• Sat. Aug 23rd, 2025

24×7 Live News

Apdin News

BREAKING ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Byadmin

Aug 23, 2025


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, ​​2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம் செய்தபோது, ​​அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இலண்டனுக்கு மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணைக்காக அவர் சிஐடி முன் இன்று அழைக்கப்பட்டார். இலண்டன் பயணத்தில் தனியார் நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும் ஆனால், அரச நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொலிஸ் பி-அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதி, 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் முனைவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றார்.

தொடர்புடைய செய்தி : ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து, நடந்தது என்ன?

எந்தவோர் உத்தியோகபூர்வ அரச நோக்கமும் இல்லாத இந்தப் பயணம், விக்கிரமசிங்கவின் கியூபா மற்றும் அமெரிக்காவிற்கான அரச பயணத்துடன் இணைக்கப்பட்டது. இந்தத் தனிப்பட்ட நிகழ்விற்காக ஜனாதிபதி அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்கு விமானத்தில் சென்றார்.

இந்த இலண்டன் பயணத்தில் அவருடன் ஒரு தூதுக்குழு சென்றது. இந்தப் பயணத்திற்காக இலங்கை அரச நிதியிலிருந்து சுமார் ரூ. 16.9 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்காகவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலுக்காக பஸ்ஸில் ரணில் விக்கிரமசிங்கவை பொலிஸார் அழைத்துச் சென்றபோது, நீதிமன்றத்தில் கூடியிருந்த ஆதரவாளர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

By admin