பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணி விளையாடும் போட்டியென்றாலே கடைசி ஓவர், கடைசிப்பந்துவரை ரசிகர்களை அமரவைப்பது, ரசிகர்களின் ரத்தக்கொதிப்பை எகிறவைப்பது, எளிய இலக்கை துரத்தக்கூட அதிக ஓவர்கள் எடுத்துக்கொள்வது போன்றவை இந்த சீசனிலும் தொடர்கிறது.
குவஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியின் 11-வது ஆட்டமும் இதுபோன்றுதான் இருந்தது.
கடைசிஓவர், கடைசிப் பந்து வரை ரசிகர்களின் பொறுமையையும், ரத்திக்கொதிப்பையும் எகிறவைத்தனர்.
குவஹாட்டியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 6 ரன்னில் தோல்வி அடைந்தது.
பேட்டிங்கின் போது சிஎஸ்கே அணி இக்கட்டான நேரத்தில் இருக்கும் போது களமிறங்காமல், மிகவும் தாமதமாக தோனி களமிறங்குவது ஏன் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்விகளுக்கு பயிற்சியாளர் பிளமிங் பதிலளித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
ராணாவின் அதிரடி ஆட்டம்
ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்கார்ரான ஜெய்ஸ்வால் 3வது போட்டியாக ஏமாற்றி முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா, சஞ்சு சாம்ஸன் கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்து ஸ்கோரை படுவேகமாக உயர்த்தினர்.
சாம்ஸன் நிதானமாக ஆட, நிதிஷ் ராணா சிஎஸ்கே பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார். ராணாவின் அதிரடியைக் கட்டுப்படுத்த பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை. அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்கள் பவுண்டரி பறந்தது.
வழக்காக 3வது வீரராக ரியான் பராக் களமிறங்குவார், ஆனால், ராணாவை களமிறக்கியதற்கு நல்ல பலன் கிடைத்தது. பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்தது. சாம்ஸன் 20 ரன்னில் நூர் முகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 82 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த கேப்டன் ரியான் பராக், ராணாவுடன் சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ராணா 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதுவரை ஐபிஎல் தொடர்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்காத ராணா, 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் முதல்முறையாக தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். ராணா கணக்கில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.
சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்
அதன்பின் ஆட்டத்தை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் கையில் எடுத்தனர். ராணா இருக்கும் வரை ஸ்கோர் எப்படியும் 200 ரன்களைக் கடந்துவிடும் என்று கருதப்பட்டது.
ஆனால், துருவ் ஜூரெல் 3 ரன்னில் நூர் முகமது பந்துவீச்சிலும், ஹசரங்கா 4 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் கீழ்வரிசை பேட்டர்கள் ஹெட்மெயர்(19 ரன்கள்), ஆர்ச்சர்(0 ரன்), ரியான் பராக்(37 ரன்கள்) என வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.
182 ரன்களை மட்டுமே ராஜஸ்தான் அணியால் சேர்க்க முடிந்தது, ராஜஸ்தான் பேட்டிங் வரிசைக்கு கூடுதலாக இன்னும் 20 ரன்கள் சேர்த்திருக்கலாம். ஆனால், நடுவரிசை பேட்டர்கள் ஏமாற்றினர்.
பட மூலாதாரம், Getty Images
வீணடிக்கப்படும் ஹெட்மெயர்
7-வது வீரராக ஹெட்மெயரை களமிறக்கி ராஜஸ்தான் அவரின் திறமையை குறைக்கிறது, ஹெட்மெயரை 4வது வீரராக நடுவரிசையில் களமிறக்கியிருந்தால் அவர் ஆங்கர் ரோல் எடுத்து சிறப்பாக பேட் செய்திருப்பார். ஆனால் அவரை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கிறது ராஜஸ்தான் அணி.
124 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 52 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சிஎஸ்கே தரப்பில் நூர் அகமது, பதிராணா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
படம் காண்பித்த ஆர்ச்சர்
183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. ஆர்ச்சர் வீசிய மின்னல் வேக பவர்ப்ளே ஓவரில் தொடக்கத்திலேயே ரச்சின் ரவீந்திரா ரன் சேர்க்காமல் ஆட்டமிழந்தார்.
பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணியை ஆர்ச்சர் தண்ணி குடிக்கவைத்தார். ஆர்ச்சரின் ஒவ்வொரு பந்தும் 145 கி.மீ வேகத்தில் கத்தி போல களத்தில் இறங்கியது. வேகப்பந்துவீச்சில் ஹார்டு லென்த்தில் பந்துவீசி, டெஸ்ட் பந்துவீச்சை சிஎஸ்கே பேட்டர்களுக்கு ஆர்ச்சர் காண்பித்தார்.
உண்மையாகவே இதுதான் ஆர்ச்சரின் தனித்தன்மையான பந்துவீச்சு இதுதான். ஆர்ச்சரின் பந்துவீச்சை சிஎஸ்கே பேட்டர்களால் தொடக்கூட முடியவில்லை.
மறுபுறம் தேஷ்பாண்டே தனது பவுன்ஸரால் கெய்க்வாட்டின் முழங்கையில் காயத்தை ஏற்படுத்தினார். சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் ஒட்டுமொத்தமாக கோட்டைவிட்டது. சந்தீப் சர்மா வீசிய 6-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்ததால் 42 ரன்களை பவர்ப்ளேயில் சேர்த்தது. முதல்3 ஓவர்களில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் மட்டுமே சேர்த்து விழிபிதுங்கி இருந்தது.
காமெடியாக மாறிய திரிபாதி
திரிபாதி பேட் செய்யும்போது தோள்பட்டையை குலுக்கி, குலுக்கி பேட் செய்யும் காட்சியையும், ஆர்ச்சரின் பந்துவீச்சில் பலமுறை “பீட்டன்” ஆனதையும் பார்த்த வர்ணனையாளர்கள் கிண்டல் செய்தனர், சமூக வலைத்தளங்களிலும் திரிபாதியின் தோள் குலுக்கல் ஸ்டைல் உடனடியாக மீம்ஸாக மாறியது. 2 போட்டிகளிலும் சொதப்பிய திரிபாதி 23 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
பட மூலாதாரம், Getty Images
திருப்புமுனை விக்கெட்
அடுத்துவந்த ஷிவம் துபே, வந்தவேகத்தில் சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். ஆனால் துபே நீண்டநேரம் நிலைக்கவில்லை, ஹசரங்கா பந்துவீச்சில் அடித்த ஷாட்டை ரியான் பராக் அற்புதமாக கேட்ச் பிடிக்கவே 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது, சிஎஸ்கேயின் நம்பிக்கை பேட்டரை வெளியேற்றியது ராஜஸ்தானுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.
அடுத்துவந்த தமிழக வீரர் விஜய் சங்கர் ஒரு சிக்ஸர் உட்பட 9 ரன்களுடன் ஹசரங்காவின் கூக்ளி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய கெய்க்வாட் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜா, கெய்க்வாட் கூட்டணி மெல்ல அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர்.
ஆனால், ஹசரங்கா பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து கெய்க்வாட் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்தாலும் தோனி இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள் இருந்தனர். கடந்த போட்டியில் 9-வது வீரராக தோனி களமிறங்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் அவர் 7-வது வீரராக் களமிறங்கினார்.
பரபரப்பை ஏற்படுத்திய தோனி
கெய்க்வாட் ஆட்டமிழந்த போது சிஎஸ்கே வெற்றிக்கு 25 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், தோனி, ஜடேஜா கூட்டணி அதை 12 பந்துகளில் 39 ரன்களாகக் குறைத்தனர்.
18-வது ஓவரை வீசிய தீக்ஷனா பவுண்டரி இல்லாமல் பந்துவீசி சிஎஸ்கேவுக்கு சிக்கலை ஏற்படுத்தினார் ஆனால், தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில் தோனி 2 சிக்ஸர் பவுண்டரி என 19 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார்.
கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா கடந்த சீசனில் சிஎஸ்கே அணியை டிபெண்ட் செய்ததால் அவரே இந்தமுறையும் பந்துவீசினார். அது மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சை தோனி எளிதாக ஆடிவிடுவார் என்பதால் சந்தீப் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
சந்தீப் வீசிய 2வது பந்தில் தோனி அடித்த ஷாட்டை ஹெட்மெயர் கேட்ச் பிடிக்கவே 16 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார். அடுத்துவந்த ஓவர்டன் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கவே, அதன்பின் அடிக்க முடியாமல் சிஎஸ்கே 6 ரன்னில் தோல்வி அடைந்தது. ஜடேஜா 32 ரன்களிலும், ஜேமி ஓவர்டன் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
முதல் வெற்றிக்காக காத்திருந்தோம்
வெற்றிக்குப்பின் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறுகையில் ” இந்த வெற்றிக்காக நீண்டநேரம் காத்திருந்தோம். 20 ரன்கள் குறைவாகவே சேர்த்தோம். நடுப்பகுதியில் விரைவாக விக்கெட்டை இழந்ததுதான் இதற்கு காரணம். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம்,. கடந்த 2 ஆட்டங்களும் எங்களுக்கு கடுமையானதாக இருந்தது, ஆனால்,அந்தத் தோல்விகளை மறந்துவிட்டு, புத்துணர்ச்சியுடன் இந்த ஆட்டத்தை எதிர்கொண்டோம், அனைவரின் கூட்டுழைப்பால் வெற்றி கிடைத்தது. சூழலுக்கு ஏற்ப பந்துவீச்சை மாற்றினோம், ஆர்ச்சர் சிறப்பாக பந்துவீசினார், பீல்டிங்கும் எங்களிடம் இன்று சிறப்பாக இருந்தது, எங்களின் பீல்டிங் பயிற்சியாலர் திஷாந்துடன் நீண்ட பயிற்சி எடுத்ததற்கு பலன் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இதுதான் உண்மையான ஆர்ச்சர்
இந்த சீசன் தொடங்கியதிலிருந்து அதிகமாக ரன் கொடுக்கப்பட்டு பந்துவீச்சில் வறுத்தெடுக்கப்பட்டவர் ஜோப்ரா ஆர்ச்சர். ஒருகாலத்தில் தனது மின்னல்வேகப்பந்துவீச்சால் உலக அணிகள அலறவிட்ட ஆர்ச்சரை இந்த சீசன் தொடக்கத்தில் அவரை கண்ணீர்விட வைத்தனர்.
ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் தன்னுடைய பந்துவீச்சு தரம் என்ன என்பதையும், கிளாசிக் ஆர்ச்சர் யார் என்பதையும் வெளிப்படுத்தினார். ஆர்ச்சர் வீசிய 3 ஓவர்களும் அவரின் பந்துவீச்சு வேகம் சராசரியாக மணிக்கு 145கி.மீக்கு குறையவில்லை.
ஆர்ச்சரின் டெஸ்ட் பந்துவீச்சு துல்லியம், ஹார்டு லென்த்தை சமாளிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், திரிபாதி இருவருமே திணறினர். ஆர்ச்சர் பந்துவீசியது மட்டும்தான் தெரிந்தது, ஆனால், பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றுவிடும், சிஎஸ்கே பேட்டர்கள் இருவரும் வேடிக்கை பார்க்க வேண்டும் அல்லது டிபெண்ட் செய்ய வேண்டிய நிலைதான் இருந்தது.
தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா தரமான வேகப்பந்துவீச்சுக்கு இணைகொடுக்காமல் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் ஆர்ச்சரின் பந்துவீச்சு சிஎஸ்கே பேட்டர்களுக்கு வேடிக்கை காட்டியது. ஆனால், ஆர்ச்சருக்கு நேற்று முழுமையாக ஓவர்களும் கொடுக்காமல் 3 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது, 3 ஓவர்கள் வீசிய ஆர்ச்சர் ஒரு மெய்டன் 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
சிஎஸ்கே தோல்விக்கான காரணங்கள்
- சிஎஸ்கே அணியின் நேற்றைய தோல்விக்கு முக்கியமான காரணம் அணியின் தேர்வுதான். குறிப்பாக திரிபாதிக்குப் பதிலாக டேவான் கான்வேயை தொடக்க வீரராக களமிறக்கி இருக்கலாம்.
- வேகப்பந்துவீச்சில் எதிரணியை மிரட்டும் அளவுக்கு நல்ல தரமான வேகப்பந்துவீச்சாளர்களை சேர்க்க வேண்டும். அன்சுல் கம்போஜ் உள்நாட்டில் சிறப்பாக பந்துவீசியவர் அவருக்கு இன்னும் வாய்ப்பளிக்கவில்லை.
- ராஜஸ்தான் அணியில் நேற்று இருந்த பீல்டிங் தரம் சிஎஸ்கேயிடம் இல்லை. இதைத்தான் கேப்டன் ருதுராஜும் பேட்டியில் குறிப்பிட்டார்.
- நடுப் பகுதியில் ஷிவம் துபே என்னும் ஒற்றை பேட்டரை மட்டுமே பெரிய ஷாட்களுக்கு சிஎஸ்கே நம்பி இருக்கிறது.
- சன்ரைசர்ஸ் அணியில் அனிகேத், அன்சாரி என இரு முத்துகளை கண்டெடுத்துள்ளது. அதுபோல் சிஎஸ்க அணியும் இளம் வீரர்களை கண்டுபிடிக்க வாய்ப்பளிக்கலாம்.
- சிஎஸ்கே அணி தொடர்ந்து அஸ்வின், ஜடேஜா, ஷிவம் துபே, பதிராணா, என்று ஒரு மாதிரியான வீரர்களையே களமிறக்குவது எதிரணியின் வெற்றியை மிகவும் எளிதாக்கிவிடும். இந்த பேட்டர்களுக்கு எவ்வாறு பந்துவீசி விக்கெட் வீழ்த்தலாம் என்பதும், இவர்களின் பந்துவீச்சை எவ்வாறு விளையாடலாம் என்றும ஹோம்ஓர் செய்வது எதிரணிக்கு எளிது. எதிரணி ஊகிக்க முடியாத வகையில் பேட்டிங் வரிசையையும், பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்த வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
2018 முதல் 180 ரன்னுக்கு மேல் சிஎஸ்கே சேஸ் செய்ததில்லை
கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப்பின் சிஎஸ்கே அணி சேஸிங்கில் 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ததில்லை என்பது நேற்று உறுதியானது. 180 ரன்களுக்கு மேல் உள்ள இலக்குகளை சேஸிங் செய்த கடைசி 9 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோற்றுள்ளது.
இந்த சீசனில் சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் சந்தித்கும் 2வது தோல்வி, புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. ராஜஸ்தான் அணி இந்த சீசனில் பெறும் முதல் வெற்றியாகும், இருப்பினும் 8வது இடத்தில் இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
தோனி தாமதமாக களமிறங்குவது ஏன்?
இந்த ஐபிஎல் சீசனில் தொடக்கம் முதலே, பேட்டிங்கில் தோனி மிகவும் தாமதமாக களமிறங்குவது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. ஆர்சிபிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 13-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த போது, ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறக்கிவிட்டு தோனி 9வது வீரராக களமிறங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்றைய ஆட்டத்திலும் கூட, 12-வது ஓவரில் விஜய்சங்கர் 4-வது விக்கெட்டுக்கு ஆட்டமிழந்த போது தோனி களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ரவீந்திர ஜடேஜா களமிறங்கி கேப்டன் ருதுராஜூடன் ஜோடி சேர்ந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷர், மேட்ச் வின்னர் என்று பெயரெடுத்த தோனி, சிஎஸ்கே அணிக்குத் தேவையான நேரத்தில் களமிறங்காமல் கடைசி நேரத்தில் களம் காண்பது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இதற்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய தோல்விக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் விடை கிடைத்தது.
பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங், தோனி தாமதமாக களமிறங்குவது குறித்து விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், “அவரது உடலும் முழங்கால்களும் முன்பு போல் இல்லை. அவரால் நன்றாக நகர முடிகிறது. ஆனால், அவரால் தொடர்ந்து 10 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்ய முடியாது. எனவே அவர் நமக்கு என்ன கொடுக்க முடியும் என்பதை அன்றைய தினம் மதிப்பிடுவார். ஆட்டம் சமநிலையில் இருந்தால், அவர் சற்று முன்னதாகவே செல்வார். மற்ற சமயங்களில் அவர் மற்ற வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார்.” என்றார்.
அதற்காக, 43 வயதான தோனியை அணியில் தொடர்ந்து தக்க வைப்பதற்கான வழிகளை சிஎஸ்கே நிர்வாகம் கண்டுபிடித்து வருகிறது என்று அர்த்தமல்ல என்றார் ஃப்ளெமிங். “கடந்த ஆண்டும் நான் சொன்னேன், அவர் எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்க ஒரு வீரர். தலைமைத்துவம் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன் கொண்ட அவர் சிறப்பானவர். 10 ஓவர்கள் களத்தில் பேட்டிங் செய்வது என்பதை அவர் ஒருபோதும் செய்ததில்லை. சுமார் 13-14 ஓவர்களில் ஆட்டத்தின் நிலைமையைப் பொருத்து அவர் களமிறங்க விரும்புகிறார்” என்று பிளமிங் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.