பட மூலாதாரம், X/CSK
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி. மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக அமைந்த இந்த ஆட்டத்தில் எளிய இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை கடைசி ஓவர் வரை மும்பை அணி தள்ளிப்போட்டது.
சிஎஸ்கே கையில் எடுத்த அதே ஆயுதத்தை மும்பை இந்தியன்ஸும் எடுத்து கடைசிவரை போராடியது. சிஎஸ்கேவில் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது இருப்பதைப் போல், மும்பை இந்தியன்ஸில் இளம் அறிமுக வீரர் விக்னேஷ் புத்தூர் சிஎஸ்கே ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கியமானவர். அவர் தனது மந்திர சுழலால் சென்னை அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார்.
மும்பையின் டாப்ஆர்டரை காலி செய்த கலீல்
டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலேயே கலீல் பந்துவீச்சில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரிக்கெல்டனையும் கிளீன் போல்டு செய்து அவர் அசத்தினார்.
மறுபுறம் இளம் அதிரடி ஆட்டக்காரர் வில் ஜாக்ஸை சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் வெளியேற்றினார். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 4.4. ஓவர்களில் 36 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பட மூலாதாரம், Getty Images
மும்பையை திணறவைத்த நூர்அகமது
மும்பை அணிக்கு சூர்யகுமார், திலக்வர்மா இருவரும் சேர்ந்து ஓரளவு ஸ்கோரை நிலைப்படுத்தி பவர்ப்ளே முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப் 51 ரன்கள் சேர்த்து நங்கூரமிட்டநிலையில் அதை நூர் அகமது உடைத்தார்.
நூர் அகமதுவின் பந்துவீச்சில் சூர்யகுமார் இறங்கி அடிக்க முற்பட்டு பந்தை தவறவிட்ட 0.012 மைக்ரோ வினாடிகளில் ஸ்டெம்பிங் செய்தார் தோனி. அடுத்துவந்த புதிய பேட்டர் ராபின் மின்ஸ் சரியாகக் கணிக்காமல் நூர் அகமது வீசிய 13-வது ஓவரில் ஸ்லோ பாலை அடிக்க முற்பட்டு கேட்சாகி 3 ரன்னில் ஆட்டமிழந்தார், அதே ஓவரில் திலக் வர்மா கால்காப்பில் வாங்கி 31 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மும்பை அணியின் ரன்ரேட் ஓரளவு உயர்ந்தநிலையில் அதற்கு நூர்அகமது வலுவான பிரேக்போட்டார். அடுத்துவந்த நமன்திர்(17), சான்ட்னர்(17) இருவரும் ஓரளவு பங்களிப்பு செய்தனர்.
சிஎஸ்கே அணியில் நீண்டகாலம் இருந்த தீபக் சஹர் தன்னாலும் பேட் செய்ய முடியும் என்பதை நேற்று வெளிப்படுத்தினார். கடைசி நேரத்தில் சிறிய கேமியோ ஆடிய தீபக் சஹர் 15 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தீபக் சஹரின் இந்த பங்களிப்பால்தான் மும்பை அணியால் 150 ரன்களைக் கடக்க முடிந்தது.
பட மூலாதாரம், Getty Images
கெய்க்வாட், ரவீந்திரா சிறப்பான ஆட்டம்
156 ரன்கள் எளிதாக சேஸ் செய்யக்கூடிய ஸ்கோர் இல்லை என்பதை மும்பை அணி தொடக்கத்தில் இருந்து வெளிப்படுத்தியது. தொடக்கத்திலேயே திரிபாதி விக்கெட்டை தீபக் சஹர் வீழ்த்தி அதிர்ச்யளித்தார்.
3வது வீரராக வந்த கெய்க்வாட், ரவீ்ந்திராவுடன் சேர்ந்து அதிரடியாக பேட் செய்தார். ரச்சின் ரவீந்திரா ஆங்கர் ரோலில் ஆட, கெய்க்வாட் வேகமாக ரன்களைச் சேர்த்தார். தீபக் சஹர், சான்ட்னர், ராஜீ பந்துவீச்சை வெளுத்துவாங்கவே பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு சிஎஸ்கே 62 ரன்கள் சேர்த்தது.
பட மூலாதாரம், Getty Images
எளிதான வெற்றி கடினமானது
கடைசி 13 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 83 ரன் தேவைப்பட்டது. கெய்க்வாட், ரவீந்திரா இருந்த ஃபார்மில் விரைவாக எட்டிவிடுவார்கள் நிகர ரன் ரேட்டை உயர்த்திவிடுவார்கள் என்று ரசிகர்கள் கருதினர். ஆனால், சிஎஸ்கே எடுத்த அதே ஆயுதத்தை, அவர்களுக்கு எதிராக மும்பையும் பயன்படுத்தியது.
4 சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திய கேப்டன் சூர்யகுமார், 13 ஓவர்களை சுழற்பந்துவீச்சாளர்களுக்கே வழங்கினார். பந்துவீச்சாளர்களை ரொட்டேட் செய்து சிறப்பாக கேப்டன்சியும் ஸ்கை செய்தார்.
சிஎஸ்கேவை கட்டிப்போட்ட புத்தூர்
அறிமுக ரிஸ்ட் ஸ்பின்னர் விக்னேஷ் புத்தூர் பந்துவீச்சை சிஎஸ்கே பேட்டர்கள் எளிதாக எடை போட்டனர். இயல்புக்கும் குறைவான வேகத்தில் விக்னேஷ் பந்துவீசியதால் அவரின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயலும் போது கவனத்துடன் ஆட வேண்டும்.
கேப்டன் கெய்க்வாட் சிக்ஸர் அடிக்க முற்பட்டு, 53 ரன்னில் ஜேக்ஸிடம் கேட்சாகினார். அடுத்துவந்த ஷிவம் துபே(9), தீபக் ஹூடா(3) ஆகியோரம் புத்தூரின் ஸ்லோ ரிஸ்ட் ஸ்பின்னில் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை பலிகொடுத்தனர். சாம்கரன் 4 ரன்னில் ஜேக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
சிஎஸ்கேவின் வேகமான வெற்றிப் பயனத்துக்கு விக்னேஷ் புத்தூர், உள்ளிட்ட 4 சுழற்பந்துவீச்சாளர்களும் பிரேக் போட்டனர். நமன் திர், வில் ஜேக்ஸ், சான்ட்னர், புத்தூர் என பலமுனை தாக்குதல்களை சிஎஸ்கே பேட்டர்களால் சமாளிக்க முடியவில்லை. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 37 ரன் தேவைப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
டென்ஷனைக் குறைத்த ரவீந்திரா
புத்தூர் வீசிய 18-வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா இரு சிக்ஸர்களை விளாசி வெற்றிக்கு தேவைப்படும் ரன்களைக் குறைத்தார். இடையே போல்ட் ஓவரில் ஜடேஜா பவுண்டரி அடித்ததும் சற்று பின்னடைவாக மும்பைக்கு அமைந்தது. கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது, நமன்திர் வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா 17ரன்னில் ரன்அவுட்டாகினார்.
அரங்கமே அதிர்ந்தது
ரசிகர்கள் எதற்காக காத்திருந்தார்களோ அந்த சம்பவம் நடந்தது, தோனி களமிறங்கும்போது, அரங்கில்இருந்த “டீஜே” ஒலிக்கவிட்ட பாடல்கள், அரங்கை அதிர வைத்தன. அதைவிட ரசிகர்களின் கரஒலியும், விசில் சத்தமும் வங்க்கடலின் அலையைவிட பெரிதாக இருந்தது.
தோனி கடைசி இரு பந்துகளைச் சந்தித்தும் ரன் சேர்க்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. சான்ட்னர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ரவீந்திரா சிக்ஸர் அடிக்கவே சிஎஸ்கே வென்றது. ரவீந்திரா 65 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் இளம் வீரர் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பட மூலாதாரம், Getty Images
13 ஆண்டாக தொடரும் சோகம்
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2012ம் ஆண்டுக்குப்பின், ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வெல்ல முடியாமல் தவிக்கிறது. இந்த போட்டியில் தோல்வியுடன் சேர்த்து 13 ஆண்டாக முதல் போட்டியில் தோற்று வருகிறது மும்பை அணி. அதிலும் சிஎஸ்கேவுக்கு எதிராக 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் முதல் போட்டியில் தோற்ற நிலையில் இந்த ஆட்டத்திலும் மும்பை தோற்றது.
ஆட்டத்தின் நாயகன்
சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் இருவர் முக்கியக் காரணம். ஒருவர் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது, மற்றொருவர் ஆப்கானிஸ்தான் இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர் நூர் அகமது. இதில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய நூர் அகமது ஆட்டநாயகன் விருது வென்றார்.
நூர் அகமதுவுக்கு ஐபிஎல் வாழ்க்கையில் இதுதான் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. இதற்கு முன் 3 விக்கெட் வீழ்த்தியிருந்த நிலையில் அதைவிட சிறப்பாக இந்தப் போட்டியில் பந்துவீசியுள்ளார்.
பேட்டிங்கில் கேப்டன் கெய்க்வாட்(53), ரச்சின் ரவீந்திரா(65) இருவரைத் தவிர சிஎஸ்கே அணியில் பெரிதாக யாரும் பங்களிப்பு செய்யவில்லை.
கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய கெய்க்வாட் 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து பந்துக்கும், தேவைப்படும் ரன்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்துச் சென்றார். ஆங்கர் ரோல் எடுத்து ஆடிய ரச்சின் ரவீந்திரா கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
பட மூலாதாரம், Getty Images
மின்னல் ‘மகி’
சிஎஸ்கே அணியில் நேற்று 43 வயது இளைஞர் களமிறங்கிய போது அரங்கமே கைதட்டலிலும், விசில் சத்தத்திலும் அதிர்ந்தது. எம்எஸ் தோனியின் பீல்டிங், விக்கெட் கீப்பிங்கைப் பார்த்தபோது அவருக்கு 43 வயதுபோன்று தெரியவில்லை. உடற்தகுதியை அற்புதமாக பராமரிக்கும் தோனி நேற்று செய்த ஸ்டெம்பிங் உலகக் கிரிக்கெட்டில் எந்த விக்கெட் கீப்பரும் இவ்வளவு வேகமாக செய்திருக்க வாய்ப்பில்லை.
நூர் அகமதுவின் பந்துவீச்சில் சூர்யகுமார் இறங்கி அடிக்க முற்பட்டு பந்தை தவறவிட்ட 0.012 வினாடிகளில் ஸ்டெம்பிங் செய்துவிட்டு தோனி சிரித்துக்கொண்டே சென்றார். தோனியின் ஸ்டெம்பிங் வேகம் பற்றி அறிந்த ஸ்கை சிரித்துக்கொண்டே பெவிலியன் சென்றார். ஒரு பேட்டரின் பேட்டிங் ஆக்சன் கூட முழுமையாக முடியாத நிலையிலேயே, சில மைக்ரோ வினாடிகளில் இந்த ஸ்டெம்பிங்கை தோனி செய்துள்ளார். மின்னல் மகியின் ஆகச்சிறந்த ஸ்டெம்பிங் முதல் ஆட்டத்திலேயே தெரிந்தது.
பட மூலாதாரம், Getty Images
தோனி குறித்து ருதுராஜ் கூறியது என்ன?
வெற்றிக்குப் பின் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில் ” நான் ஆட்டமிழந்தவுடன் சிறிது பதற்றமாக இருந்தது. சில போட்டிகள் கடைசி ஓவர்வரை செல்லும், வெற்றிபெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் அப்படித்தான் உணர்கிறேன். அணியில் 3வது வீரராகக் களமிறங்க வேண்டிய தேவை இருந்ததால் நான் வந்தேன். புதிய அணிக்கு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். திரிபாதி தொடக்க வீரராக சிறப்பாக ஆடக்கூடியவர்.
எங்களின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர், ஐபிஎல் ஏலத்திற்கு பின் சேப்பாக்கத்தில் பந்துவீசுவது எங்களுக்கு உற்சாகமளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கலீல் அகமது சிறப்பாக விளையாடி வருகிறார், அனுபவம் அதிகம்வந்துவிட்டது. நூர் அகமதுதான் அணியின் துருப்புச்சீட்டு. தோனி இப்போவும் ஒரே மாதிரியான உடல்தகுதியுடன் இருக்கிறார், வலைப்பயிற்சியில் பல சிக்ஸர்களை விளாசினார், இந்த ஆண்டும் பல சிக்ஸர்களை விளாசுவதைப் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
தோனி ஸ்டம்பிங் பற்றி நூர் அகமது கூறியது என்ன?
ஆட்டநாயகன் விருது பெற்ற நூர் அமகது பேசுகையில், இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினா. எம்எஸ் தோனிக்கு நன்றி தெரிவித்த அவர், “ஐபிஎல்லில் இங்கு விளையாடுவது சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன். அணியில் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்வதில் கவனம் செலுத்தினேன். சூர்யகுமாரின் விக்கெட் சிறப்பு வாய்ந்தது. தோனியின் ஸ்டம்பிங் ஆச்சர்யமானதாக இருந்தது. தோனி போன்ற ஒருவர் ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருப்பது ஒரு பவுலராக எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
10 ஆண்டுகளுக்குப் பின் ‘யெல்லோ அஸ்வின்’
10 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் நேற்று மீண்டும் மஞ்சள் ஆடை அணிந்து உற்சாகமாக, அதிலும் சொந்த மண்ணில் விளையாடினார். தான் இன்னும் ஃபார்மில் இருக்கிறேன் என்பதை உரக்கச் சொல்லிய அஸ்வின் முதல் ஓவரிலேயே வில் ஜேக்ஸ்(11) விக்கெட்டை வீழ்த்தினார்.
அஸ்வின் அதே கேரம்பால், ஸ்லோபால், பந்துவீச்சில் வேரியேஷன் என சரியான லென்த்தில் பந்துவீசி பேட்டர்களுக்கு வழக்கம்போல் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
யார் இந்த விக்னேஷ் புத்தூர்?
பட மூலாதாரம், Getty Images
எளிய இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியை திணறடித்த விக்னேஷ் புத்தூர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர். 24 வயதேயான இவரை 30 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலையில் மும்பை அணி வாங்கியுள்ளது. கேரளாவில் 14 வயதுக்குட்டோர் மற்றும் 19 வயதுக்குட்டோருக்கான அணிகளில் விளையாடியுள்ள இவர், கேரள சீனியர் அணியில் இன்னும் இடம் பிடிக்கவில்லை. கேரள கிரிக்கெட் லீக்கில் ஆலப்புழை அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
கல்லூரி நாட்களில் மித வேகப்பந்துவீச்சாளராக இருந்த அவர், பின்னர் சுழற்பந்துவீச்சாளராக பரிணமித்திருக்கிறார். விக்னேஷ் புத்தூர் லெக் ஸ்பின்னர் ஆவார்.
நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொண்ட வேளையில், விக்னேஷ் புத்தூரை முதுகில் தட்டிக் கொடுத்தார் தோனி. இந்த தருணத்தை விக்னேஷ் புத்தூர் தனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்கவே மாட்டார் என்று கூறியுள்ள வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி, இது விக்னேஷ் புத்தூருக்கு உற்சாகம் தரும் ஒன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு