“இந்திய வீரர் இப்படி அடிக்க முடியுமா? இவர்களைப் போன்று விளையாட நானும் இனி மசாலா டீ குடிக்கப் போகிறேன்.”
அசுதோஷ் ஷர்மாவின் விளையாட்டைப் பார்த்துவிட்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியைச் சேர்ந்த ஃபாஃப் டுப்ளெசி கூறிய வார்த்தைகள் இவை. அனுபவம் மிக்க டி20 ஆட்டக்காரரான டுப்ளெசி இந்த வார்த்தைகளை சாதாரணமாக எண்ண முடியாது.
“இந்திய வீரர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள், பந்தை எளிதாக அடிக்கிறார்கள் என்பதை ஒரு வெளிநாட்டு வீரராக நான் கவனிக்கிறேன். விசாகப்பட்டினம் மைதானம் பேட்டிங்குக்கு எளிதானது அல்ல. ஆனால், பின் வரிசையில் களமிறங்கிய இரண்டு இளைஞர்கள் (அசுதோஷ் ஷர்மா மற்றும் விப்ராஜ் நிகம்), அவர்கள் உள்ளே வந்த விதம் மற்றும் சிரமமின்றி பவுண்டரிகளை அடித்தது நம்ப முடியாததாக உள்ளது,” என்கிறார் டுப்ளெசி.
அசுதோஷ் ஆடிய இந்த இன்னிங்ஸ் இன்னும் நீண்ட நாட்களுக்கு நினைவில் வைக்கப்படும், என்று விசாகப்பட்டினம் போட்டிக்குப் பின்னர் சுனில் கவாஸ்கர் ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
“முதல் பந்தில் இருந்தே, பந்தை பேட்டின் நடுவில் வாங்கி சரியான ஷாட்டுகளை அவர் ஆடினார். வழக்கமாக பவுண்டரி எல்லையைத் தாண்டி விழும் சிக்சர்கள் அல்ல அவை. ரசிகர்கள் இருக்கும் ஸ்டாண்டுகளில் மீண்டும், மீண்டும் பந்துகள் விழுந்தன” எனத் தனது வியப்பை வெளிப்படுத்துகிறார் கவாஸ்கர்.
அசுதோஷின் அனல் பறந்த ஆட்டம்
பட மூலாதாரம், Getty Images
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் 210 ரன்கள் இலக்கை துரத்திக் கொண்டிருந்தது டெல்லி அணி. 6.4 ஓவர்களில் வெறும் 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தது.
கணினி கணிப்புகளின்படி டெல்லி அணி வெல்வதற்கு சுமார் 1 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. அப்போது களத்தில் நின்ற விப்ராஜ் நிகம் மற்றும் அசுதோஷ் ஷர்மா அதிரடி ஆட்டமென்றால் என்னவென்று காட்டினர்.
வெறும் 15 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார் அறிமுக வீரர் நிகம். மறுபுறம் தான் சந்தித்த பந்துகளையெல்லாம் பவுண்டரியை நோக்கி விரட்டத் தொடங்கினார் அசுதோஷ், அதுவும் பவுண்டரி எல்லை பார்வையாளர் மாடங்களில் இருப்பதாக எண்ணிக்கொண்டு அனைத்துப் பந்துகளையும் அங்கேயே விரட்டினார்.
இருவரும், 13 முதல் 16வது ஓவர் வரை, 15 ரன்களுக்கு குறையாமல் அடித்தனர். பிரின்ஸ் யாதவ் வீசிய 16வது ஓவரில் 20 ரன்களை குவித்தனர். 17வது ஓவரின் முதல் பந்தில் விப்ராஜ் ஆட்டமிழந்தாலும் ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் இருந்த அசுதோஷ் வெற்றி இலக்கை சிக்சர் அடித்து நிறைவு செய்தார்.
விப்ராஜ் ஆட்டமிழந்த பின்னர் எதிர்முனையில் பவுலர்கள் இருந்த போதிலும் அசராமல் ஸ்டிரைக்கர் எண்டை கைப்பற்றுவதிலேயே அசுதோஷ் குறியாக இருந்தார்.
இது பற்றிப் பேசிய அசுதோஷ், “கடைசி பந்து வரை நான் ஆடினால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. என்ன விதமான ஷாட்களை விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன், வலையில் பயிற்சி எடுத்த அதே ஷாட்களை ஆடினேன்,” என்றார்.
அசாத்திய ஆட்டம் சாத்தியமானது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
அசுதோஷ், கடந்த ஆண்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடியபோதும், பல அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் அவரால் விளையாட்டை முடித்து வைக்க முடியவில்லை.
திங்கள் கிழமை நடைபெற்ற போட்டி முடிந்த பின்னர் பேசிய அவர், “கடந்த ஆண்டின் சீசனிலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அப்போது இரண்டு மூன்று போட்டிகளில், அணியை இலக்குக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தினேன். ஆனால் முடிவில் வெற்றி கிட்டாமல் போனது. இந்த வருடம் முழுவதும் நான் அதில் கவனம் செலுத்தினேன்.
போட்டியை நான் முடித்து வைப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன். உள்ளூர் போட்டிகளிலும்கூட போட்டியை முடிவை நோக்கி எடுத்துச் செல்வதில் கவனம் செலுத்தினேன். அதனால்தான் இந்த மிகப்பெரிய அரங்கில் என்னால் வெற்றி பெற முடிந்தது,” என்று கூறியிருக்கிறார்.
எதிர்முனையில் ஆடிய குல்தீப் யாதவின் விக்கெட் ரன் அவுட்டால் பறிபோன போதும், மொகித் ஷர்மா சிங்கிள் ரன் தட்டி ஸ்டிரைக்கர் முனையை மாற்றிக்கொடுத்த போதும், நிதானமாகவே செயல்பட்ட அசுதோஷ் சிக்சர் மூலம் வெற்றிக்கான இலக்கை எட்டினார்.
இதன் பின்னர், அணியின் பயிற்சியாளர் கெவின் பீட்டர்சனை நோக்கி சுவிட்ச் ஹிட் போஸ் கொடுத்து நன்றி தெரிவித்தார். மேலும் பேட்டியின்போது பஞ்சாப் அணியில் தன்னுடன் விளையாடிய ஷிகர் தவான்தான் தன்னுடைய குரு எனக் குறிப்பிட்டதோடு, அவருக்கு நன்றியும் தெரிவித்தார் அசுதோஷ்.
ஏலத்தில் தவறவிட்ட பெங்களூரு அணி
பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் பேசிய அசுதோஷ் ஷர்மாவின் சகோதரரான அனில் ஷர்மா, இந்தோரில் உள்ள மத்திய பிரதேச கிரிக்கெட் அகாடமியில் 12 வயதில் சேர்ந்த அசுதோஷ் ஷர்மா கிரிக்கெட்டையே தனது வாழ்க்கையாகத் தேர்வு செய்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும், “தனது தேவைகளுக்காக வீட்டைச் சார்ந்திருக்காமல், சுயமாகவே செலவுகளை எதிர்கொண்டு முதலில் ரயில்வே அணிக்கும், தற்போது ஐபிஎல் அணிகளுக்கும் விளையாடி சாதித்துக் கொண்டிருக்கிறார் அசுதோஷ்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடியபோதும், மெகா ஏலத்துக்கு முன்னதாக அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதிரடி ஃபினிஷரான இவருக்கு ஏலத்தில் கடும் போட்டி நிலவியது.
ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ஆகிய அணிகள் ஏலத்தில் போட்டிபோட்ட போதும், 1.5 கோடியில் பெங்களூரு அணி போட்டியில் இருந்து விலகியது. அதிலிருந்து போட்டியில் இணைந்துகொண்ட டெல்லி அணி 3.8 கோடி ரூபாய்க்கு அசுதோஷை வாங்கியது.