காலநிலை மாற்றம் குறித்த உலகநாடுகளின் உச்சி மாநாடான COP29 இன்று (திங்கள், நவம்பர் 11) அஜர்பைஜானின் தலைநகரான பாகுவில் துவங்கியது.
அடுத்த இரண்டு வாரங்கள் நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் 200 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு அஜர்பைஜானில் நடைபெறும் இம்மாநாட்டின் முக்கிய நோக்கம், ஏழை நாடுகளில் புவி வெப்பமயமாதலை ஏற்படுத்தும் வாயுக்களை கட்டுப்படுத்த நிதியளிப்பது, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் விளைவுகளை எதிர்கொள்ள அந்த நாடுகள்க்கு எதிர்காலத் திட்டமிடல்களை உருவாக்குவது என்பனவாகும்.
ஆனால், காலநிலை மாற்றத்தில் நம்பிக்கையில்லாதவராக அறியப்படும் டொனால்ட் டிரம்பின் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி, போர்கள், வாழ்க்கைச் செலவு நெருக்கடிகள் ஆகியவை இதற்குத் தடையாக இருக்கின்றன. சில முக்கிய தலைவர்கள் கூட இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை.
மேலும், மாநாட்டை நடத்தும் அஜர்பைஜான், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளையும், மாநாட்டைப் பயன்படுத்தி எரிபொருள் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.
அமெரிக்கா என்ன சொன்னது?
ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனத் தலைவர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட பல முக்கிய உலகத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
மாநாட்டின் முதல் நாளான இன்று, பாகுவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்கக் காலநிலைத் தூதர் ஜான் பொடெஸ்டா, சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ‘மிகவும் ஏமாற்றமளிப்பதாகத்’ தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், காலநிலை மாற்றத்தை பொய்யானது என்று மறுத்துவரும் நிலையில், பொடெஸ்டா ‘காலநிலை மாற்றம் பொய்யல்ல, அது நிஜம்,’ என்று கூறியிருக்கிறார்.
ஜோ பைடன் காலநிலை மாற்றக் கொள்கை குறித்துச் செய்திருந்த முன்னேற்றங்களை டிரம்ப் ரத்து செய்யக்கூடும் என்று பொடெஸ்டா கூறினார்.
அதேபோல், உலகின் மிக அதிகமான கார்பன் உமிழ்வை ஏற்படுத்தும் சீனா, காலநிலை மாற்றக் கொள்கைகளைப் பின்பற்ற முன்வரவேண்டும் என்றார் பொடெஸ்டா.
COP29 என்றால் என்ன?
COP29 என்பது காலநிலை மாற்றம் குறித்த உலகின் மிக முக்கியமான உச்சி மாநாடு. இது ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் 29-வது மாநாடு நவம்பர் 11 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இம்மாநாடு மத்திய ஆசியாவில், ரஷ்யாவுக்கும் இரானுக்கும் இடையில் அமைந்துள்ள அஜர்பைஜான் நாட்டின் தலைநகரமான பாகுவில் நடைபெறுகிறது.
COP என்பது எதைக் குறிக்கிறது?
COP என்பதன் விரிவாக்கம் ‘கூட்டணி உச்சி மாநாடு’ (Conference of the Parties) ஆகும்.
இங்கு, கூட்டணி என்பது காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டு (UNFCCC – United Nations Framework Convention on Climate Change) ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளைக் குறிக்கிறது.
இந்த ஒப்பந்தம் 1992-ஆம் ஆண்டு, உலகளாவிய அளவில் 200 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. COP என்பது அந்த ஒப்பந்தத்தின் முடிவுகளைத் தீர்மானிக்கும் அமைப்பு. மேலும், இந்நாடுகளின் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தி, காலநிலை மாற்றத்தின் மூலக்காரணங்களைச் சமாளிக்கச் சிறந்த முறைகளைத் தீர்மானிக்கின்றனர்.
COP29-இல் யார் கலந்துகொள்கிறார்கள்?
பொதுவாக, உலக நாடுகளின் அதிபர்களும் பிரதமர்களும் இந்த உச்சி மாநாட்டின் துவக்க நாளில் பங்கேற்று ஊக்குவிப்பது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு, மிகப்பெரிய பொருளாதாரத் தலைமைகளும், அதிகளவில் கார்பனை உமிழும் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனத் தலைவர் ஷி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், ஜெர்மனி ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ் ஆகியோர் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை.
இதற்குப் பல காரணங்கள் உள்ளபோதிலும், இது உச்சி மாநாட்டிற்கு வலுவான துவக்கத்தை வழங்க உதவாது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக மத்திய கிழக்கு, யுக்ரேன் போன்ற இடங்களில் நடந்துகொண்டிருக்கும் இரண்டு பெரிய போர்களும், உலகளாவிய நிதிச் சிக்கல்களும் அதில் சில காரணங்களாகும்.
“எந்த ஒரு உலகத் தலைவருக்கும், ‘காலநிலை மாற்றம்’ என்பது முக்கியமான பிரச்னையில்லை,” என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தாமஸ் ஹேல் கூறுகிறார்.
மேலும், முக்கியமான உடன்படிக்கைகளை பாகுவில் உறுதிசெய்யத் தேவையான தூதரக அல்லது நிதி வல்லமை அஜர்பைஜானுக்கு இல்லை என்று அடிப்படையில் பொதுவான கருத்தும் நிலவுகிறது.
அடுத்த ஆண்டின் COP30, பிரேசிலில் நடைபெறவுள்ளதால் அதிக முன்னேற்றம் ஏற்படும் என பல தலைவர்களும் கருதுகின்றனர்.
COP29 இல் என்ன விவாதிக்கப்படும்?
இந்த ஆண்டின் முக்கியமான கேள்வி: நிதி.
2015-இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், உலகளாவிய வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக உலகத் தலைவர்கள் உறுதிபூண்டனர்.
இதைச் சாத்தியப்படுத்துவதற்கு, காற்றை வேகமாக மாசுபடுத்தும் வாயு வெளியீட்டைக் குறைக்க, உலக நாடுகள் தங்களது முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2025-க்குள் வளர்ந்து வரும் நாடுகளுக்கான புதிய நிதி இலக்கை அமைக்க நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிதி, வளர்ந்து வரும் நாடுகளின் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், அதிகரிக்கும் வெப்பநிலைத் தாக்கங்களால் ஏற்படும் மோசமான விளைவுகளைச் சமாளிக்கவும் பயன்படுத்தப்படும்.
புதிய நிதி இலக்கை நிர்ணயிப்பது, பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையே நம்பிக்கையை வளர்ப்பதில் ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது. இதுவரை, இது அவ்வளவுச் சிறப்பாகச் செயல்படுத்தப்படவில்லை.
ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சிறிய தீவு நாடுகள், 2030-க்குள் இந்தக் காலநிலை நிதி, 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. (இந்திய மதிப்பில் சுமார் 84 லட்சம் கோடி ரூபாய்)
இதுவரை, சீனா மற்றும் வளைகுடா நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளாக வகைப்படுத்தப்பட்டதால் நிதி வழங்குவதில் இருந்து விலகி இருந்தன. மொத்த நிதித் தொகையை அதிகரிக்க வேண்டுமென்றால், இது மாற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற பணக்கார நாடுகள் கருதுகின்றன.
சில நாடுகள் இம்மாநாட்டில் தங்கள் திட்டங்களை வெளியிடும். ஆனால் அத்திட்டங்கள் பலவீனமானதாகவும் 1.5°C-க்கு மேல் உலக வெப்பநிலை உயர்வதைத் தடுக்க முடியாததாகவும் தோன்றினால், அது காலநிலை மாற்றத் திட்டங்களில் முன்னிலை வகிக்கும் நாடுகளுடன் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
மேலும், கடந்த ஆண்டின் காலநிலை மாற்றம் குறித்தான பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்தமிடப்பட்ட எரிபொருள் ஒப்பந்தங்கள் இன்னும் நிலைத்து நிற்கின்றனவா? இந்த ஆண்டின் G20 பேச்சுவார்த்தையில் சில நாடுகள் எண்ணெய், கரி, மற்றும் எரிவாயு வெளியீடு தொடர்பான வாக்குறுதிகளைப் பிறகு திரும்பிப் பெற்றுக்கொள்ள விரும்பியதாக சில தகவல்கள் இருந்தன.
இதன் சிக்கலைக் கண்டறிய அதிகமாக ஆராயத் தேவையில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கொலம்பியாவில், இயற்கைப் பாதுகாப்பு குறித்து ஐக்கிய நாடுகளின் முக்கியமான பேச்சுவார்த்தை நடந்தது. அதில் பங்கேற்ற நாடுகள் தங்களது முக்கிய இலக்குகளை ஏற்றுக்கொள்ள முடியாதபோது அப்பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது.
அஜர்பைஜானில் COP29 நடத்துவதில் என்ன சர்ச்சை?
அஜர்பைஜான் அடுத்த 10 ஆண்டுகளில் தனது எரிவாயு உற்பத்தியை மூன்றில் ஒரு பங்கு வரை விரிவுபடுத்துவதற்கான பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளது.
இப்படியான இலக்கைக் கொண்ட நாடு, புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்ட உச்சி மாநாட்டை நடத்துவது பற்றிச் சில ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.
இந்த எரிபொருள்கள், எரியும் போது கார்பன் டையாக்ஸைடு போன்ற வெப்பநிலை அதிகரிக்கும் வாயுக்களை வெளியிடுவது காலநிலை மாற்றத்தின் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
மேலும், பிபிசி செய்திப்படி, அஜர்பைஜான் அதிகாரிகள் இந்த காலநிலை உச்சி மாநாட்டை, நாட்டின் தேசிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் முதலீடுகளை அதிகரிக்கப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
மனித உரிமைகள் குறைவாக உள்ள, அரசியல் எதிர்ப்பைச் சகித்துக்கொள்ளாத அஜர்பைஜானில் இந்த முக்கிய நிகழ்வை நடத்துவது பற்றி ஆழமான விவாதங்கள் எழுந்துள்ளன.
டொனால்ட் டிரம்பின் வெற்றி, COP29-ஐ எவ்வாறு பாதிக்கும்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறிருக்கும் டொனால் டிரம்ப், காலநிலை மாற்றத்தில் நம்பிக்கை இல்லாத ஒருவர் என்று அறியப்படுகிறார்.
பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் முயற்சியை ‘மோசடி’ என்கிறார் அவர். அவரது வெற்றியை, காலநிலை மாற்ற வல்லுநர்கள் ஒரு பெரும் பின்னடைவாகக் கருதுகிறார்கள்.
அவர் உண்மையில் COP29-இல் பங்கேற்க மாட்டார்.
தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் குழு காலநிலை மாற்றக் கொள்கைகளில் முன்னேற்றம் ஏற்பட உழைக்கும், ஆனால் அவர்கள் ஒப்புக் கொள்ளும் எதையும் புதிய அமெரிக்க அரசு செய்யாது என்பதை அவர்கள் அறிவார்கள்.
டிரம்ப் பதவியேற்றால், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்தும், நிதி வழங்குவதில் இருந்தும் அமெரிக்கா விலகும்.
அவ்வாறே, டிரம்பின் மறுதேர்தல் ஒரு புதிய ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தக்கூடும். மேலும் ஏழை நாடுகளுக்கு நிதி வழங்குவது தொடர்பான ஒரு முக்கிய முடிவை ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டணியை உருவாக்குவதும் சாத்தியமாகும்.
உலகக் காலநிலையில் இந்த ஆண்டு என்ன நடக்கிறது?
காலநிலை குறித்தான எச்சரிக்கை இந்த ஆண்டைப்போல எப்போதுமே இவ்வளவு வலுவாக இருந்ததில்லை.
ஐரோப்பிய காலநிலை சேவையின் கணிப்புகளின்படி குறிக்கப்பட்ட 2024-ஆம் வருடம், உலகின் மிகச் சூடான வருடமாக இருக்கும்.
மேலும், கடல்களின் வெப்பநிலைகள் தாக்கங்களை ஏற்படுத்தி வருவதைக் கண்டோம். அதில் மிகச் சக்தி வாய்ந்த ஹெலீன் மற்றும் மில்டன் புயல்கள் அமெரிக்காவை தாக்கியன. அக்டோபரில் ஸ்பெயினில் குறைந்தது 200 பேரைக் கொன்ற பேரழிவுகரமான வெள்ளம் மத்தியத் தரைக் கடல் பகுதியின் அதிகப்படியான கடல் வெப்பநிலையால் தூண்டப்பட்டது.
“காலநிலை மாற்றம் ஒரு ஒட்டுமொத்தப் பிரச்னை. அதாவது, தாமதிக்கும் ஒவ்வொரு ஆண்டும், உலக வெப்பநிலை உயரும். இது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம்,” என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் ஜோரி ரோகெல்ஜ் விளக்குகிறார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
சுருக்கமாக, நாடுகள் தங்களது பொருளாதாரத்தை எப்படி கட்டமைக்கின்றன, பசுமை ஆற்றலின் வளர்ச்சியை எப்படி முன்னெடுக்கின்றன போன்றவற்றை COP-இன் ஒப்பந்தங்கள் மாற்றலாம்.
இது நாம் பயன்படுத்தும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது, அதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்துகிறோம் என்பதையும் பாதிக்கக்கூடும்.
இது, ஏழை நாடுகளுக்கான நிதியைச் செலுத்தப் பிறநாடுகளைக் கட்டாயப்படுத்தக்கூடும். இங்கிலாந்தில், தற்போது வரி செலுத்துபவர்களிடம் இருந்து பெறப்படும் உதவித் தொகைகளிலிருந்து இந்த நிதி கிடைக்கிறது என்றாலும், தனியார் நிதி நிறுவனங்கள் முக்கியப் பங்களிப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட கால அடிப்படையில், அனைவருக்கும் பாதுகாப்பான, தூய்மையான உலகத்தை உருவாக்குவது மற்றும் மோசமான காலநிலை மாற்றத்தைத் தடுப்பது இந்த உச்சி மாநாட்டின் நோக்கமாகும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.