பட மூலாதாரம், Anshul Jain
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த மருந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டது என்றும், அந்த மருந்தில் ஆபத்தான டைஎத்திலின் கிளைக்கால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசுக்கு மத்திய பிரதேச அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்த நிறுவனம் தயாரிக்கும் இருமல் மருந்தை குழந்தைகள் மட்டுமின்றி எந்த வயதினரும் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
டை எத்திலின் கிளைக்கால் குழந்தைகளின் உயிருக்கு எவ்வாறு ஆபத்தானதாக மாறுகிறது? குழந்தைகளுக்கு இருமல் மருந்து வாங்கும் போது செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?
மத்திய பிரதேசத்தில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், ANI
மத்திய பிரதேசம் மாநிலம் சந்த்வாரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை (அக். 3) இருமல் மருந்து குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பால் 11 குழந்தைகள் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், அரசு மருத்துவமனை மருத்துவர் பிரவீன் சோனி மற்றும் ஸ்ரீசன் என்ற இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
எஃப்ஐஆர் படி, “கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 5 வயதுக்கு உட்பட்ட பல குழந்தைகள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் தொந்தரவால் பாராசியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர். . அவர்களில் பலருக்கும் மருத்துவர் சோனி இருமல் மருந்து உள்ளிட்ட மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். சில நாட்கள் கழித்து குழந்தைகளுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்னை, முக வீக்கம் மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. ஆய்வில் அவர்களுக்கு சிறுநீரகம் செயலிழந்தது தெரியவந்தது”
“தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த அந்த இருமல் மருந்தில் ஆபத்தான டைஎத்திலின் கிளைக்கால் இருந்தது தெரியவந்தது. இந்த மருந்து குழந்தைகளுக்கு ஆபத்தாகக் கூடும் என்று தெரிந்த போதிலும் கூட விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு, சிறு குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது” என்று அந்த எஃப்ஐஆர் மேலும் கூறுகிறது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை மத்திய பிரதேச அரசு தடை செய்துள்ளது. அந்த சிரப் மட்டுமின்றி, அந்த நிறுவனத்தின் பிற தயாரிப்புகளும் தடை செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். அத்துடன், இது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி அக்டோபர் ஒன்றாம் தேதி தமிழக அரசுக்கு அம்மாநில அரசு கடிதமும் எழுதியுள்ளது.
இதற்குப் பிறகு, ஸ்ரீசான் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பில் “கலப்படம்” இருந்ததாக தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை உறுதிப்படுத்தியது.
தமிழக அரசு கூறுவது என்ன?
பட மூலாதாரம், Ma Subramanian
இதுதொடர்பாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (அக்.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “இந்த விவகாரத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். விசாரணையின் முடிவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
“தமிழ்நாட்டில் இதுவரை இதுபோன்ற புகார் வரவில்லை. எனினும் முன்னெச்சரிக்கையாக கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு மட்டுமின்றி எந்த வயதினரும் பயன்படுத்த வேண்டாம்” என்று அவர் கூறினார்.
குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கலாமா?
பட மூலாதாரம், Getty Images
சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு Over the counter மருந்துகளை (அதாவது மருந்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் வாங்கப்படும் மருந்துகள்) பரிந்துரைக்க வேண்டாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது.
ஏனெனில் இது தீவிரமான மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகளுக்கு மருந்துவர்களின் பரிந்துரைகளின்றி சளி மற்றும் இருமல் மருந்துகள் வாங்குவது ஆபத்து எனவும் எஃப்டிஏ (FDA) எச்சரித்துள்ளது. இதற்கான காரணங்களையும் அது பட்டியலிட்டுள்ளது.
- அந்த மருந்தில் குழந்தைகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கலாம் அல்லது இந்த மருந்தை அடிக்கடி எடுத்துக்கொள்வதாலும் பாதிப்பு ஏற்படலாம்.
- அவர்கள் ஒரே மருந்தை உடைய 2 பொருட்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். உதாரணமாக அசிடமினோபன் கொண்ட வலி நிவாரணியை பயன்படுத்தும் அதே வேளையில் அதே அசிடமினோபன் கொண்ட சளி மருந்தையும் எடுத்துக் கொள்வது ஒரு காரணம்.
இதுகுறித்து தெளிவான தகவலை பெற சென்னை அப்போலோ மருத்துவமனையின் யூராலஜிஸ்ட் (சிறுநீரக மருத்துவர்) சந்தீப் பாஃப்னாவை தொடர்புகொண்டோம். நமது சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்.
“பெரும்பாலும் குழந்தைகளுக்கு தானாகவே இருமல், சளி சரியாகிவிடும். அதேசமயம் 5 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சரியான அளவில், முறையாக மருத்துவர்களின் பரிந்துரையுடன் மருந்தை உட்கொள்வது சிறந்தது” என மருத்துவர் சந்தீப் பாஃப்னா கூறினார்.
அதேபோல சரியான அளவில் மருந்தை உட்கொள்வதும் அவசியம். இதை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி,
- மருந்தை உட்கொள்வதற்கும், அதை அளப்பதற்கும் மூடி போன்றவற்றை மருந்துடன் சேர்த்து விநியோகிக்க உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- மருந்தை அளவீடு செய்ய வீட்டில் உள்ள கரண்டிகள் அல்லது பிற மருந்துகளில் இருந்து வரும் கருவிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- பெரியவர்களுக்காக தயாரிக்கப்பட்ட மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். ஏனெனில் இதன் அளவுகோல் மாறுபடும்.
சிறுநீரக பாதிப்பு ஏன்?
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்டதால் உயிரிழந்த குழந்தைகளுக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து மருத்துவர் சந்தீப் பாஃப்னாவிடம் கேட்டபோது, “மருந்து தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் டைஎத்திலின் கிளைகால் (diethylene glycol), எத்திலின் கிளைகால் (ethylene glycol) போன்றவற்றின் மூலக்கூறுகள் நம் உடலில் உள்ள சிறுநீரகக் குழாயை (renal tubule) பாதிக்கும்.” என்றார்.
மேலும் இதுபற்றி விரிவாக விளக்கும்போது, “சிறுநீரகக் குழாய் (Renal tubule) என்பது தேநீர் வடிகட்டியைப் போல, இது சிறுநீரகத்தின் வடிகட்டியாகும். டைஎத்திலின் கிளைகால் (diethylene glycol), எத்திலின் கிளைகால் (ethylene glycol) மூலக்கூறுகளால் சிறுநீரகத்தின் சுத்திகரிப்பு தன்மை பாதிக்கப்படும். இதனால்தான் சிறுநீரக கோளாறு, கல்லீரல் பிரச்னை, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன” எனக் கூறினார்.
சளி, இருமலை போக்க என்ன செய்யலாம்?
பட மூலாதாரம், Getty Images
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சளி, இருமலை குணப்படுத்துவதற்கான சில வழிகளை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
- Cool mist humidifier அதாவது அறையை ஈரப்பதமாக்கும் ஒரு வித கருவி. இதை பயன்படுத்துவதன் மூலம் மூக்கடைப்பை போக்கலாம்.
- Saline nose drops or sprays: மூக்கு வழியாக செலுத்தக்கூடிய மருந்துகளைப் பயன்படுத்தலாம். இது மூக்கடைப்பை தவிர்க்க உதவும்.
- மூக்கு வழியாக செலுத்தக்கூடிய Bulb syringe-ஐ பயன்படுத்தலாம். இது 1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நல்ல பலனளிக்கும்.
- அசிடமினோபன் அல்லது இப்யூபுரூஃபன் மருந்துகளையும் பயன்படுத்தலாம். இது காய்ச்சல் மற்றும் வலிகளை குறைக்கும். ஆனால் இதை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன் அட்டையை கவனமாக படிக்க வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரையும் அவசியம்.
- முடிந்தளவிற்கு குழந்தைகள் அதிக நீர் ஆகாரங்களை உட்கொண்டு நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இருமல் மருந்து வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
மருத்துவர் சந்தீப் கூறுகையில், “ஒருவரின் வயது, உடல் எடையைப் பொறுத்து இருமல் மருந்தின் அளவு மாறுபடும். பெரியவர்களுக்கு (adult) பரிந்துரைக்கும் மருந்து அளவை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. ஏனென்றால் பெரியவர்களின் சிறுநீரகம் முதிர்ச்சி அடைந்திருக்கும். அதேசமயம் குழந்தைகளுக்கு சிறுநீரகம் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருக்காது. இதனால் இது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
இருமல் மருந்து வாங்கும்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதையும் அவர் விளக்கினார்.
செய்யக்கூடாதவை:
- முதலில் வைரஸ் காய்ச்சல் ஏற்படும்போது இருமல் மருந்து கொடுக்கக் கூடாது.
- மற்றொன்று எல்லா இருமல்களும் ஒன்றல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வறட்டு இருமல், ஈரப்பத இருமல் (Wet Cough), ஆஸ்துமா என பல காரணங்கள் உள்ளன. இதற்கான மருந்துகளை எடுக்க வேண்டும்.
- மருத்துவர்களின் பரிந்துரையின்றி சுயமாக மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.
செய்ய வேண்டியவை:
- மருந்துவர்களின் பரிந்துரை அவசியம்
- சரியான அளவில் மருந்துகளை உட்கொள்வது அவசியம்
- சரியான மருந்து கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை வாங்க வேண்டும்
- மருந்தின் பின்பக்கம் உள்ள லேபிளில் என்னென்ன மருந்துகள் இருக்கிறது, அவை எந்தெந்த அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்க்க வேண்டும்.
- சில சமயங்களில் பெரியவர்களுக்கான மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்துவிடக்கூடும். இதில் 1 மில்லி லிட்டரிலும் கூட அதிகப்படியான மருந்து டோஸ் இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
- தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதியைப் பார்க்க வேண்டும்
- மருந்தை தயாரித்த நிறுவனத்தின் பெயரை பார்க்க வேண்டும்
எப்போது மருத்துவரை அணுகலாம்?
குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சில அறிகுறிகளை வெளியிட்டுள்ளது. அதில்,
- 2 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைக்கு 100.4 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல்
- வேறு எந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கும் 102 டிகிரி பாரன்ஹீட் காய்ச்சல் இருந்தால்
- மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத்திணறல், வேகமாக சுவாசித்தல்,
- அதீத தலைவலி
- உணவு மற்றும் பானங்களை தவிர்த்தல் (இது சிறுநீர் வெளியேறுவதை குறைக்கும்)
- ஓயாத காது வலி
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு