பட மூலாதாரம், AFP via Getty Images
-
- எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
முழு உடலையும் கட்டுப்படுத்துவதால் மூளை, மனித உடலின் மிக முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.
உடலின் ஒவ்வோர் உறுப்பில் இருந்தும் மூளைக்கு சமிக்ஞைகள் செல்கின்றன. பின்னர் மூளை தேவைக்கேற்ப செயல்பட அந்த உறுப்புக்குக் கட்டளையிடுகிறது.
ஆனால், உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, அதை மருத்துவர்கள் மூளை பக்கவாதம் என்று அழைக்கின்றனர்.
மூளை பக்கவாதம் உடலின் ஒரு பகுதியுடன் அல்லது பல பகுதிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
உடலின் ஏதேனும் ஓர் உறுப்பு அல்லது பகுதியில் இருந்து மூளைக்கு சமிக்ஞைகள் செல்லவில்லை என்றால், அந்தப் பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிவிடும்.
ஒரு நபருக்கு மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இருந்தால், அதன் அறிகுறிகளை எவ்வாறு அடையாளம் காணலாம்? அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
மூளை பக்கவாதத்தின் 6 அறிகுறிகள்
மூளை பக்கவாதம் திடீரென ஏற்படும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், ஓர் ஆரோக்கியமான நபர் எதிர்காலத்தில் மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதைச் சில ஆரம்ப அறிகுறிகளில் இருந்து அறிய முடியும்.
பொதுவாக மருத்துவர்கள் இதை **பிஇஎஃப்ஏஎஸ்டி (BEFAST) என்று அழைக்கின்றனர்:
- (B)பி – (பேலன்ஸ்) சமநிலை: ஆரோக்கியமாகத் தோன்றும் ஒரு நபரின் சமநிலை திடீரென பாதிக்கப்பட்டு, பின்னர் சிறிது நேரத்தில் சரியாகி விடுதல்.
- (E)இ – கண்கள் (Eyes): திடீரென கண்களுக்கு முன்பாகத் திரை விழுந்ததைப் போல் இருட்டாகி, பின்னர் சாதாரணமாகத் தோன்றுதல்.
- (F)எஃப் – முகம் (Face): பேசும்போது திடீரென ஒருவரின் முகம் கோணி, உடனடியாகச் சரியாகிவிடுதல்.
- (A)ஏ – கைகள் (Arms): கை திடீரென கட்டுப்பாடற்று இருந்து, பின்னர் சரியாகிவிடுதல்.
- (S)எஸ் – பேச்சு (Speech): திடீரென பேச்சு நின்று, சிறிது நேரம் பேச முடியாமல் இருத்தல்.
- (T)டி – நேரம் (Time): இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டு, சிறிது நேரத்தில் சரியாகிவிட்டாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
ஏனெனில், இந்த அறிகுறிகள் மூளைக்கு ரத்தம் செல்வதில் தடை இருப்பதைக் குறிக்கின்றன. இது எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
“இத்தகைய அறிகுறிகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் நோய்களும் இருக்கலாம். ஆனால், ஒரு நபர் முழுமையாக ஆரோக்கியமாக இருந்தால், இந்த அறிகுறிகள் எதிர்காலத்தில் மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்துள்ளதைக் குறிக்கின்றன. மேலும், இது உடனடியாகச் சரியாகவில்லை என்றால், அந்த நபருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது என்று பொருள்,” என டெல்லியின் பிஎல் கபூர் மேக்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பிரதீக் கிஷோர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
மூளை பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
ஒரு நபருக்கு சமநிலை பாதிப்பு, திடீரென பார்வை இழப்பு, பேசுவதில் சிரமம், கைகால்கள் செயல்படாமை அல்லது முகம் கோணுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு, அவை உடனடியாகச் சரியாகவில்லை என்றால் அது மூளை பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
இத்தகைய சூழலில், நேரத்தை வீணாக்காமல் உடனடியாக மருத்துவரிடம் செல்வது அவசியம்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) நரம்பியல் துறையின் டாக்டர் மஞ்சரி திரிபாதி, “மூளை பக்கவாதம் ஏற்பட்டால், முதல் நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டியது மிகவும் முக்கியம். இது தமனியில் அடைப்பு ஏற்படுவதாலோ அல்லது தமனி வெடிப்பதாலோ நிகழ்கிறது, இதனால் மூளைக்கு ரத்தம் செல்ல முடியாது” என்று கூறுகிறார்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, மூளை பக்கவாதம் ஏற்பட்டால் இந்த முதல் நான்கரை மணி நேரம் ‘கோல்டன் பீரியட்’ என்று அழைக்கப்படுகிறது.
இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், ஆறு முதல் எட்டு மணிநேரத்திற்குள் சிகிச்சை தொடங்கினாலும், நோயாளி மீண்டு வருவது சாத்தியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமனியில் ரத்த உறைவு இருந்தால், ரத்த உறைவு கரைப்பான் ஊசி மூலம் அதைக் கரைக்க முயற்சி எடுக்கப்படுகிறது. சில நேரங்களில், தேவைப்பட்டால் மற்றும் சாத்தியமாக இருந்தால், த்ரோம்பெக்டமி (ஒரு வகை அறுவை சிகிச்சை) மூலம் உறைந்த ரத்தம் அகற்றப்படுகிறது,” என மருத்துவர் மஞ்சரி திரிபாதி கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
“அறுவை சிகிச்சை மூலம் உறைந்த ரத்தத்தை அகற்ற முடியும். ஆனால் இதற்கு வரம்புகள் உள்ளன. பெரிய தமனியில் ரத்தம் உறைந்திருந்தால் இது சாத்தியம். மூளை பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், நோயாளியை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது முக்கியம்,” என மெட்ரோ குழும மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர் சோனியா லால் குப்தா கூறுகிறார்.
மூளை பக்கவாதம் ஏற்பட்ட நோயாளி மீட்கப்படுவது, அதாவது மீண்டும் ஆரோக்கியமடைவது சாத்தியம்தான். ஆனால் இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
சிறந்த சிகிச்சையை அளிக்க சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகள் மூலம் மூளை பக்கவாதத்தின் தன்மை மற்றும் தீவிரத்தன்மை கண்டுபிடிக்கப்படுகிறது.
பல நேரங்களில் மக்கள் மூளை பக்கவாத விவகாரத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் நோயாளி முழுமையாகக் குணமடைவது கடினமாகிறது.
“மூளை பக்கவாதம் அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதில் முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியம். இந்தக் காலகட்டத்தில் பிசியோதெரபி மூலமும் பயனடையலாம்,” என மருத்துவர் சோனியா லால் குப்தா கூறுகிறார்.
இத்தகைய நோயாளிகளுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகும் முன்னேற்றம் காணப்படுகிறது, ஆனால் அதன் வேகம் மிகவும் மெதுவாக இருக்கும்.
மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள்
மூளை பக்கவாதம் எந்த வயதினருக்கும் ஏற்படலாம் என்றாலும் சிலருக்கு இதற்கான ஆபத்து அதிகம்.
கட்டுப்படுத்தப்படாத மற்றும் தொடர்ந்து நீடிக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன் ஆகியவை இதன் முக்கியக் காரணங்கள்.
சில நேரங்களில் இளைஞர்களுக்கு மரபணு காரணங்களால் ரத்தம் கெட்டியாகி, மூளை பக்கவாத ஆபத்து அதிகரிக்கிறது.
“இது பொதுவாக முதியவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது, ஆனால் மோசமான வாழ்க்கை முறை, ஜிம்மில் உடற்பயிற்சியின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் கழுத்தில் மசாஜ் செய்வதாலும் மக்கள் மூளை ரத்தக்கசிவுக்கு ஆளாகலாம்” என எய்ம்ஸ் மருத்துவர் மஞ்சரி திரிபாதி கூறுகிறார்.
குளிர்காலத்தில் மூளை பக்கவாத பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது.
குளிர்காலத்தில் மக்கள் பொதுவாக அதிக கொழுப்பு உணவுகளை உண்கின்றனர் என்பதால் இந்தியா போன்ற நாடுகளில் உணவு பழக்க வழக்கங்கள் இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது
இந்தப் பருவத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகிறது.
“பொதுவாக 60-65 வயதுடைய முதியவர்களுக்கு மூளை பக்கவாத ஆபத்து அதிகம். ஆனால் சமீப காலங்களில் எங்களிடம் வரும் 40-45% மூளை பக்கவாத நோயாளிகளின் வயது 50ஐ விட குறைவாக உள்ளது,” என டெல்லி பிஎல் கபூர் மேக்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பிரதீக் கிஷோர் கூறுகிறார்.
இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் மது அல்லது சிகரெட் புகைப்பது போன்ற பழக்கங்களைக் காரணமாகக் கருதுகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு