வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 21) செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா, “வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவாகுமா என்பது நாளை (அக்டோபர் 22) தெரியும். அக்டோபர் 21 மற்றும் 22, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” என கூறியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.
தமிழகத்தின் அணைகளைப் பொறுத்தவரை, வைகை அணையின் முழு கொள்ளளவு 71 அடியாகும். இன்று அணையின் நீர் மட்டம் 61.88 அடியை எட்டியுள்ளது.
மணிமுத்தாறு அணையின் முழு கொள்ளளவு 118 அடியாக இருக்கும் நிலையில், தற்போது அணையில் 91.88 அடி வரை நீர் நிரம்பியுள்ளது.
பேச்சிப்பாறை அணையில் அதிகபட்ச நீர் மட்டம் 48 அடியாக இருக்கும் நிலையில், இன்றைய நிலவரப்படி 39.96 அடி வரை அணையில் நீர் நிரம்பியுள்ளது.
சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவு 119 அடியாகும். வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில், 113.5 அடி வரை அணையில் நீர் நிரம்பியுள்ளது.
கனமழை பெய்து வருவதன் காரணமாக கிருஷ்ணகிரி அணையிலும் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. அந்த அணையின் முழு கொள்ளளவு 52 அடியாகும். இதில் 49.95 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
பரம்பிக்குளம் அணையின் முழு கொள்ளளவு 72 அடியாக இருக்கும் நிலையில், தற்போது அணையின் நீர் மட்டம் 71.2 அடியாக உள்ளது.
அதே போன்று ஆழியாறு அணையிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. அதன் முழு கொள்ளளவு 120 அடியாகும். தற்போது அணையின் நீர் மட்டம் 118.8 அடியாக உள்ளது.
தங்கச்சிமடத்தில் 17 செ.மீ மழை பதிவு
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அதீத கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 17 செ.மீ மழையும், மண்டபத்தில் 14.3 செ.மீ மழையும், பாம்பனில் 11.3 செ.மீ மழையும், ராமேஸ்வரத்தில் 9.5 செ.மீ மழை பதிவாகியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 62 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மற்றும் உச்சிப்புளியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதுடன், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர்ந்து இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மண்டபம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
கலைஞர் நகர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் உத்தரவின் பேரில் இரண்டு மின் மோட்டார்கள் வைக்கப்பட்டு சூழ்ந்துள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலரை மண்டபம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் முகாம் அமைத்து தங்க வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தொடர் விடுமுறை மற்றும் அமாவாசை நாளையொட்டி ராமேஸ்வரம் வந்திருந்த பக்தர்கள் கொட்டும் மழையில் கடற்கரையில் புனித நீராடினர்.
பாம்பன் மற்றும் மண்டபம் தென் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இன்று மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 400க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு
“மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தென்காசி மாவட்டத்தில் அக்டோபர் மாத இயல்பான மழை அளவு 16.60 செ.மீ. ஆகும். ஆனால் அக்டோபர் மாதத்தில் இதுவரை 23.75 செ.மீ. மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் மழையால் 14 குடிசைகள், 6 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. அதற்கான நிவாரண தொகை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 543 குளங்கள், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 414 குளங்கள் உள்ளன. இவற்றில் 25 சதவீத குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.” என்று கூறினார்.
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு 24, 25-ஆம் தேதிகளில் வருகை தருவதாக இருந்த நிலையில், தொடர் மழையால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் முதல்வர் வருகை நிகழ்ச்சி தள்ளிப்போகிறது. மழை நின்றதும் முதல்வர் வருகை தேதி அறிவிக்கப்படும்” என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் 252.31 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் இரண்டாவது நாளாக வராக நதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கூடலூர் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெற்று வருகின்றது.
தற்போது முதல் போக சாகுபடி செய்து நெற் கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருவதால் வயல்வெளிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அளவுக்கு அதிகமான தண்ணீர் வயல் பகுதியில் தேங்கி நிற்பதால் நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மிக கனமழையால் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மேலும் அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாத காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க 11-வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்து சீராகும் வரையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறை அறிவித்துள்ளனர்.
வைகை அணையிலிருந்து 1000 கன அடி நீர் திறப்பு
மேற்குத் தொடர்ச்சி மலை உட்பட தேனி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை கடந்துள்ளது.
அணை வேகமாக நிரம்பி விரைவில் முழு கொள்ளளவையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் முதற்கட்டமாக வைகை அணையிலிருந்து ஆற்றில் சுமார் 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி வழியாக செல்லும் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமையிலான வருவாய் மற்றும் பேரிடர் மீட்புப்பணிகள் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை ஆற்றின் கரையோரம் உள்ள கன்னாபட்டி, சித்தர்கள்நத்தம், அணைப்பட்டி, விளாம்பட்டி, நடகோட்டை உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது, குழந்தைகள் கால்நடைகளை கண்காணிக்க வேண்டும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
தாழ்வான பகுதிகளை நிலக்கோட்டை வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் அடங்கிய குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல் : காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
பட மூலாதாரம், Getty Images
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி கரையோர பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் காவிரி கரையோர பகுதிகளான அஞ்செட்டி , நாட்ரபாளையம், பிலிகுண்டுலு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முதல் அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. எனவே, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தூத்துக்குடியில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் சூழ்நிலையில் மழைகாலத்தை கையாளுவது குறித்து துறை ரீதியான அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜூவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
“மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை ஊழியர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் மற்றும் ஜேசிபி வாகனம், மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்று கூறினர்.
மேலும், “வருவாய்த்துறை அதிகாரிகள் குளத்தின் நீர்மட்டத்தை ஆய்வு செய்யவும் உடைந்து விடாதபடி பாதுகாத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சியில் 38 பம்ப் அறைகள் உள்ளது. 58 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது.
அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கனமழை வந்தாலும் மிக கனமழை வந்தாலும். நிலமைமையை தயாரிக்க சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம். மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு குழு 70 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினர்.
தடுப்பணை நிரம்பி பாலாற்றில் வெளியேறும் உபரி நீர்
கடந்த சில தினங்களாக கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோலார் மாவட்டம் பேத்தமங்கலம் பகுதியில் பாலாற்றின் அருகே உள்ள ஏரி நிரம்பி அதன் உபரி நீர் பாலாற்றில் வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன. பெரும்பள்ளம் என்ற இடத்தில் உள்ள 22 அடி உயரம் கொண்ட தடுப்பணையும் நிரம்பி அதன் உபரி நீர் தமிழகத்துக்குள் பாயும் பாலாற்றில் வெளியேறி வருகிறது.
தமிழக பகுதியில் பாலாற்றில் நீர் வருவதை பகுதி மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்றனர்.
மேலும் தமிழகத்தில் ஓடும் பாலாறு புல்லூர், திம்மம்ப்பேட்டை, ஆவாரங்குப்பம், இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக சுமார் 222 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியாக வங்கக் கடலில் கலக்கின்றது.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் யாரும் இறங்குவோ, குளிக்கவோ கூடாது, மேலும் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் அதிக அளவு மழை பெய்தால் பாலாற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகையால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருவாரூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசம்
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளன.
மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்ட குருவை நெற்கதிர்கள் வயல்களில் மழையால் சாய்ந்து கிடக்கின்றன.
பல்வேறு இடங்களில் சம்பா தாளடி நடவு நடுவதற்காக விவசாயிகள் நாற்று விட்டு வைத்திருந்தார்கள். அந்த நாற்றுகளும் தற்போது மழையில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குருவை அறுவடை செய்த விவசாயிகள் வயல்களில் மாடுகளுக்காக சுற்றி வைத்திருந்த வைக்கோல் கட்டுகள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகின.
இதனால் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் மாடுகளுக்கும் கால்நடைகளுக்கும் முக்கிய உணவாக இருக்கக்கூடிய வைக்கோல் தட்டுப்பாடு நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
கனமழையொட்டி கடலூர் மாவட்டத்தில் நாளை 22.10.25 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,”’ கடலூர் மாவட்டத்தில் 239 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. மழை, வெள்ளக் காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து துறைகளையும் உள்ளடக்கி 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மழைக் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக பல்நோக்கு தங்குமிடங்களில் (MPES) பாதுகாப்பு மையம் 14, புயல் பாதுகாப்பு மையம் 28 (Cyclone Shelter) தற்காலிக பாதுகாப்பு மையங்கள் 191 ஆக 233 பாதுகாப்பு மையங்கள் தயார்நிலையில் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
புதுவையிலும் மழை
வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனால் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையான நேற்று முழுவதும் விட்டு விட்டு லேசான மழை பெய்தது. இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை, உப்பளம், உருளையன்பேட்டை, ராஜ்பவன், முத்தியால்பேட்டை உள்ளிட்ட அனைத்து நகர பகுதிகளிலும் அதேபோல் மதகடிப்பட்டு, பாகூர், காலாப்பட்டு, வில்லியனூர் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் இன்று அதிகாலை காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக புதுச்சேரியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் தீபாவளி மறுநாள் இன்று அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளதால் மழையினால் பெரியளவில் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு இல்லை.
கூடுதல் தகவல்கள்- பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு