பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் எம்பிஏ அல்லது அதுபோன்ற முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர வேண்டுமானால், நீங்கள் சிஏடி எனப்படும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
ஐஐஎம் நிறுவனங்கள் மற்றும் மற்ற வணிக பள்ளிகளில் சேருவதற்காக கணினி அடிப்படையில் நடத்தப்படும் தேசியளவிலான நுழைவுத்தேர்வு இது.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
சிஏடி தேர்வு குறித்த முக்கிய தகவல்கள்
பட மூலாதாரம், Getty Images
இது கணினி அடிப்படையிலான தேர்வு (CBT).
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஐஐஎம் நிறுவனம் இந்த தேர்வை நடத்துவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றன.
இந்த தேர்வில் மூன்று பிரிவுகள் உள்ளன.
- வாய்மொழி திறன் மற்றும் வாசிப்புப் புரிதல் (VARC – Verbal Ability and Reading Comprehension): இதில், ஒழுங்கற்ற முறையில் இருக்கும் வாக்கியங்களை சீராக்குதல் (Para Jumbles), கொடுக்கப்பட்டிருக்கும் பத்திகளை புரிந்துகொண்டு சுருக்கமாக எழுதுதல் (Para Summary), கொடுக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களில் மாறுபட்ட ஒன்றை கண்டுபிடித்தல் (Odd Sentence Out) மற்றும் கொடுக்கப்பட்டிருக்கும் பத்தியை புரிந்துகொண்டு அதை சரியாக விளக்குதல் உள்ளிட்டவை அடங்கும்.
- தரவுகளை விளக்குதல் மற்றும் தர்க்க ரீதியான பகுத்தறிவு (DILR – Data Interpretation and Logical Reasoning): ரத்த உறவுகள், திசைகள், கடிகாரம் மற்றும் நாட்காட்டி, அட்டவணைகள், வரைபடங்கள், விளக்கப்படங்கள் அல்லது மற்ற காட்சிப்படுத்தல் குறித்த கேள்விகள் இப்பிரிவில் கேட்கப்படும்.
- அளவு திறன் (Quant – Quantitative Aptitude): எண்கணிதம் (Arithmetic), இயற்கணிதம் (Algebra), வடிவியல் (Geometry), நவீன கணிதம் (Modern Maths), எண் அமைப்பு (Number System) ஆகியவை குறித்து இதில் கேள்விகள் எழுப்பப்படும்.
இந்த தேர்வு இரண்டு மணிநேரம் நடக்கக்கூடியது, ஒவ்வொரு பிரிவுக்கும் 40 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கொடுக்கப்பட்டிருக்கும் சில தேர்வுகளிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்க வேண்டும் (Multiple Choice Questions – MCQs) கேள்விகளுக்கு ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மூன்று மதிப்பெண்கள் வழங்கப்படும், தவறான கேள்விகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.
MCQ அல்லாத கேள்விகளுக்கு ஒரு சரியான பதிலுக்கு மூன்று மதிப்பெண்கள் வழங்கப்படும், ஆனால் தவறான பதிலுக்கு மதிப்பெண்கள் கழிக்கப்படாது.
இந்த தேர்வுக்கு குறிப்பிட்ட பாடத்திட்டம் என்பது கிடையாது. எனினும், இதற்கு தயாராகுபவர்கள் 10ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணிதத்தை துல்லியமாக புரிந்துவைத்திருப்பது அவசியம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த தேர்வில் பங்கேற்க எந்த வயதுவரம்பும் இல்லை, ஆனால் சில தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
சிஏடி தேர்வை யார் எழுத முடியும்?
பட மூலாதாரம், Getty Images
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள்
- பட்டப்படிப்புக்கும் குறைவான கல்வித்தகுதி கொண்டவர்கள் இத்தேர்வை எழுத முடியாது.
- பட்டப்படிப்பின் இறுதியாண்டிலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை பொறுத்து எங்கு இடம் கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பது தீர்மானிக்கப்படுமா? இல்லை.
ஐஐஎம் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களில் சேர்க்கை சிஏடி மதிப்பெண்களை வைத்து மட்டும் அமையாது, மாறாக நேர்காணலும் முக்கியமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், 10, 12 மற்றும் பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண்களும் கருத்தில் கொள்ளப்படும். ஏற்கெனவே பணி அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.
அதன்பிறகு, இந்த தேர்வில் எடுக்கப்படும் சதவிகிதத்தைப் பொறுத்து அடுத்து என்ன என்பது முடிவு செய்யப்படும்.
ஐஎம்எஸ் எனும் கல்வி நிறுவனத்தில் பணியாற்றிவரும் சந்தீப் அகர்வால் கூறுகையில், “சில ஐஐஎம்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 5-10% மதிப்பு (weightage) வழங்கப்படுகிறது. சில நிறுவனங்கள் முந்தைய பணி அனுபவத்தை கருத்தில் கொள்கின்றன. வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் அமைகின்றன.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
எப்படி தயாராக வேண்டும்?
கரியர் லாஞ்சர் எனும் நிறுவனத்துடன் தொடர்புடைய ஜெய் சிங் சஜ்வான், சிஏடி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக கற்பித்துவருகிறார்.
தேர்வுக்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்பாக மாணவர்கள் மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும் என அவர் கூறுகிறார்.
“மாதிரி தேர்வுகள் மூலம் தங்கள் திறனை ஆய்வுசெய்துகொள்ள வேண்டும். தங்களின் பலம், பலவீனங்கள் குறித்து தெரிந்துகொள்ள இது உதவும். நீங்கள் எங்கு தவறு செய்கிறீர்கள் என்பது தெரியவரும்.” என்றார்.
“உங்களின் பலம் எதுவோ அதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதில்லை என அர்த்தம் கொள்ளக்கூடாது.”
நன்றாக படிக்கும் மாணவர்கள் சில சமயங்களில் இத்தேர்வை ஒழுங்காக எழுத மாட்டார்கள் என்றும், சராசரியாக படிக்கும் மாணவர்கள் நன்றாக எழுதிவிடுவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
தேர்வுக்கு தயாராகுதல் மற்றும் என்ன செய்ய வேண்டும் என அறிந்திருப்பதாலேயே அவர்கள் நன்றாக எழுதுவதாக கூறுகிறார்.
“தேர்வு எழுதுவதற்கு அவர்கள் என்ன நேரத்தை தேர்ந்தெடுத்தார்களோ, அதே நேரத்தில் மாதிரி தேர்வுகளை எழுதிப்பார்க்கும்போது கொஞ்சம் ஆசுவாசமாக உணர முடியும். தேர்வுக்கு முன்பாக 10 நாட்களுக்கு மாதிரி தேர்வுகளை எழுதும்போது தேர்வு குறித்த பயம் நீங்கும். அதனால், தேர்வை சிறப்பாக எழுத முடியும். மாதிரி தேர்வில் என்ன தவறு செய்தீர்களோ, அதனை சரிசெய்ய வேண்டும்.”
சிஏடி தேர்வு காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று நேரங்களில் நடத்தப்படுகின்றது.
ஐஐஎம் நிறுவனத்தில் வாய்மொழி திறன் மற்றும் வாசிப்புப் புரிதல் (VARC) பிரிவின் தலைவராக உள்ள ஜத்தீன் சிஏடி தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்கின்றார். மாதிரி தேர்வுகளை எழுதிப்பார்க்க வேண்டும் எனக்கூறும் அவர், அதை அதிகளவில் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்.
பிபிசி ஹிந்தியிடம் அவர், “இரண்டு – மூன்று நாட்களுக்கு ஒரு மாதிரி தேர்வு போதுமானது. அடுத்தடுத்து மாதிரி தேர்வுகளை எழுதாமல் அதில் நேரும் தவறுகளை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். தேர்வுக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பாக கடைசியாக ஒரு மாதிரி தேர்வை எழுதலாம். தினமும் நீங்கள் பலவீனமாக உள்ள பிரிவுகளில் வரும் கேள்விகளுக்கு தொடர்ந்து பயிற்சியெடுக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஆகும் நேரத்தை டைமரில் அமைத்து தெரிந்துகொள்ளுங்கள், இதனால் தேர்வு நேரத்தில் உங்கள் முன்பு டைமர் இருந்தால் நீங்கள் சௌகரியமாக உணருவீர்கள்.” என்றார்.
தேர்வு நெருங்கும்போது புதிய தலைப்புகளில் பயிற்சியெடுக்காமல், தாங்கள் எதில் வலுவாக இருக்கிறோமோ அதில் பயிற்சியெடுக்க வேண்டும் என அவர் கூறுகிறார். நீண்ட கட்டுரைகளை வாசிக்க வேண்டும் எனவும் அது வாய்மொழி திறன் பிரிவுக்கு அதிகம் உதவும் என்றும் ஜத்தீன் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
தனியாக இதற்கென பயிற்சி வகுப்புக்கு செல்லாதவர்கள் என்ன செய்யலாம்?
2017 முதல் 2024ம் ஆண்டு வரையிலான சிஏடி தேர்வு வினாத்தாள்கள் பொதுவெளியில் உள்ளன. அவை சிஏடி தேர்வுக்கு தயாராவதற்கு உதவும் இணையதளங்களில் இலவசமாக கிடைக்கின்றன, இதற்கு பொதுவாக பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
சந்தீப் அகர்வால் கூறுகையில், “இந்த தேர்வு உத்தி அடிப்படையிலான தேர்வு. இதே உத்திதான் மாதிரி தேர்வுகளிலும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. மாதிரி தேர்வுகளில் கையாளும் உத்தி, தேர்வில் பயன்படுமா, இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.” என்றார்.
“மாணவர்கள் 15 மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்க்க வேண்டும். அதில் செய்யும் தவறுகளை திருத்துவதற்கான உத்தியை வகுக்க வேண்டும்.”
என்னென்ன தவறுகளை தவிர்க்க வேண்டும்?
தன்னிடம் அடிக்கடி மாணவர்கள் கேள்வித்தாள் எளிதாக இருந்தது என்றும், ஆனால் பதற்றம் காரணமாக கவனக்குறைவால் தவறுகளை செய்ததாக கூறுவார்கள் என்கிறார் ஜெய் சிங் சஜ்வான்.
இதனால் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மதிப்பெண் எடுக்கக்கூடிய சாத்தியம் கொண்ட மாணவர்கள் 60-65% மதிப்பெண்களையே எடுக்கின்றனர் என்கிறார் அவர்.
” முதலில், ஒரே கேள்விக்கு விடையை கண்டுபிடிப்பதிலேயே நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது. உங்களுக்கு தெரிந்த கேல்விகளுக்கு பதிலளித்துவிட வேண்டும். இரண்டாவதாக, கேள்விகளை கவனமாக படிக்க வேண்டும். பல மாணவர்களுக்கு நல்ல அறிவு உள்ளது, ஆனால் அவர்கள் சரியாக கேள்விகளை படிப்பதில்லை. இதனால், அவர்கள் தவறான பதிலளித்து மைனஸ் மதிப்பெண்களை பெற்றுவிடுகின்றனர். உதாரணமாக 24 கேள்விகளுள் 18 எளிய கேள்விகளுக்கு நான் பதிலளித்துவிட்டால், அதன்பின் மீதம் உள்ள ஆறு கேள்விகளுக்கு பதிலளிப்பது எளிது. ஆனால், ஒரே கேள்விக்கு 10 நிமிடங்கள் எடுத்துக்கொண்டால், அதனால் பதற்றம் ஏற்படத் தொடங்கும். இது மேலாண்மை தொடர்பான துறைக்கான தேர்வு. நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாளையே சரியாக மேலாண்மை செய்யாவிட்டால், எப்படி நிறுவனங்களை மேலாண்மை செய்ய முடியும்?” என்கிறார் ஜெய் சிங் சஜ்வான்
பட மூலாதாரம், Getty Images
வேறு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?
இந்தியாவில் உள்ள ஐஐஎம் நிறுவனங்களை தவிர்த்து 100 சிறந்த வணிக பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் 80-85 கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கை சிஏடி தேர்வு மூலம் நடைபெறுகிறது.
கிரேட் பி நிலையில் உள்ள கல்லூரிகளில் சேர வேண்டும் என்றாலும் சிஏடி மதிப்பெண் தேவை. இரண்டாம் நிலை கல்லூரிகளுக்கு ஆள்சேர்ப்புக்காக வரும் நிறுவனங்கள் திறன்சார் தேர்வுகளை நடத்துகின்றன. அப்போது சிஏடி தேர்வு உங்களுக்கு உதவும்.
இந்தியாவில் மொத்தமாக 21 ஐஐஎம் நிறுவனங்கள் உள்ளன. அதில், ஆமதாபாத், பெங்களூரு, கொல்கத்தாவில் உள்ள ஐஐஎம் நிறுவனங்கள் சிறந்தவையாக உள்ளன.
ஐஐடி நிறுவனங்கள், எஃப்எம்எஸ், எம்டிஐ மற்றும் ஐஎம்டி போன்று நிர்வாகம் சார்ந்த படிப்புகளை வழங்கும் முக்கிய நிறுவனங்களில் சேருவதற்கும் சிஏடி தேர்வு அவசியமாகும். சிஏடி தேர்வில் சிறந்த மதிப்பெண்களை எடுக்காதவர்களுக்கு இந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு வேறு வாய்ப்புகள் இல்லை.
ஜெய் சிங் சஜ்வான் கூறுகையில், “XAT எனப்படும் சேவியர் திறன் தேர்வின் அடிப்படையில் சுமார் 30 கல்லூரிகளில் சேர்க்கைகள் நடைபெறுகின்றன. சேவியர் மேலாண்மை பள்ளி (XLRI) இந்த மதிப்பெண்களை மட்டுமே கருத்தில்கொள்கிறது. உதாரணமாக, சிம்பயாசிஸ் கல்வி நிறுவனத்திற்கு SNAP தேர்வு உள்ளது. MAT, NMAT, MICAT ஆகிய தேர்வுகள் உள்ளன. சிஏடி தேர்வுக்கு பின்னர் இந்த தேர்வுகளை எழுதலாம், சிறந்த வணிக பள்ளிகளில் சேருவதற்கான வழியை இந்த தேர்வுகளும் திறந்துவிடும்.” என்றார்.
சர்வதேச பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க விரும்புபவர்களுக்கு GMAT (Graduate Management Admission Test) தேர்வு சிறந்ததாக உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா ஆகியவற்றில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் GMAT மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு