பட மூலாதாரம், Getty Images
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. 184 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்து 25 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பட மூலாதாரம், Getty Images
15 ஆண்டுகளுக்குப்பின் வெற்றி
சென்னையில் சிஎஸ்கே அணியை கடந்த 15 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் டெல்லி கேபிடல்ஸ் அணி தோற்கடித்துள்ளது. ஏற்கெனவே சிஎஸ்கே அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் ஆர்சிபி சென்னையில் சிதைத்துவிட்டு சென்ற நிலையில் டெல்லி கேபிடல்ஸும் சிஎஸ்கே அணியை வீழ்த்தியிருக்கிறது. ஆட்டநாயகனாக கேஎல் ராகுல் தேர்ந்தெடுக்கபட்டார்.
சிஎஸ்கே அணியை சரிவிலிருந்து ஆபத்பாந்தவனாக வந்து தோனி காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு தோனியின் பேட்டிங் மூலம் இன்று பதில் கிடைத்தது. 43 வயது, ஆசைப்படும் மனது, ஒத்துழைக்காத உடல் ஆகியவை தோனிக்கு ஓய்வு தேவை என்பதை உணர்த்துவதாக பேட்டிங்கில் தெரிந்தது.
அது மட்டுமல்லாமல் சேப்பாக்கம் ஆடுகளம் பழைய சேப்பாக்கம் இல்லை என்பது இதன் மூலம் தெரியவருகிறது. ஆட்டத்தின் போக்கை கணிப்பது கடினமாக இருக்கிறது, திறமையான பந்துவீச்சு, பேட்டிங் வைத்திருக்கும் அணியே ஆடுகளத்தை ஆள முடியும் என்பது தெளிவாகியுள்ளது.
தோனியின் ஆட்டத்தைக் காண அவரின் தாய், தந்தை இருவரும் மைதானத்துக்கு வந்திருந்தும் சிஎஸ்கே அணிக்கு பல கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்த தோனியால் இன்று வெற்றி பெற வைக்க முடியவில்லை.
பட மூலாதாரம், Getty Images
8வது இடத்தில் சிஎஸ்கே
இந்த வெற்றியின் மூலம் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகள் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் 2 புள்ளியுடன் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
சிஎஸ்கே மோசமான ஆட்டம்
சிஎஸ்கே அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்துமே மோசமாக இருந்தது. ரவீந்திரா, கான்வே, துபே, கெய்க்வாட் என பெரிய பேட்டிங் வரிசை இருந்தும் சேஸ் செய்ய முடியவில்லை. சிஎஸ்கே அணி 2019ம் ஆண்டிலிருந்து 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ததில்லை என்ற வரலாறு தொடர்கிறது, பயமும் தொடர்கிறது.
விஜய் சங்கர், ஜடேஜா நடுவரிசையில் இருந்தும் பெரிதாக ரன்ரேட்டை உயர்த்தமுடியவில்லை. பெரிய ஆல்ரவுண்டர் என நினைத்து விஜய் சங்கரை ஏலத்தில் எடுத்து சிஎஸ்கே கையை சுட்டுக்கொண்டுள்ளது. வின்டேஜ் தோனியின்ஆட்டம் இருக்கும் என நினைத்து வந்த ரசிகர்களுக்கு இன்று ஏமாற்றமே இருந்தது. தோனி இன்னும் கடைசி நேரத்தில் களமிறங்கி வின்னிங் ஷாட் அடித்து ஃபினிஷ் செய்யும் காலம் முடிந்துவிட்டது என்பது இந்த ஆட்டத்தில் தெரிந்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
முதல் ஓவரிலேயே விக்கெட்
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ப்ரேசர் மெக்ருக், கே.எல்.ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். கலீல் அகமதுவின் முதல் ஓவரிலேயே மெக்ருக் பெரிய ஷாட்டுக்கு முயன்று அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த அபிஷேக் போரெல், ராகுலுடன் சேர்ந்தார். முகேஷ் சவுத்ரி ஓவரை குறிவைத்த அபிஷேக் போரெல் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். கே.எல்.ராகுலும் தனது பங்கிற்கு சிக்ஸர், பவுண்டரி அடிக்கவே டெல்லி அணியின் ரன்ரேட் சீராக உயர்ந்தது. பவர்ப்ளே ஓவரில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் சேர்த்தது.
ஜடேஜா வீசிய 7-வது ஓவரில் பதிராணாவிடம் கேட்ச் கொடுத்து, அபிஷேக் போரெல் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் அக்ஸர் படேல் களமிறங்கி சிறிய கேமியோ ஆடி ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என 14 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து நூர் அகமது பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார்.
பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கேவை திணறவிட்ட ராகுல்
அடுத்து சமீர் ரிஸ்வி களமிறங்கி, ராகுலுடன் சேர்ந்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும் கே.எல்.ராகுல் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, அல்லது சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார்.
ராகுல் களத்தில் இருந்தவரை, சிஎஸ்கே அணி பந்துவீச்சாளர்களால் ரன்ரேட்டை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நூர் முகமது, பதிராணா, ஜடேஜா பந்துவீச்சை எளிதாகக் கையாண்ட ராகுல் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார்.
அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தபோது தான் சந்தித்த 33 பந்துகளில் 6 பந்துகள் மட்டுமே டாட்பந்துகளாக விட்டிருந்தார். மற்ற 27 பந்துகளிலும் ரன் சேர்த்திருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
பின்வரிசையில் விழுந்த விக்கெட்டுகள்
முன்னாள் சிஎஸ்கே வீரரான சமீர் ரிஸ்வி ரன் சேர்க்க மிகவும் தடுமாறி, நூர் பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரி மட்டுமே சேர்த்து, 20 ரன்னில் கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.4வது விக்கெட்டுக்கு ராகுல், ரிஸ்வி கூட்டணி 56 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அதன்பின் வந்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ராகுலுடன் சேர்ந்து அதிரடியாக ஆடவே டெல்லி அணியின் ஸ்கோர் 17வது ஓவரில் 150 ரன்களை எட்டியது. டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் சிக்ஸர், பவுண்டரி விளாசினார். பதிராணா வீசிய கடைசி ஓவரில் கேஎல் ராகுல் 51 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்த நிலையில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் அஷுதோஷ் சர்மா ஒரு ரன்னில் ரனஅவுட்ஆகினார்.
டெல்லி அணி கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகளை இழந்தது. டெல்லி அணி கடைசியில் ரன் சேர்த்த வேகத்தைப் பார்த்தபோது 200 ரன்களை எட்டிவிடும் என்று நம்பப்பட்டது, ஆனால் பதிராணா வீசிய 18, 20வது ஓவர்கள் ரன்ரேட்டை கட்டுப்படுத்தி 183 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது.
பட மூலாதாரம், Getty Images
பலன் கொடுக்காத சிஎஸ்கே பந்துவீச்சு
பட மூலாதாரம், Getty Images
சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்ளுக்கும் நன்கு ஒத்துழைத்தது. ஆனால், சிஎஸ்கே பந்துவீச்சாளர்களில் கலீல் அகமதுவை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் டெல்லி பேட்டர்கள் ரன் சேர்க்க எந்த சிரமத்தையும் தரவில்லை. முகேஷ் சவுத்ரி 4 ஓவர்கள் வீசி 50 ரன்கள், நூர்அகமது 3 ஓவர்களில் 36 ரன்களை வாரி வழங்கினர்.
வேகப்பந்துவீச்சில் பதிராணா, கலீல்,முகேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 106 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தனர். வேகப்பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 9 ரன்கள் வீதம் விட்டுக் கொடுத்தனர்.
சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, நூர் அகமது, அஸ்வின் ஆகியோ 3 பேரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 76 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி ஓவருக்கு 9 ரன்கள் வீதம் வாரி வழங்கினர். சிஎஸ்கே அணியில் கலீல் அகமது பந்துவீச்சு மட்டுமே ஆறுதல் அளித்தது.
பட மூலாதாரம், Getty Images
பவர்ப்ளேயில் வீழ்ந்த சிஎஸ்கே
184 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. ரவீந்திரா, கான்வே களமிறங்கினர்.
முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரில் ரவீந்திரா பிளிக் ஷாட்டுக்கு முயன்று முகேஷிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் கெய்க்வாட், வந்தவேகத்தில் பவுண்டரி அடித்து ஸ்டார்க் பந்துவீச்சில் மெக்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்து அதிர்ச்சியளித்தார்.
லெக் ஸ்பின்னர் விகேஷ் நிகம் ஓவரில் கான்வே 13 ரன்கள் சேர்த்தநிலையில் அக்ஸர் படேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்கு சிஎஸ்கே அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
பட மூலாதாரம், Getty Images
டெல்லியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு
4வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே களமிறங்கி, விஜய் சங்கருடன் சேர்ந்தார். துபே வந்தவுடன் சுழற்பந்துவீச்சை நிறுத்தி ஸ்டார்க்கை பந்துவீச அக்ஸர் அழைத்து அருமையான கேப்டன்ஷி செய்து ரன்ரேட்டை உயரவிடாமல் நெருக்கடியளித்தார்.
ஸ்டார்க், லெக் ஸ்பின்னர் நிகம், குல்தீப் ஆகியோர் சேர்ந்து சிஎஸ்கே ரன்ரேட்டை உயரவிடாமல் கிடுக்கிப்பிடி பிடித்தனர். 6வது ஓவரிலிருந்து 9வது ஓவர் வரை சிஎஸ்கே அணி ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. ரன்ரேட் நெருக்கடி அதிகரிக்கவே நிகம் வீசிய 10-வது ஓவரில் துபே சிக்ஸர் அடித்தார், அடுத்தபந்தில் ஸ்டெப்ஸிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.
10 ஓவர்களில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்து தடுமாறியது. அடுத்துவந்த ஜடேஜா நிலைக்கவில்லை குல்தீப் பந்துவீச்சில் கால்காப்பில்வாங்கி 2 ரன்னில் வெளியேறினார். அடுத்து தோனி களமிறங்கி, விஜய் சங்கருடன் சேர்ந்தார்.
பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கேவுக்கு பவுண்டரி பஞ்சம்
12 வது ஓவரை வீசிய நிகம், 13வது ஓவரை வீசிய குல்தீப் இருவரும் தோனி, சங்கர் இருவரையும் பவுண்டரி அடிக்கவிடாமல் நெருக்கடியாகப் பந்துவீசினர். மோகித் சர்மா வீசிய 14-வது ஓவரில் விஜய் சங்கர் பவுண்டரி அடித்தார். குல்தீப் வீசிய 15-வது ஓவரில் சங்கர் இரு பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை சற்று உயர்த்தினார்.
சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி 5ஓவர்களில் 78 ரன்கள் தேவைப்பட்டது. நிச்சயம் அடையமுடியாத இலக்க என்பது தெளிவாகியது. மோகித் சர்மா வீசிய 16-வது ஓவரிலும், அக்ஸர் வீசிய 17வது ஓவரிலும் பவுண்டரி கூட இல்லாததால் சிஎஸ்கே அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.
பட மூலாதாரம், Getty Images
அணையும் விளக்கு பிரகாசம்
முகேஷ் குமார் வீசிய 18-வது ஓவரில் தோனி ஒருசிக்ஸர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார், ஆனால், சிஎஸ்கே அணியின் வெற்றிக்காக தோனி ஏதும் செய்யவில்லை.
ஸ்டார்க் வீசிய 19வது ஓவரில் விஜய் சங்கர் பவுன்ஸரை சமாளிக்க முடியாமல் பேட்டை வைக்கவே பவுண்டரி சென்றது. மற்றவகையில் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. முகேஷ் வீசிய கடைசி ஓவரில் தோனி ஒருபவுண்டரி, விஜய் சங்கர் ஒரு சிக்ஸர் அடித்தும் ஆறுதல் அளித்தனர். 6-வது விக்கெட்டுக்கு தோனி, விஜய் சங்கர்கூட்டணி 84 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தோனி 30 ரன்களிலும், விஜய் சங்கர் 69 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்து 25 ரன்களில் தோல்வி அடைந்தது. டெல்லி தரப்பில் விப்ராஜ் நிகம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமே பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளை இழந்ததுதான். இந்தப் போட்டியில் மட்டுமல்ல கடந்த 3 தோல்விகளிலும் பார்த்தாலும் முதல் 2 ஓவது ஓவரிலேயே சிஎஸ்கே அணி விக்கெட்டை இழந்திருக்கும். இன்றுள்ள டி20 போட்டிகளில் பவர்ப்ளேதான் ஆட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. பவர்ப்ளேயில் எந்த அணியின் கை ஓங்கி இருக்கிறதோ அந்த அணி ஆட்டத்தை முன்னெடுத்து செல்கிறது.
மும்பை, ராஜஸ்தான், டெல்லி, ஆர்சிபி அணிகளுக்கு எதிரான ஆட்டம்அனைத்திலும் சிஎஸ்கே அணி 2வது ஓவரிலேயே விக்கெட்டை இழந்துள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பவர்ப்ளேயில் குறைந்த ரன் சேர்த்த அணி சிஎஸ்கேதான், பவர்ப்ளேயில் சிஎஸ்கே 7.5 ரன்ரேட் மட்டுமே வைத்துள்ளது, அதாவது 45 ரன்களுக்கு மேல் சிஎஸ்கே அணியால் பவர்ப்ளேயில் சேர்க்க முடியவில்லை.
பவர்ப்ளே ஓவர்களை சிஎஸ்கே பேட்டர்களும் சரிவர பயன்படுத்தவில்லை, பந்துவீச்சாளர்களும் பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுக்கத் தவறிவிட்டனர். கலீல் அகமதுவைத் தவிர அவருக்கு துணையாக நல்ல வேகப்பந்துவீச்சாளர் அணியில் யாருமில்லை.
விஜய் சங்கர் இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து இந்த ஆட்டத்தை எதிர்பார்த்ததே பெரிய விஷயமாகும். விஜய் சங்கர் சராசரி ஆல்ரவுண்டரே தவிர, அவர் பிக்ஹிட்டர், மேட்ச் வின்னர் கிடையாது என்பதை கிரிக்கெட் வர்ணனையாளர்களே தெரிவித்தனர்.
நெருக்கடியான நேரத்தில் ஆட்டத்தை கையில் எடுத்து ஆடக்கூடிய பெரிய பேட்டர், நிலைத்தன்மை உடைய பேட்டர் சிஎஸ்கேயில் யாருமில்லை.
பந்துவீச்சில் கலீல் அகமது,பதீரணாவைத் தவிர பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீச சிஎஸ்கே அணி எந்த வீரரையும் முயற்சிக்கவில்லை. பேட்டிங்கிலேயே திரிபாதிக்கு 3 போட்டிகளில் வாய்ப்பளித்த பின்புதான், இந்த போட்டியில் கான்வேவை கொண்டு வந்தது. கான்வே சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து ஃபார்மின்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு