படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இலவசமாக அல்லது தள்ளுபடி விலையில் சேவைகளை வழங்குகின்றன.கட்டுரை தகவல்
சாட்ஜிபிடி (ChatGPT)-யின் புதிய மலிவு விலை “கோ” ஏஐ சாட்பாட் (Go AI Chatbot) கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த வாரம் முதல் ஓராண்டுக்கு இலவசமாக கிடைக்கப் போகிறது.
சமீப வாரங்களில் கூகுள் மற்றும் பெர்ப்ளெக்சிட்டி ஏஐ (Perplexity AI) ஆகியவற்றின் இதேபோன்ற அறிவிப்புகளைத் தொடர்ந்து சாட்ஜிபிடி-யின் அறிவிப்பு வந்திருக்கிறது. இந்நிறுவனங்கள் இந்தியாவின் உள்ளூர் மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து, பயனர்களுக்கு தங்களின் ஏஐ கருவிகளை ஒரு வருடமோ அல்லது அதற்கும் மேலாகவோ இலவசமாகப் பயன்படுத்தும் வசதியை வழங்கியுள்ளன.
பெர்ப்ளெக்சிட்டி நிறுவனம், நாட்டின் இரண்டாவது பெரிய மொபைல் நெட்வொர்க்கான ஏர்டெல்லுடன் இணைந்து சேவை வழங்குகிறது. அதேசமயம், கூகுள் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து, மாதாந்திர டேட்டா பேக்குகளுடன் இலவசமாகவோ தள்ளுபடி விலையிலோ ஏஐ கருவிகளை வழங்குகிறது.
இவையெல்லாம் இந்தியாவின் நீண்ட கால டிஜிட்டல் எதிர்காலத்தைக் கணக்கிட்டு செய்யப்படும் முதலீடுகள் என்று சொல்லும் ஆய்வாளர்கள், இதைப் பெருந்தன்மை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார்கள்.
“இந்தியர்களை ஜெனரேடிவ் ஏஐ (generative AI) பயன்பாட்டிற்கு பழக்கப்படுத்திவிட்டு, அதன்பிறகு அதற்கு பணம் செலுத்தச் சொல்வதுதான் திட்டம்” என்று கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச்சில் ஆய்வாளராக இருக்கும் தருண் பதக் பிபிசியிடம் தெரிவித்தார்.
“பெரிய சந்தையையும் இளம் பயனர்களையும் இந்தியா வழங்குகிறது,” என்று பதக் கூறுகிறார். சீனா போன்ற பிற பெரிய சந்தைகள் பயனர்களின் எண்ணிக்கையில் இந்தியாவுடன் போட்டியிடக்கூடும் என்றாலும், அங்குள்ள கட்டுப்படுத்தப்பட்ட சூழல் வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கு செல்வதைக் கட்டுப்படுத்துகிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மாறாக, இந்தியா திறந்த, போட்டி நிறைந்த டிஜிட்டல் சந்தையைக் கொண்டுள்ளது. இதனால் உலக தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஏஐ மாதிரிகளை பயிற்றுவிப்பதற்காக இங்கு கோடிக்கணக்கான புதிய பயனர்களை சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இதுபற்றி பிபிசி அணுகியபோது ஓப்பன்ஏஐ, பெர்ப்ளெக்சிட்டி மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள் பேசவில்லை.
இந்தியாவில் 90 கோடிக்கும் அதிகமான இணையப் பயனர்கள் உள்ளனர். உலகில் மிகக் குறைந்த விலையில் டேட்டா சேவைகளை வழங்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அதன் ஆன்லைன் மக்கள்தொகை பெரும்பாலும் இளம் தலைமுறையினர் ஆவர். பெரும்பாலான இணையப் பயனர்கள் 24 வயதிற்கும் குறைவானவர்கள். இத்தலைமுறை ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே வாழ்கிறது, வேலை செய்கிறது, சமூக உறவுகளையும் பராமரிக்கிறது.
இந்தியாவின் டேட்டா பயன்பாடு பல உலக நாடுகளையும் மிஞ்சியிருப்பதால், இந்த ஏஐ கருவிகளை டேட்டா பேக்குகளுடன் இணைப்பது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது. அதிகமான இந்தியர்கள் இந்த தளங்களைப் பயன்படுத்தும் போது, நேரடி தரவுகளை அதிக அளவில் பெறும் வாய்ப்பு அந்நிறுவனங்களுக்கு கிடைக்கிறது.
“இந்தியா என்பது பலதரப்பட்ட மனிதர்களைக் கொண்ட நாடு. இங்கு ஏஐ பயன்படுத்தப்படுவது உலகின் மற்ற நாடுகளுக்கு ஒரு ஆய்வாக அமையும். எந்த அளவுக்கு அவர்கள் தனித்துவமான நேரடி தரவுகளைப் பெறுகிறார்களோ அந்த அளவுக்கு அவர்களுடைய ஏஐ மாதிரிகள் சிறப்பாக இருக்கும்” என்று திரு.பதக் கூறுகிறார்.
ஏஐ நிறுவனங்களுக்கு இது இருதரப்பிற்கும் நன்மை பயக்கும் (win-win) ஒன்றாக இருந்தாலும், தரவு தனியுரிமை (data privacy) தொடர்பான விளைவுகள் உள்ளிட்ட சில கேள்விகளை இது நுகர்வோர் மத்தியில் எழுப்புகிறது.
“பெரும்பாலான பயனர்கள் ஏதாவது இலவசமாக கிடைப்பதற்காகவோ அல்லது எளிமைக்காகவோ தங்களின் தரவுகளை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். இது தொடரும் பழக்கமாகவே இருக்கும்,” என்று டெல்லியைச் சேர்ந்த தொழில்நுட்ப எழுத்தாளரும் ஆய்வாளருமான பிரசாந்தோ கே.ராய் கூறுகிறார்.
இந்த இடத்தில் தான் அரசு தலையிட வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
“மக்கள் தங்களின் தரவுகளை இவ்வளவு எளிதாக பகிரும் பிரச்னையை எவ்வாறு கையாள்வது என்பதை அதிகாரிகள் கண்டடைய வேண்டியுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்” என்று ராய் கூறுகிறார்.
பட மூலாதாரம், NurPhoto via Getty Images
படக்குறிப்பு, இந்தியாவில் 90 கோடிக்கும் அதிகமான இணையப் பயனர்கள் உள்ளனர்
இந்தச் சட்டம் தனிப்பட்ட தரவுக்கான பாதுகாப்புகளை வழங்கினாலும், அதன் அமல்படுத்தல் விதிகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்று சொல்லும் வல்லுநர்கள், இது ஏஐ அமைப்புகள் அல்லது அல்காரிதம் பொறுப்புத்தன்மை (algorithmic accountability) குறித்த பிரச்னைகளை இதுவரை அணுகவில்லை என்கிறார்கள்.
இந்த விதி அமலுக்கு வந்தால், “டிஜிட்டல் தனியுரிமை பார்வையில் இது பெரும் முன்னேற்றம் கண்ட சட்டமாக இருக்கும்” என்று எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைத் தலைவர் மகேஷ் மகிஜா பிபிசிக்கு தெரிவித்தார்.
ஆனால் தற்போதைக்கு, இந்தியாவின் வளைந்து கொடுக்கும் ஒழுங்குமுறை சூழல், ஓபன்ஏஐ, கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு திட்டங்களுடன் இலவச ஏஐ கருவிகளை இணைத்து வழங்கும் அனுமதியை அளிக்கிறது. இதை பிற நாடுகளில் செய்வது கடினமான ஒன்றாகும்.
உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏஐ விதிகள் வெளிப்படைத்தன்மை மற்றும் தரவு மேலாண்மைக்காக கடுமையான தரநிலைகளை நிர்ணயிக்கின்றன. அதேசமயம், தென் கொரியாவில் வரவிருக்கும் ஒழுங்குமுறை விதிகள் இன்னும் ஒரு படி மேலே சென்று, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படைப்புகளில் அதனை குறிக்கும் லேபிள்களைச் சேர்க்க வேண்டும் என்றும், தங்களின் அமைப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றிய பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கின்றன.
இந்தப் பகுதிகளில், இத்தகைய சலுகைகள் பயனர் சம்மதம் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான இணக்க தேவைகள் (compliance) விதிகளை தூண்டியிருக்கும்; இதனால் அவற்றை பெரிய அளவில் செயல்படுத்துவது கடினமாகியிருக்கும்.
இந்தியாவில் பயனர்களின் விழிப்புணர்வும் தெளிவான ஒழுங்குமுறைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லும் ராய், அதேசமயம் புதுமைகளை (innovation) ஒடுக்காமல் இருப்பதும் முக்கியம்என்கிறார்.
“இப்போது நமக்குத் தேவை எளிமையான ஒழுங்குமுறை. ஆனால், ஏற்படக்கூடிய பாதிப்புகளின் அளவு தெளிவாகும் போது, அதற்கேற்ப அது மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
அதுவரை, உலகளாவிய ஏஐ நிறுவனங்கள், இத்தகைய இலவச சலுகைகள் மூலம் மிகக் குறைந்த விலையிலான இன்டர்நெட் டேட்டாவால், முன்பைப் போல கோடிக்கணக்கான புதிய பயனர்களை சேர்க்க முடியும் என்று நம்புகின்றன.
ஏஐ கட்டண மாதிரியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, குறைந்த செலவு பிடிக்கக் கூடிய ‘மதிப்பு சார்ந்த சேவை’யாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அதிகப்படியான மக்கள் தொகையை கருத்தில் கொள்கையில், இது அந்நிறுவனங்களுக்கு வலுவான வாய்ப்புகளை உருவாக்குகிறது. “உதாரணமாக, இலவச பயனர்களில் 5% பேர் சந்தாதாரர்களாக மாறினாலும் அதுவொரு பெரிய எண்ணிக்கைதானே” என்கிறார் பதக்.