பட மூலாதாரம், Getty Images
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன் மட்டுமே எடுத்து 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சென்னை அணியின் இந்த வரலாற்றுத் தோல்விக்கு காரணம் என்ன? நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசியும் கூட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை விமர்சிப்பது ஏன்?
சால்ட், படிக்கலின் அதிரடி
சிஎஸ்கே அணி கலீல் அகமதுவை வைத்து ஆட்டத்தை தொடங்கிய நிலையில் மற்றொருபுறம் அஸ்வினை பந்துவீசச் செய்தது. அவரின் முதல் ஓவரிலேயே பில் சால்ட் சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்களை விளாசினார். இதனால் வேறு வழியின்றி நூர் முகமதுவை பந்துவீச அழைத்தனர்.
சால்ட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நூர் முகமது பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் சிறிய கேமியோ ஆடிக்கொடுத்தார். பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது. 10.3 ஓவர்களில் ஆர்சிபி அணி 100 ரன்களை எட்டியது.
ஜடேஜாவின் முதல் ஓவரை கட்டம் கட்டிய படிக்கல் சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களை விளாசினார். படிக்கல் 27 ரன்கள் சேர்த்தபோது, அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகளை இழந்த போதும் விராட் கோலி நிதானமாக பேட் செய்தார்.
பட மூலாதாரம், Getty Images
கோலி பேட்டிங்கில் தடுமாற்றம்
சிஎஸ்கே அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கோலி அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பேட் செய்ய முடியவில்லை. நினைத்த ஷாட்களை அடிக்க முடியவில்லை.
தொடக்க ஆட்டக்காரராக வந்துள்ளதால் சிக்ஸர், பவுண்டரிக்கு பலமுறை கோலி முயற்சித்தார். பெரிதாக ஷாட்கள் அமையவில்லை. இதனால் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து விளையாடினார்.
பதிராணா வீசிய ஓவரில் கோலியின் ஹெல்மெட்டில் பந்துதாக்கியது. முதலுதவிக்குப்பின், ஒரு சிக்ஸர், பவுண்டரியை கோலி அடித்தார். இருப்பினும் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலியின் (31) பேட்டிங் எதிர்பார்ப்புக்குரிய வகையில் இல்லை. முதல் ஆட்டத்தில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்த கோலி நேற்று 100 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஒரு சிஸ்கர், 2 பவுண்டரி மட்டுமே அடித்தார்.
பட மூலாதாரம், Getty Images
பட்டிதார் களத்துக்கு வந்த பின் அவ்வப்போது பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. பட்டிதாருக்கு மட்டும் நேற்று 3 கேட்சுகளை சிஎஸ்கே வீரர்கள் கோட்டை விட்டனர். கை மேல் கிடைத்த கேட்சை தீபக் ஹூடாவும், கலீல் அகமதுவும், ராகுல் திரிபாதியும் கோட்டைவிட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திய பட்டிதார், சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் துவம்சம் செய்தார்.
விராட் கோலி ஆட்டமிழந்தபின் பட்டிதாருக்கு, சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. லிவிங்ஸ்டோன் (10), ஜிதேஷ் ஷர்மா(12) என நூர் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். ஆனால் மனம் தளராமல் ஆடிய பட்டிதார் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
15.6 ஓவர்களில் ஆர்சிபி 150 ரன்களை எட்டியது. டெத் ஓவர்களில் ஆர்சிபி அணி சற்று தடுமாறியது. பதிராணா ஓவரை சமாளிக்க முடியாமல் பட்டிதார் விக்கெட்டையும், குர்னல் பாண்டியா விக்கெட்டையும் இழந்தது. ஆனால் சாம் கரன் வீசிய கடைசி ஓவரில் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார்.
பட மூலாதாரம், Getty Images
ஹேசல்வுட், புவனேஷ் மிரட்டல்
ஆடுகளத்தில் சிறிய அளவு ஒத்துழைப்பு கிடைத்தாலும் பந்துவீச்சை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை புவனேஷ்வர் குமாரும், ஹேசல்வுட்டும் நேற்று செய்து காண்பித்தனர்.
புவனேஷ் 6-8 மீட்டர் லென்த்தில் பந்துவீசி சிஎஸ்கே பேட்டர்களை ஒருபுறம் திணறடிக்க, ஹேசல்வுட் 8-10 மீட்டர் லென்த்தில் பவுன்ஸரையும், சீமிங்கையும் அளித்து திக்குமுக்காடச் செய்தனர். தரமான வேகப்பந்துவீச்சுக்கு முன் சிஎஸ்கே பேட்டர்களின் திறமை என்ன என்பது நேற்று வெளிப்பட்டுவிட்டது.
காயத்திலிருந்து மீண்டு வந்திருந்த புவனேஷ்வரின் அவுட்ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சிஎஸ்கே பேட்டர்கள் திணறினர்.
அதிலும் டெஸ்ட் பந்துவீச்சு போன்று ஹேசல்வுட் வீசியதை சிஎஸ்கே பேட்டர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை தொடக்கத்திலேயே ஹேசல்வுட் எடுத்து அதிர்ச்சியளித்தார். புவனேஷ்வர் தனது பவர்ப்ளே ஓவரில் 73-வது விக்கெட்டாக தீபக் ஹீடாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
பட மூலாதாரம், Getty Images
பவர்ப்ளே முடிவதற்குள் சிஎஸ்கே அணி 3 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சாம்கரனும் பெரிதாக ஸ்கோர் செய்யாமல் 8 ரன்னில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஓரளவு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் யாஷ் தயால் பந்துவீச்சில் இருவரின் விக்கெட்டும் வீழ்ந்தது. யாஷ் தயால் வீசிய 13-வது ஓவரில் ரவீந்திரா 41 ரன்னில் இன்சைட் எட்ஜில் போல்டாகினார். அதே ஓவரில் ஷிவம் துபேயும் 19 ரன்னில் இன்சைட் எட்ஜ் எடுத்து போல்டாகினார். இருவரும் ஆட்டமிழந்தபோதே சிஎஸ்கே அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.
வெற்றிக்கு தேவைப்படும் ரன்கள் அதிகம் இருந்தது. விக்கெட்டுகள் கைவசம் இல்லை. ஆடுகளம் ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகி இருக்கிறது. ஸ்கோர் செய்வதும் கடினமாக இருக்கிறது என்பதை சிஎஸ்கே பேட்டர்கள் உணர்ந்தனர்.
அஸ்வின் 11 ரன்களில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சிலும் , ஜடேஜா 25 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.
ரசிகர்களுக்கு விருந்தளிக்க 9-வது இடத்தில் களமிறங்கிய தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 30 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கேயின் தோல்வியை விரும்பாத ரசிகர்களுக்கு, தோனியின் பேட்டிங் ஆறுதலாக அமைந்தது. சொந்தமண்ணில் மோசமான தோல்வியை தவிர்க்கும் வகையில் தோனியும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார்.
பட மூலாதாரம், Getty Images
கோலி கொண்டாட்டம்
ஆர்சிபி அணி தொடக்கத்திலிருந்து எடுத்த ஒவ்வொரு விக்கெட்டையும் கோலி ரசித்து கொண்டாடினார். தீபக் ஹூடா பேட்டில் பந்து உரசிச் சென்றது பந்துவீச்சாளர் புவனேஷுக்கு கூட தெரியவில்லை. ஆனால், கோலி விரலை உயர்த்திக்கொண்டே அவுட் என குரலை உயர்த்தி ஓடிவந்தார்.
அது மட்டுமல்லாமல் டிஆர்எஸ் எடுங்கள் என்று சைகையால், பட்டிதாரையும் வலியுறுத்தினார். மூன்றாவது நடுவர் கணிப்பில் பேட்டில் பந்து உரசியது தெரிந்தது. ஹூடா விக்கெட்டை வீழ்த்தியதில் பெரும்பங்கு கோலிக்கு உரியது.
சிஎஸ்கே தோல்விக்கு காரணம்
சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமே மோசமான பீல்டிங்கும், இன்னும் வயதான வீரர்களை நம்பி இருப்பதும்தான். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் மட்டும் பட்டிதாருக்கு 3 கேட்சுகளை தீபக் ஹூடா,கலீல் அகமது, திரிபாதி ஆகியோர் கோட்டைவிட்டனர். தோனி ஒரு விக்கெட் கீப்பிங் கேட்சை கோட்டைவிட்டார்.
அடுத்தார்போல் ஜடேஜா, அஸ்வின், தோனி, சாம் கரன், ஷிவம் துபே என கடந்த பல சீசன்களாக ஆடிய வீரர்களை இன்னும் பயன்படுத்தும்போது, அவர்களுக்கு எவ்வாறு பந்துவீசுவது என எதிரணி எளிதாக ஹோம்ஓர்க் செய்துவரும்.
சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் பலர் இருந்தும் ஒருவருக்கு கூட பரிசோதனை அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மற்ற அணிகளில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதேனும் புதிய வீரரை களமிறக்கி பரிசோதிக்கிறார்கள். சிலநேரம் அது வெற்றிக்கான வாய்ப்பாக மாறிவிடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே பந்துவீச்சு நேற்று படுமோசமாக இருந்தது. குறிப்பாக அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு சராசரிக்கும் குறைவாக இருந்தது. நூர் அகமது மட்டும் தப்பினார். வேகப் பந்துவீச்சில் பதிராணா, கலீல் அகமது பந்துவீச்சில் வேகம் இருக்கிறதே தவிர துல்லியமான லென்த், பவுன்ஸ், ஸ்விங் இல்லை.
ஹேசல்வுட், புவனேஷ்வர் பந்துவீச்சில் ஈட்டிபோல் இறங்கிய துல்லியம், லென்த் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களிடம் இல்லை.
அடுத்ததாக 196 ரன்கள் எனும் பெரிய ஸ்கோர் மனரீதியாகவே வீரர்களுக்கு பதற்றத்தையும், ரன் சேர்க்கவேண்டி நெருக்கடியையும் ஏற்படுத்திவிட்டது. இதனால் விக்கெட் வீழ்ந்தவுடன் அழுத்தம் காரணமாக பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
தோனியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்?
தோனி 16 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 30 ரன் சேர்த்தாலும் கூட, பேட்டிங் வரிசையில் 9-வதாக அவர் களம் இறங்கியது விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. 13 வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஆகிய இருவரின் விக்கெட்டையும் யாஷ் தயால் வீழ்த்தினார்.
சிஎஸ்கே வெற்றி பெற ஓவருக்கு 16 ரன்கள் சராசரியாக தேவைப்பட்ட அந்த நேரத்தில் தோனி களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அதற்கு மாறாக சிஎஸ்கே அணி ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறக்கியது. ஆட்டத்தின் 16-வது ஓவரில்தான் தோனி களமிறங்கினார். அந்த நேரத்தில், ஆட்டம் கிட்டத்தட்ட சிஎஸ்கே கையைவிட்டு போய்விட்டிருந்தது. இனி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்கிற கட்டத்தில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தனது ரசிகர்களை தோனி பரவசப்படுத்தினார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சிஎஸ்கே அணி தோல்வியடைந்துள்ளது. ரசிகர்கள் பலரும், சேஸிங்கில் தோனி மிகவும் பின்வரிசையில் இறங்கியதை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
பட மூலாதாரம், X
சேஸிங்கில் அனுபவம் கொண்ட, பதற்றம் கொள்ளாமல் ரன் ரேட்டை பராமரிக்கும் திறன் கொண்ட தோனி அணிக்குத் தேவையான, இக்கட்டான நேரத்தில் களமிறங்காதது ஏன்? என்பது அவர்களின் கேள்வி.
சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர், 5 கோப்பைகளை பெற்றுக் கொடுத்த அனுபவமான வீரர், இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் தாமாக முன்னெடுத்து நடுவரிசையில் களமிறங்கி ஆட்டத்தை தங்கள் பக்கம் இழுத்து வந்திருக்க வேண்டும். ஆனால், டெய்லெண்டர்கள் போல் கடைசியில் 9-வது இடத்தில் களமிறங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.
ஆட்ட நாயகன் பட்டிதார்
ஆர்சிபி அணி வெற்றியுடன் ஐபிஎல் தொடரை 3-வது முறையாகத் தொடங்கியுள்ளது. 2014-வது சீசனில் அடுத்தடுத்து வெற்றிகளுடனும், 2021 ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 4 வெற்றிகளுடனும் ஐபிஎல் சீசனை ஆர்சிபி தொடங்கியது.
ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் வேகப் பந்துவீச்சாளர்களும், கேப்டன் பட்டிதார், சக வீரர்களான பில்சால்ட், கோலி, படிக்கல், டிம்டேவிட் ஆகியோரின் கூட்டு உழைப்புதான். 32 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து நடுப்பகுதியில் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்த கேப்டன் ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஆர்சிபி எப்படி சிஎஸ்கே அணியின் 12 ஓவர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளப்போகிறது என்று எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் ஆர்சிபியின் ஹேசல்வுட், புவனேஷ்வரின் தரமான ஸ்விங், ஸீமிங்,எஸ்ட்ரா பவுன்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தோற்றது சிஎஸ்கே. புவனேஷ்வர் குமார், ஹேசல்வுட் இருவரும் 7 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.
சிஎஸ்கே அணியின் வலிமையே சுழற்பந்துவீச்சுதான் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சை பில்சால்ட், படிக்கல், கோலி வெளுத்து வாங்கினர். இதனால் அஸ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் 5 ஓவர்களே வழங்கப்பட்டது.
இருவரும் 5 ஓவர்கள் வீசி 59 ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்து வீச்சாளர்கள் 9 ஓவர்கள் வீசிய நிலையில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 95 ரன்களை வாரி வழங்கினர்.
பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்தை மாற்றிய 6 ஓவர்கள்
மாபெரும் வெற்றிக்குப் பின் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பேசுகையில் ” இந்த ஆடுகளத்தில் இது நல்ல ஸ்கோர். பந்து சிலநேரம் நின்று வந்தது, பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதும் கடினமாக இருந்தது. சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்துவது சிறப்பானது.
ரசிகர்கள் சிஎஸ்கேவுக்கு ஆதரவாக இருக்கும்போது அதை மீறி சிஎஸ்கே அணியை வென்றோம். என்னுடைய பேட்டிங் முக்கியமானது. 200 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் பெரிய ஸ்கோருக்கு இட்டுச் செல்ல திட்டமிட்டேன். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சற்று ஒத்துழைத்ததால் எங்களின் பந்துவீச்சாளர்களும் நன்கு பந்துவீசினர்.
குறிப்பாக லிவிங்ஸ்டோன் சிறப்பாகப் பந்துவீசினார். ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் இருவரும் சேர்ந்து முதல் 6 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டனர். கடினமான லென்த்தில் பந்துவீசி, பேட்டர்களை திணறவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
3-வது முறை தோல்வி
50 ரன்களில் தோற்றது என்பது சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியாகும்.
இதற்கு முன் 50 ரன்கள் வித்தியாசத்துக்கு மேல் 2 முறை மட்டுமே சிஎஸ்கே தோற்றுள்ளது.
மும்பைக்கு எதிராக 2013ல் 60 ரன்கள் வித்தியாசத்திலும், 2022ல் பஞ்சாப் அணிக்கு எதிராக 54 ரன்கள் வித்தியாசத்திலும் சிஎஸ்கே தோற்றது. அதன்பின் இப்போது 50 ரன்களில் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு