நடப்பு ஐ.பி.எல் தொடரின் 62வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் வெற்றி பெற சென்னை அணி 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 200 ரன்களுக்கு மேல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20 ரன்கள் குறைவாகவே எடுத்தது சென்னை அணி.
இந்த ஸ்கோரை 17.1 ஓவரிலேயே விரட்டிப்பிடித்த ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பவர்பிளேயில் இரண்டாம் ஓவருக்கு உள்ளாகவே சென்னை அணி கான்வே, உர்வில் என இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் விக்கெட் இழப்பை தடுக்க அஸ்வினை களம் இறக்கியது சென்னை அணி.
ஒரு புறம் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் ஆயுஷ் மாத்ரே மறுமுனையில் அதிரடியாக ஆட்டத்தைத் தொடர்ந்தார். அஸ்வினும் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாச சென்னை அணியின் ரன்ரேட் முன்னேறியது. துஷார் தேஷ்பாண்டே வீசிய ஆறாவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசிய மாத்ரே பெரிய ஷாட் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பவர்பிளேயில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது தான்.
அதனைத் தொடர்ந்து அஷ்வின், ஜடேஜா என இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் 78 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது சென்னை அணி. ஆனால் டெவால்ட் பிரீவிஸ் அதிரடியைத் தொடர்ந்தார். அதன் பின்னர் டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ஷிவம் துபே இடையே 59 ரன்களுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. சென்னை அணியின் ரன்ரேட்டும் சீராகவே இருந்து வந்தது. 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த பிரீவிஸ் பெரிய ஷாட் அடிக்க முயன்று ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் சென்னை அணியின் ஆட்டம் மந்தமடைந்தது. ஹசரங்காவின் ஓவரில் ஷிவம் துபேவும் ரியான் பராக் ஓவரில் தோனியும் சிக்ஸர் அடித்தனர். ஒரு கட்டத்தில் சென்னை அணி 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ராஜஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 14 வயது சூர்யவன்ஷி தனது இயல்பான வேகத்தில் ஆடவில்லை என்றாலும், 33 பந்துகளில் 57 ரன்களைக் குவித்தார். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கேமியோ ஆடிய துருவ் ஜுரல் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் 17.1 ஓவர்களில் அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது. சிக்சர் அடித்து ஜுரல் போட்டியை முடித்து வைத்தார்.
கடந்த ஞாயிறு அன்று இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 200 ரன்கள் சேஸ் செய்யப்பட்டதால் இன்றைய ஆட்டம் அதிக இலக்கு கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஒரு வார இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் சென்னை அணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற இருந்த உள்ளூர் போட்டி டெல்லிக்கு மாற்றப்பட்டது. இந்த தொடரின் தொடக்கத்தில் நடைபெற்ற சி.எஸ்.கே ராஜஸ்தான் இடையேயான போட்டி இறுதி ஓவர் வரை சென்று ஆறு ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது.
இரு அணிகளும் நடப்பு தொடரில் இருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில் இந்தப் போட்டி நடைபெற்றது. 13 போட்டிகளில் 3 வெற்றி 10 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சி.எஸ்.கே. அதே சமயம் 14 போட்டிகளில் 4-ல் வெற்றி, 10-ல் தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது ராஜஸ்தான் அணி.