டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. இதன்மூலம் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்தது. தொடர்ந்து இரண்டாவது போட்டியைத் தோற்றிருக்கும் ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.
ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுக்க, அதை இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும்போதே எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் நிசங்கா 52 பந்துகளில் சதமடித்து இலங்கை அணிக்கு மிகமுக்கிய வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
2007 முதல் நடந்துகொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 12 முறை மட்டுமே சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. 11 வீரர்களே அந்த மூன்று இலக்க ஸ்கோரை எட்டியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இப்போது நிசங்காவும் இணைந்திருக்கிறார்.
நிசங்காவும் சரி, இலங்கையும் சரி… முதல் பந்து முதல் இலக்கை எட்டும் வரை மிகவும் நேர்த்தியாக இந்த சேஸை எதிர்கொண்டனர். பெரிய ‘ரிஸ்க்’ ஏதும் எடுக்கவில்லை. அடிப்பதற்கு ஏற்ற பந்துகள் கிடைத்தபோது அதை சரியாக பயன்படுத்திக்கொண்டனர். களத்தில் பனியின் தாக்கம் இருந்ததும் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. அதனால் ஆரம்பத்திலிருந்தே தேவைப்படும் ரன்ரேட்டுக்கு அருகிலேயே பயணித்தது இலங்கை அணி. விக்கெட்டுகளும் கையில் இருந்ததால் எந்த இடத்திலும் இலங்கை அணி நெருக்கடியை உணராமல் சேஸ் செய்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார் நிசங்கா
நெருக்கடிக்கு மேல் நெருக்கடி
சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேவிடம் தோற்றது ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல, இலங்கைக்குமே நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை தோற்று, ஆஸ்திரேலியா ஓமனையும், ஜிம்பாப்வே அயர்லாந்தையும் வென்றால் ஜிம்பாப்வே vs இலங்கை போட்டி நாக் அவுட் போல ஆகிவிடும். அந்தப் போட்டியின் வென்றாலும் ரன்ரேட் முக்கியம் என்ற நிலை வந்திருக்கக்கூடும்.
அப்படியொரு நிலையில் தான் இந்தப் போட்டிக்குள் கால் வைத்தது இலங்கை அணி. டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தவர்களுக்கு முதல் ஓவரே கவலை தந்தது – 16 ரன்கள். இரண்டாவது ஓவரில் 9 ரன்கள். அதற்கடுத்து ஓவரிலோ அதைவிடப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான மதீஷா பதிரானா காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார்.
முக்கியமான ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணிக்கெதிராக இலங்கை பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிய ஆஸ்திரேலியாவோ ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் டார்கெட் செய்து அடித்தது.
பவர்பிளே முடிவிலேயே ஆஸ்திரேலியா 70 ரன்கள் எடுத்துவிட்டது. 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் அந்த அணி 97 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. அவர்களின் ரன்ரேட் 12.12 ஆக இருந்தது. டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்திருந்தார். கேப்டன் மிட்செல் மார்ஷும் அதை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
அப்படியொரு நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்ததால், அதன்பிறகு கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், ஜாஷ் இங்லிஸ், டிம் டேவிட், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், கூப்பர் கானலி என அதிரடி வீரர்கள் நிறைந்திருந்ததால் அவர்கள் நிச்சயம் 220 – 230 ரன்களுக்கு மேலேயே எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருந்தது.
வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸுக்கு 9-வது ஓவர் ஒரு வேகத்தடையாக அமைந்தது. அந்த ஓவருக்குப் பிறகு இலங்கை அணி ஆட்டத்தை தங்கள் கைக்குள் கொண்டுவந்தது.
ஹேமந்தா வீசிய ஒன்பதாவது ஓவரில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராகக் களமிறங்கிய கேமரூன் கிரீன் அந்த அதிரடியைத் தொடர நினைத்தார். ஆனால், அது அவருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பாதகமாக முடிந்தது. இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்ள முனைந்த அவர், சில தருணங்களில் கிரீஸுக்கு வெளியே வந்தும் பெரிய ஷாட்கள் அடிக்க முற்பட்டார்.
ஹேமந்தா பந்துவீச்சில் கேமரூன் கிரீன் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஒரு ஸ்டம்பிங் அப்பீலை எதிர்கொண்டார். ஆனால், கிரீன் அந்த முறை தப்பிவிட்டார். ஆனால், டுனித் வெல்லாலகே வீசிய அடுத்த ஓவரில் அவரால் தப்பிக்க முடியவில்லை.
பத்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் அவர் இறங்கி வந்து அடிக்க முற்பட, அந்தப் பந்து நன்கு வெளியே செல்ல, கிரீனால் அதை அடிக்க முடியவில்லை. பந்தை சட்டென்று பிடித்து ஸ்டம்பிங் செய்து கிரீனை வெளியேற்றினார் குசல் மெண்டிஸ்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது இலங்கைக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. 11-வது ஓவரில் இரண்டு வாய்ப்புகளை உருவாக்கினார் ஹேமந்தா. நன்றாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் மிட்செல் மார்ஷ், அவர் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்த பந்திலேயே புதிய பேட்டர் இங்லிஸை அவுட்டாக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டம்பிங் செய்வதற்கான வாய்ப்பை இம்முறை குசல் மெண்டிஸ் தவறவிட்டார்.
இப்படி தொடர்ச்சியாக அதிரடி மட்டுமே காட்டுவது என்ற மனநிலையில் வந்தது ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பின்னடைவாக அமைந்தது. அதேநேரத்தில், நல்ல லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி இலங்கை பௌலர்கள் விக்கெட்டுகளை சாய்த்தனர். 13-வது ஓவரில் பந்துவீச வந்த கமிந்து மெண்டிஸ், டிம் டேவிட்டை வெளியேற்ற ஆஸ்திரேலியா 130/4 என்ற நிலைக்கு வந்தது.
9 முதல் 13 வரையிலான ஐந்து ஓவர்களில் 34 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. 12.12 என்றிருந்த ரன்ரேட் 10.07 ஆகக் குறைந்தது. அதன்பிறகு மேக்ஸ்வெல் மற்றும் இங்லிஸ் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினாலும், அவர்களால் ரன்ரேட்டை அதிகப்படுத்தவோ இல்லை அதே ரன்ரேட்டை தொடரவோ முடியவில்லை. களத்தில் பாய்ந்து மேக்ஸ்வெல் கேட்சை பிடித்து அந்த பார்ட்னர்ஷிப்பையும் உடைத்தார் நிசங்கா.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கிளென் மேக்ஸ்வெல் கேட்ச்சை பாய்ந்து பிடித்த நிசங்கா
ரன்ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் கடைசி கட்டத்திலும் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழக்க, அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணி 6 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது.
இப்படி உத்வேகமாக முதல் இன்னிங்ஸை முடித்த இலங்கை அணி, அதே உத்வேகத்தோடு பேட்டிங் செய்து வெற்றியையும் வசப்படுத்தியது. இதன் மூலம் பி பிரிவில் இருந்து முதல் அணியாக சூப்பர் 8 சுற்றை உறுதி செய்தது.
“கடவுளின் மடியில்”
இந்தத் தோல்வி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அணி 3 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது. இனி ஓமன் உடனான போட்டியில் வெற்றி பெற்றாலும் அவர்களால் 4 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடியும். அதனால், ஜிம்பாப்வே அணி அடுத்த இரு போட்டிகளிலும் தோற்றால் மட்டுமே அவர்கள் சூப்பர் 8 வாய்ப்பு பற்றி நினைத்துப் பார்க்க முடியும். அப்போதும் கூட ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 3 அணிகளில் எந்த அணிக்கு நல்ல ரன்ரேட் இருக்கிறதோ, அந்த அணியே அடுத்து சுற்றுக்கு முன்னேறும். எனவே ஆஸ்திரேலியா தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், “இலங்கை அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. எங்களுக்குக் கிடைத்த தொடக்கத்தை ஒப்பிடும்போது குறைவான ஸ்கோரே எடுத்தோம். நாங்கள் இப்போது கடவுளின் மடியில் இருக்கிறோம். டிரஸ்ஸிங் ரூமில் பல உணர்வுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அயர்லாந்து, ஜிம்பாப்வே போட்டியை நம்பிக்கையுடன் பார்ப்போம்” என்று கூறினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஜிம்பாப்வே – அயர்லாந்து போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றுவிட்டால் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழக்கும்.