14
அமெரிக்காவின் Brown பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ‘கிரீன் கார்ட்’ குடிவரவுத் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் குடிவரவு நடைமுறைகள் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய மாணவன், கிரீன் கார்ட் திட்டத்தின் மூலம் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என தெரியவந்ததை அடுத்து, இந்தத் திட்டம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி – Brown பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் கைது!
இதன் அடிப்படையில், அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் இந்த குடிவரவு சேவைத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவு இலங்கையர்கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடையே பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த காலங்களில் கிரீன் கார்ட் லோட்டரி மூலம் இலங்கையர்கள் பலர் அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளனர்.
இந்த விசா திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 50,000 பேருக்கு சட்டபூர்வமாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் மாத்திரம் இந்த கிரீன் கார்ட் திட்டத்திற்காக சுமார் 20 மில்லியன் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரியவருகிறது.