந்த ஆய்வு பல ஆண்டுகளாக தனியார் பள்ளிகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல் இருந்ததாகவும் ஏழு ஆண்டுகளாக தொடர் விமர்சனங்களுக்குப் பின்பே தனியார் பள்ளிகள் சமீப ஆண்டுகளாக சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால், இந்த ஆய்வின் நோக்கம், அரசுப் பள்ளிகள் மீதான நன்மதிப்பைக் குறைப்பதா என்ற சந்தேகம் உள்ளது என்கிறார் அவர்.
ஆய்வு எப்படி நடத்தப்படுகிறது?
இந்த ஆய்வுகளை, ஏ.எஸ்.இ.ஆர் மையம் மற்றும் பிரதம் (Pratham) எனும் அரசு-சாரா அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. 5 முதல் 16 வயதுடைய மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர். நாடு முழுவதும் 19 மொழிகளில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
மாவட்ட அளவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் அடிப்படை வாசிப்பு மற்றும் கணிதத் திறனை மதிப்பிடுவதை தாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக, ஏ.எஸ்.இ.ஆர் தன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
அதன்படி, கிராமப்புறங்கள் நிறைந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 கிராமங்கள் எடுக்கப்பட்டு, அதில் 20 வீடுகள் ரேண்டமாக தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இந்த வீடுகளில் உள்ள 3-16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, மாவட்டத்துக்கு 600 வீடுகளிலும் நாடு முழுவதும் 3 லட்சம் வீடுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அதன் இணையதளம் கூறுகிறது.
அப்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 லட்சம் குழந்தைகளிடையே ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அக்குடும்பங்களின் வறுமை, வேலைவாய்ப்பு போன்ற மற்ற சமூக, பொருளாதார காரணிகளுக்கு, இந்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்தும் தேசிய மாதிரி சர்வே முதன்மை ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது.
‘இது ஒட்டுமொத்த நிலையை பிரதிபலிக்காது’
இருபது வீடுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வுத் தரவுகள் போதுமானவை அல்ல என்பது கல்வியாளர் நெடுஞ்செழியனின் கருத்து.
இதுதொடர்பாக, நெடுஞ்செழியன் கூறுகையில், “இதன் மாதிரி அளவு மிகவும் குறைவு. அதை வைத்து, ஒரு மாநிலமோ அல்லது நாடோ ஒட்டுமொத்தமாக பள்ளிக் கல்வியில் மோசமாக இருப்பதாகக் கூற முடியாது,” என்கிறார் அவர்.
மேலும், “இது மிகவும் அடிப்படையான தகவல்கள் மட்டுமே. புள்ளி விவரங்களை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும். அரசுடன் சேர்ந்தே இத்தகைய புள்ளி விவரங்களை ஒட்டுமொத்த அளவில் விரிவாக மேற்கொள்ள வேண்டும். ஏன் இதை ஒரு அரசு-சாரா நிறுவனம் செய்ய வேண்டும்?” என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.
எனினும், கற்றல் குறைபாடுகளையும் இடைவெளிகளையும் குறைக்க சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சில ஆசிரியர்களும் நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர்.
அரசுப் பள்ளி ஆசிரியரும் கவிஞருமான சுகிர்தராணி கூறுகையில், “ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எழுத்துகளை அறிமுகப்படுத்துவதிலும் அதை அவர்கள் கண்டறிவதிலும் சிரமம் ஏற்படுகிறது.
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளையும் அடையாளம் காண்பது, குறில் – நெடில் வேறுபாடு, அதை உச்சரிக்கும் முறை ஆகியவற்றிலும் போதாமை இருக்கிறது,” என்றார் அவர்
என்ன செய்யலாம்?
கல்வியாளர் ஜே.பி. காந்தி கூறுகையில், “இதை ஒரு முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாம். வாசித்தலை ஊக்குவிக்கும் வகையில் போட்டித் தேர்வுகள், விநாடி-வினா போட்டிகளை நடத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும் பயன்படுத்தி முப்பரிமாணங்களில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார்.
தொழில்நுட்பத்தையும் இணைத்துக்கொண்டு கல்வி கற்பிப்பதை அதிகரிக்க வேண்டும் என்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எளிமையாக கணிதத்தைக் கற்பிக்க முடியும் என்றும் அதை ஆசிரியர்கள் பயன்படுத்தினால் வாழ்வியல் உதாரணங்களுடன் கணிதத்தை விளக்க முடியும் என்றும் கூறினார் காந்தி.
இந்த ஆய்வுத் தரவுகள் குறித்து கருத்துகளை அறிய, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் ஆகியோரது அலுவலகங்களைத் தொடர்புகொண்டோம்.
பள்ளிக் கல்வி தொடர்பான நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் உள்ளதாகவும், பிப்ரவரி 3 வரை அந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் பதில் வந்தது.
பள்ளிக் கல்வித்துறையின் கருத்துகள் வரும்பட்சத்தில் அவை இக்கட்டுரையில் சேர்க்கப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு