ஐபிஎல் டி20 சீசன் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்போதெல்லாம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி, கவனத்தை ஈர்க்கும் போட்டி எது என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிதான். இரு அணிகளும் களத்தில் மோதினாலே அது ஒரு பண்டிகைக்கான கொண்டாட்டத்துக்கு குறைவில்லாததாகவே ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள்.
களத்துக்கு வந்து ஆர்ப்பரிப்பு செய்வது மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் தங்களின் அணியை புகழ்வது, எதிரணியை ரசிகர்களை வம்பிழுத்தல், மீம்ஸ் போடுதல் என ரசிகர்களின் சமூக வலைத்தள மோதலும் உச்சக்கட்டத்தை எட்டும்.
‘எல்கிளாசிகோ’-வாக பார்க்கப்படுவது ஏன்?
ஒட்டுமொத்த 17 ஐபிஎல் தொடர்களில் இரு அணிகளும் சேர்ந்து 10 கோப்பைகளை வென்றுள்ளன. இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன், ஒரு அணி மேற்கு கடற்கரையிலிருந்து வந்தது, மற்றொரு அணி கிழக்கு கடற்கரை, பொருளதார ரீதியாக ஜிடிபியில் இரு மாநிலங்களும் அதிக பங்களிப்பு செய்பவை, மெட்ரோபாலிட்டன் நகரங்களை அடிப்படையாகக் கொண்ட அணிகள், அதிகமான நட்சத்திர வீரர்களைக் கொண்டவை, இங்கு பாலிவுட் என்றால் அங்கு கோலிவுட் என போட்டிக்கு சளைத்தவர்கள் இல்லை என்று கிரிக்கெட் மட்டுமல்லாது அனைத்திலும் நேருக்கு நேர் நிற்கின்றன.
ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் “எல்கிளாசிகோ” ஆட்டமாகவே சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் பார்க்கப்படுகிறது. எல்கிளாசிகோ என்பது ஸ்பானிஷ் வார்த்தை. ஸ்பெயின் நாட்டில் நடக்கும் இரு பலம்வாய்ந்த அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
கால்பந்து போட்டியில் லா லிகா ஆட்டத்தில் பார்சிலோனா அணியும், ரியல் மாட்ரிட் அணியும் மோதும் ஆட்டங்களை எல்கிளாசிகோ என்று அழைப்பார்கள். அதேபோல, ஐபிஎல் தொடரில் எல்கிளாசிகோ ஆட்டம் என்றால் மும்பை, சிஎஸ்கே அணிகள் மோதும் ஆட்டமாக பார்க்கப்படுகிறது.
கால்பந்து போட்டியில் பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் மோதும் ஆட்டத்துக்காக ரசிகர்கள் ஓர் ஆண்டு எவ்வாறு காத்திருப்பார்களோ அதேபோலத்தான் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே, மும்பை அணிகள் மோதும் ஆட்டத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
நட்சத்திர அந்தஸ்து
இரு அணிகளிலுமே 2008ம் ஆண்டு முதல் 2025 ஐபிஎல் வரை நட்சத்திர வீரர்களைக் கொண்ட அணியாகவே இருந்துவந்துள்ளன. மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கர், சிஎஸ்கேயில் தோனி. இந்திய அணிக்கு ஐசிசியின் 3 கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்த ஒரே கேப்டன் ஒரு புறம் , மற்றொரு பக்கம் சச்சின். இரு பெரிய துருவங்களும் களமிறங்கும் ஆட்டம் அப்போதிருந்தே ரசிக்கப்பட்டு வருகிறது
குறிப்பாக 2008-ம் ஆண்டு முதன்முதலில் இரு அணிகளும் சேப்பாக்கத்தில் மோதுகின்றன . கடைசி ஓவரில் மும்பை அணி வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டபோது, 2007 டி20 உலகக் கோப்பைத் தொடரில் கடைசி ஓவரை வீசச் செய்த ஜோகிந்தர் ஷர்மாவை அழைத்து சிஎஸ்கே அணியில் தோனி பந்துவீசச் செய்தார். 19 ரன்களை டிபெண்ட் செய்த சிஎஸ்கே அணி 6 ரன்களில் மும்பை அணியை வீழ்த்தியது. இதுதான் இரு அணிகளின் மோதலுக்குமான தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
பட மூலாதாரம், Getty Images
சீனியர் யார்?
ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற வகையில் சீனியர் அணியாக சிஎஸ்கே அணிதான் மார்தட்டிக்கொள்கிறது. 2010-ம் ஆண்டிலேயே சிஎஸ்கே அணி தனது முதல் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது, மும்பை அணி தனது முதல் கோப்பையை 2013?ல் வென்ற போது, சிஎஸ்கே அணி 2 முறை (2010, 2011) கோப்பையை வென்று சீனியராகத் திகழ்ந்தது.
ஆனால், ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றபின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த உற்சாகம், புத்துணர்வு 2013 முதல் 2020ம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டு இடைவெளிவிட்டு கோப்பையை வென்றது. சிஎஸ்கே 5-வது சாம்பியன் பட்டம் பெறுவதற்குள் வேகமாக மும்பை அணி 5 கோப்பைகளை வென்றது.
எப்படி தொடக்கத்தில் சிஎஸ்கே முந்திக்கொண்டதோ அதேபோல சாம்பியன் பட்ட எண்ணிக்கையில் சிஎஸ்கேவை முந்தியது மும்பை அணி. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிக்காட்டி வருகின்றன.
பைனலில் சிஎஸ்கே vs மும்பை
இரு அணிகளும் லீக் போட்டிகளில் சந்தித்தாலே ரசிகர்களின் உற்சாகம் பீறிட்டு எழும், அதிலும் பைனலில் இரு அணிகளும் சந்தித்தால் அது கொண்டாட்டமாகவே பார்க்கப்பட்டது. இதுவரை ஐபிஎல் பைனலில் 2010, 2013, 2015, 2019 ஆகிய சீசன்களில் மோதியுள்ளனர். இதில் 2010ல் மட்டும் மும்பை அணியை தோற்கடித்துள்ளது சிஎஸ்கே, மற்ற 3 சீசன்களிலும் சிஎஸ்கேவை வென்றது மும்பை அணி.
இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 37 முறை மோதியுள்ளன. அதில் மும்பை அணி லீக் சுற்றில் 15 முறையும், சிஎஸ்கே அணி 13 முறையும் வென்றுள்ளன. ப்ளே ஆஃப் சுற்று என்று வரும்போது சிஎஸ்கே அணி 3 முறையும், மும்பை 2 முறையும் வென்றுள்ளன. பைனலில் மும்பை 3 முறையும், சிஎஸ்கே ஒருமுறையும் வென்றுள்ளது. ஆக மொத்தத்தில் மும்பை அணியின் ஆதிக்கம்தான் இருக்கிறது.
இரு அணிகளுமே களத்தில் லீக் சுற்று முதல் பைனல் வரை உச்சக்கட்ட வேகத்தில், துடிப்போடு மோதுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மும்பை அணி தனது முதல் கோப்பையை 2013ல் வென்றபோது, சிஎஸ்கே அணி 2 முறை கோப்பையை வென்று சீனியராகத் திகழ்ந்தது
மறக்க முடியாத 2019 சீசன்
2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சக்கைபோடு போட்ட மும்பை அணி, லீக் சுற்றிலும் சிஎஸ்கே அணியை தோற்கடித்து, குவாலிஃபயர் சுற்றிலும் துவைத்து எடுத்தது. ஹைதராபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பும்ராவின் சிறப்பான பந்துவீச்சால் ஒரு ரன்னில் மும்பை அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த ஆட்டம் மும்பை, சிஎஸ்கே அணிக்கு இடையிலான மோதலின் மறக்க முடியாத நினைவாக இருக்கும்.
மும்பைக்கு வெற்றி கிடைக்குமா?
இந்நிலையில் 2025 ஐபிஎல் சீசனில் 2வது ஆட்டத்திலேயே மும்பை-சிஎஸ்கே மோதல் அதிலும் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. கடைசியாக 2022ம் ஆண்டு சிஎஸ்கே அணியை மும்பை அணி வென்றிருந்தது. அதன்பின் தொடர்ந்து 3 முறையும் மும்பை அணி தோல்வி அடைந்தது.
சேப்பாக்கத்தைப் பொருத்தவரை மும்பை அணிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவரை 6 வெற்றிகளை சேப்பாக்கத்தில் மும்பை அணி பெற்றுள்ளது. சொந்த மண்ணிலேயே சிஎஸ்கேவால் 3 வெற்றிகளைத்தான் பெற முடிந்தது.
பட மூலாதாரம், Getty Images
இரு மாபெரும் சாரதிகள்
சிஎஸ்கே அணிக்கு வழக்கமான கேப்டன் தோனி இல்லாமல் ருதுராஜ் தலைமையில் களமிறங்குகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் தடை இருப்பதால் முதல் போட்டியில் மும்பை அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார்கள். இரு அணிகளிலுமே கேப்டன்களின் சாரதியாக ரோஹித் சர்மா, தோனி இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஐபிஎல் தொடரில் இரு வெற்றிகரமான கேப்டன்கள் என வர்ணிக்கப்படும் எம்எஸ் தோனி, ரோஹித் சர்மா இருவரும் தங்கள் அணியின் கேப்டன்களுக்கு பக்கபலமாக இருந்து அணியை வழிநடத்துவதே ஸ்வாரஸ்யமாகும்.
பட மூலாதாரம், Getty Images
மும்பையோடு சிஎஸ்கேவை ஒப்பிடுவது சரியா?
ஒரு கால கட்டத்தில் மும்பை அணியோடு சிஎஸ்கே அணியை ஒப்பிடும் போது அது சமவலிமை வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. களத்தில் இரு அணிகளும் ஆவேசமாக, ஆக்ரோஷமாக விளையாடி போட்டியை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றனர். ஆனால், நட்சத்திர வீரர்கள் இருக்கும் அணி என்ற அந்தஸ்தை மும்பை அணி சமீபகாலமாக இழக்கவில்லை.
குறிப்பாக ரோஹித் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 5 வீரர்களுமே சர்வதேச அரங்கில் அதிக அனுபவம் கொண்டவர்கள். மும்பை அணியில் இருக்கும் டாப் ஆர்டர் பேட்டர்கள் ரோஹித் சர்மா, திலக் வர்மா, ஸ்கை, ஹர்திக்குக்கு இணையாக சிஎஸ்கே அணியில் யார் உள்ளனர்? பும்ராவுக்கு இணையான வேகப்பந்துவீச்சாளர் சிஎஸ்கே அணியில் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
பும்ரா எப்போது மும்பை அணிக்குள் வருவார், விளையாடுவார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும், பும்ரா களத்துக்கு வந்துவிட்டால் அவரின் பந்துவீச்சுக்கு இணை வைக்கும் பந்துவீச்சாளர் சிஎஸ்கேயில் இல்லை.
பட மூலாதாரம், Getty Images
ரோஹித் சர்மா அதிக ரன்கள்
சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்த பேட்டர் என்ற கணக்கில் மும்பை முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஒருசதம் உள்பட 837 ரன்களுடன் உள்ளார்.
சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா 736 ரன்கள் குவித்திருந்தாலும் இப்போது அவர் அணியில் இல்லை. அந்த வகையிலும் ரோஹித் சர்மாவின் சாதனையும், ஆதிக்கமும் சிஎஸ்கே மீது இருக்கும்.
ரசிகர்களை ஆளும் அணி
ஆனாலும், ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணி எங்கு சென்றாலும் எந்த மைதானம் சென்றாலும் அங்கு ரசிகர்கள் குவியத் தொடங்கிவிடுவார்கள். அதற்கு ஒரே காரணம், ஒற்றை மனிதர்தான் அதுதான் மகேந்திர சிங் தோனி(தல).
ரோஹித் சர்மாவுக்கும் ரசிகர்கள் வட்டம் இருக்கிறது, ஆனால் மண்ணின் மைந்தர் என்று மும்பை அளவில் சுருங்கிவிடுகிறதே தவிர, இந்தியாவின் ஒவ்வொரு மைதானத்திலும் பெரிதாக இல்லை என்பதுதான் நிதர்சனம். மொத்தத்தில் ரசிகர்களை ஆதிக்கம் செய்வது சிஎஸ்கேதான்.
“நல்ல கிரிக்கெட்டை கொடுப்போம்”
மும்பை-சிஎஸ்கே ஆட்டம் குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபென் பிளெமிங் ஒருமுறை ஊடகத்துக்கு அளித்தபேட்டியில் ” மும்பை, சிஎஸ்கே இடையிலான போர் வளர்ந்து கொண்டே வருகிறது, ஆனால், இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது, நல்ல கிரிக்கெட்டை ரசிகர்கள் பார்க்கலாம்.
இரு வெற்றிகரமான அணிகள் மோதும் ஆட்டத்தில் சுவாரஸ்யம் இருக்கும், இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் போட்டியின் முடிவுகளைக் கடந்து பார்க்க அதிகம் இருக்கிறது, இந்தஆட்டத்தில் வீரர்கள் உணர்ச்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு, பொழுதுபோக்கு அம்சத்தை வைத்துதான் விளையாட வேண்டும்” என்று தெரிவித்தார்.