15
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த நட்பு மற்றும் தொடர்புகள் குறித்து கடந்த சில வாரங்களாக எழுந்து வந்த கடும் சர்ச்சைகளின் பின்னணியில், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன்-வின்ட்சர், பொது அலுவலகத்தில் தவறான நடத்தை மேற்கொண்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது 66ஆவது பிறந்த நாளான இன்று, அவர் வசித்து வந்த இல்லத்துக்கு காவல்துறையினர் வந்த காட்சிகள், ஊடக புகைப்படக்காரர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தென் இங்கிலாந்தை உள்ளடக்கிய காவல் எல்லைக்கு பொறுப்பான Thames Valley Police, 66 வயதுடைய ஒருவரை பொது அலுவலகத்தில் தவறான நடத்தை தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், பெர்க்ஷையர் மற்றும் நார்ஃபோக் பகுதிகளில் உள்ள இரண்டு முகவரிகளில் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த காவல் துறை, “தேசிய வழிகாட்டுதல்களின் படி கைது செய்யப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை” எனக் கூறியுள்ளது.
மன்னர் மூன்றார் சார்லஸின் சகோதரரும், மறைந்த மகாராணி எலிசபெத் II-இன் மகனுமான ஆண்ட்ரூ மீது, குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பல ஆண்டுகளாக இருந்த நெருங்கிய நட்பு காரணமாக கடும் அழுத்தம் உருவாகி வந்தது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், Crown Prosecution Service நிபுணர்களுடன் இணைந்து, ஆண்ட்ரூ மீது அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக Thames Valley Police தெரிவித்திருந்தது.
இதுவரை எப்ஸ்டீனுடன் தொடர்புடைய எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் ஆண்ட்ரூ மறுத்து வந்துள்ளார். அந்த நட்பு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவர், தன்னால் எந்த தவறும் செய்யப்படவில்லை என்பதில் தொடர்ந்து நிலைப்பாடு கொண்டுள்ளார்.