குவாஹாட்டியில் நடைபெறும் ஐபிஎல் 11வது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸில் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதல் ஓவரை வீசிய சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தானின் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தினார்.
சென்னை அணியில் மாற்றம்
சென்னை அணியில் சாம்கரனுக்கு பதிலாக ஜேமி ஓவர்டன் மற்றும் தீபக் ஹூடாவுக்கு பதிலாக விஜய் ஷங்கர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்குகின்றனர். நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்) , துருவ் ஜூரல், ஷிம்ரன் ஹெட்மெயர், ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் தேஷ்பாண்டே.
இரண்டு அணிகளுமே கடந்த போட்டிகளில் பின்னடைவை சந்தித்துள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையிலும் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கைத் தொடங்கினாலும், தன்னுடைய இரண்டாவது போட்டியில் பெங்களூரு அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.
இது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் அந்த அணி இதுவரை கண்டிராத தோல்வியாகும்.
மறுபுறம் இந்த சீசனில் எதிர் கொண்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் தோல்வியை சந்தித்த போதிலும், 286 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்தி, 242 ரன்களை சேசிங்கில் எடுத்திருந்தது. இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இரண்டாவது போட்டி குவாஹாட்டியில் நடைபெற்ற நிலையில் அதே பிட்சில் அடுத்த போட்டியை எதிர்கொள்கிறது. மாறாக சென்னை அணி வெள்ளிக்கிழமை சேப்பாக்கத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடி விட்டு சனிக்கிழமை தான் குவாஹாட்டி சென்றுள்ளது.
சென்னை அணியில் மாற்றம் ஏன்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அணியின் வியூகத்தை மாற்றுவாரா ருதுராஜ்?
சென்னை அணி முந்தைய தொடர்களிலும் மாற்றங்களற்ற அணித்தேர்வுக்காக அறியப்பட்டது. இருப்பினும் ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்வியால் அந்த அணியில் மாற்றங்கள் உத்தேசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன்படியே சாம்கரனுக்கு பதிலாக ஜேமி ஓவர்டன் மற்றும் தீபக் ஹூடாவுக்கு பதிலாக விஜய் ஷங்கர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்னமும் 3 வது இடத்தில் இறங்குவது அவசியமா என்ற கேள்வி எழுகிறது.
சுழற்பந்து வீச்சாளர்களை அற்புதமாக எதிர்கொள்ளும் ஷிவம் துபே களமிறங்கும் 6வது இடமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆர்சிபி அணிக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பிறகு 9வது ஆட்டக்காரராக களமிறங்கினார் தோனி. 16 பந்துகளில் 30 ரன்களை இவர் சேர்த்தாலும் கூட, இது பலனின்றி போனது. இது அணியாக வெற்றி விட்டுக்கொடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாக விமர்சகர்கள் கூறினர்.
ராஜஸ்தான் அணியின் நிலை என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கேப்டனாக தொடர்வாரா ரியான் பராக்
ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையிலும் முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வி, அணித்தேர்வு உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்புகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னமும் முழுமையாக ஃபார்முக்கு வரவில்லை.
சஞ்சு சாம்சனின் ஆட்டம் ஹைதராபாத் அணிக்கு எதிராக திருப்தி அளிக்கும் விதமாக இருந்தது. துருவ் ஜூரலும் அந்த போட்டியில் 35 பந்துகளில் 70 ரன்களை விளாசியிருந்தார்.
அணிக்கு பின்னடைவு இருந்தாலும் தற்காலிக கேப்டன் ரியான் பராக்கின் கேப்டன்சி குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
களத்தின் நிலை எப்படி?
இந்த சீசனின் கடந்த ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் போது, மொயீன் அலியின் சுழலுக்கு குவாஹாட்டி மைதானம் நல்ல ஒத்துழைப்பு வழங்கியது. சுனில் நரைன் இல்லாத போதும் தமிழ்நாட்டு வீரர் வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சும் எடுப்பட்டது. இதனால் சொந்த மைதானமான சேப்பாக்கம் போன்ற ஒத்துழைப்பு சென்னை அணிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சேப்பாக்கமே சாதகமாக இல்லை என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறியதும் குறிப்பிடத்தக்கது.